தீபாவளி பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு உண்டா? அதிர்ச்சி தரும் உண்மை!

பணமாகவும் பொருளாகவும் பெறும் தீபாவளிப் பரிசுகளுக்கு எவ்வளவு வரி செலுத்தவேண்டும்?
தீபாவளி போனஸ் - Diwali gift tax
தீபாவளி போனஸ் - Diwali gift tax
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

Venkataraman Ramasubramanian (வெங்கடராமன் ராமசுப்ரமணியன்) பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். தமிழில் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்க் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம், யோகாவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையில் துணைப் பேராசிரியராக சேவை செய்து வருகிறார். எழுத்துக்கலை, தனிமனித நிதி, தமிழ் ஆர்வலர்.

Updated on: 

தீபாவளிக்கு உங்களுக்கு உங்கள் நிறுவனம் தீபாவளி போனஸ் அல்லது தீபாவளி பரிசு அளிக்கவுள்ளதா? அது சம்பந்தமாக நீங்கள் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உங்களுக்கு இந்தப் பதிவு அதனைத் தெளிவுபடுத்தும்.

பெற்றோர், மனைவி, குழந்தைகள் போன்ற நெருங்கிய உறவினர்களிடமிருந்து பரிசு (பணமாகவோ, பொருளாகவோ) பெறுவது, திருமணத்தின் பொழுது பரிசு(பணமாகவோ, பொருளாகவோ) பெறுவது போன்ற சந்தர்ப்பங்களில் பரிசுகளுக்கு அரசாங்கம் வரி விதிப்பதில்லை. ஆனால், தீபாவளிப் பரிசு என்பது இத்தகைய வரிவிலக்குகளில் வராது.

தீபாவளிக்கு கிடைக்கும் பரிசு இரண்டு விதமாக இருக்கலாம்.

1. பணமாகப் பரிசு பெறுவது

2. பொருளாகப் பரிசு பெறுவது

இவற்றிற்கு கணக்கிடப்படும் வரி வித்தியாசப்படும். அதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பணமாகப் பரிசு பெறுவது - பணமாக அல்லது பணத்திற்கு சமமான முகாந்திரத்தில் பெறுவது (காசோலை, வங்கியில் நேரடியாக பணப்பரிவர்த்தனை (நெஃப்ட்(NEFT), ஐஎம்பிஎஸ் (IMPS) போன்றவை), வங்கியின் வரைவோலை (Demand Draft) போன்றவை இதில் அடங்கும்.

இத்தகைய பணம் உங்களது சம்பளத்துடன் சேர்த்து வருமானமாக கணக்கிடப்படும். சம்பளத்திற்கு எவ்வாறு வரி கட்டுவீர்களோ அதனைப் போலவே இந்த பணத்திற்கும் வரி கட்டுவீர்கள்.

தீபாவளி போனஸ் - Diwali gift tax
தீபாவளி போனஸ் - Diwali gift tax

சம்பளத்தைப் போலவே, உங்களுக்கு இந்தப் பரிசுப் பணத்திற்கும் மாதாந்திர சம்பளத்தின்போது தோற்றுவாயில் கழிக்கப்படும் வரி (Tax Deducted At Source - TDS) வரி படித்தம் செய்யப்பட்டு, மீதி பரிசுப் பணம் கொடுக்கப்படும். நிதி ஆண்டின் இறுதியில் வருமான வரி செலுத்தும் பொழுது, அதிகமாக வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் அதிகமாக செலுத்திய வரிப் பணத்தைத் திரும்ப பெறலாம்.

பணம் நேரடியாக இல்லாமல் பரிசாக (மின்னணு உபகரணம், இனிப்புப் பொட்டலம், தங்க நாணயம் போன்றவை) அதாவது பொருளாகப் பெறுவது.

இத்தகைய நேரடியாக பணம் இல்லாத பரிசுகளுக்கு ஒரு நிதி ஆண்டில் 5000 ரூபாய் வரை வரி விலக்கு உண்டு. இது மொத்தமாக அந்த நிதியாண்டில் கொடுக்கப்பட்ட பரிசுகளின் மொத்தத் தொகைக்கு ஏற்ப வரி கணக்கிடப்படும். உதாரணமாக, 1000 ரூபாய் மதிப்புடைய இனிப்புப் பொட்டலம் 5 முறைகள் வழங்கப்பட்டால் அவற்றுக்கு வரி கிடையாது.

ஆனால் ஆறு முறைகள் வழங்கப்பட்டால், 6ஆவது முறை வழங்கப்படும் 1000 ரூபாய்க்கு வரி உண்டு. ஏனென்றால் அது அந்த நிதியாண்டின் 5000 ரூபாய் வரையறையைத் தாண்டிவிட்டது.

இதையும் படியுங்கள்:
வங்கியில் அதிக பணப்பரிவர்த்தனை செய்றீங்களா? வருமான வரி நோட்டீஸ் வராமல் தப்பிப்பது எப்படி?
தீபாவளி போனஸ் - Diwali gift tax
இதையும் படியுங்கள்:
தீபாவளி போனஸ் போட்டாச்சா? அந்த பணத்தை எங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் என பாருங்கள்!
தீபாவளி போனஸ் - Diwali gift tax

எனவே, தீபாவளிக்கு கிடைக்கும் பணத்தைச் சம்பளத்தைப் போலவே கருதி செலவழியுங்கள். அதனை உபரிப் பணமாக கருதவேண்டாம். ஏனென்றால், அதுவும் உங்களது சம்பளத்தைப் போலவே வரி விதிப்பில் கணக்கிடப்படுகிறது.

மேலும், இது சமீபத்தில் வந்த வரி விதிப்பு மாற்றம் அல்ல. வருமான வரி விதி 1961ஆம் ஆண்டு விதியிலேயே இத்தகைய தீபாவளி போனஸ் பணம் சம்பளத்துடன் சேர்ப்பதென்பது உள்ளது.

தீபாவளி போனஸ் பணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வோம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com