

வரிவரியான பட்ஜெட் என்றால் என்ன ?
வரிவரியான பட்ஜெட் ஆங்கிலத்தில் Line item budget என்றழைக்கப்படுகிறது. இங்கு பட்ஜெட் வரிக்கு வரி சரிபார்க்கப்படுகிறது. இங்கு 50/30/20 பட்ஜெட் முறையைப் போல், தேவைகள், வேண்டல்கள், சேமிப்புகள் என்று செலவுகள் மேலோட்டமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றுக்குள் செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பதில்லை. இங்கு ஒவ்வொரு வரிக்கும் தனித்தனியாக பட்ஜெட் போடப்படுகிறது. உதாரணமாக, வெளியே உணவருந்துவது, திரையரங்கம் செல்வது போன்ற செலவுகள் வேண்டல்கள் என்ற மேலோட்டமான வகைக்குள் ஒதுக்கப்படுவதில்லை.
அவை ஒவ்வொன்றுக்குமே வரி வரியாக பட்ஜெட் போடப்படுகிறது. வெளியே உணவருந்துவது, திரையரங்கம் செல்வது என்று தனித்தனியாக பட்ஜெட் போடப்படும்.
ஆங்கிலத்தில், Devil is in the Details என்று கூறுவார்கள். அதாவது, சாத்தான் விவரங்களில் உள்ளது என்று பொருள். எனவே, மேலோட்டமாக வகைகளைப் பிரிப்பதை விட, விவரங்களாகப் பிரிக்கும் போது, செலவுகள் எப்படி நிகழ்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அவைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. நிதிக்குறிக்கோள்களை அடைய முடிகிறது. இந்த வரிவரியான பட்ஜெட் முறை அரசாங்கம், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள் போன்றவற்றால் பயன்படுத்தப்படுகின்றன. இது தனிமனித நிதிக்கும் பயனளிக்கக் கூடிய அருமையானதொரு பட்ஜெட் முறை.
வரிவரியான பட்ஜெட் போடுவது எப்படி?
1. ஒரு மாதத்திற்கான வரவுகளை வரவு செலவு கணக்கு நோட்டு புத்தகத்தில் வரிவரியாகப் பட்டியலிட வேண்டும்
2. ஒரு மாதத்திற்கான செலவுகளை வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் வரிவரியாகப் பட்டியலிட வேண்டும்
3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா , காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை என்று வகைகள் வரும். இந்த வகைகளை வரி வரியான பட்ஜெட்டில் இன்னும் எவ்வளவு விவரமாகப் பிரிக்க முடியுமோ பிரிக்க வேண்டும். உதாரணமாக, பொழுதுபோக்கு என்ற வகையை வெளியே உணவருந்துவது, திரையரங்கம் செல்வது என்று விவரமாகப் பிரிக்க வேண்டும். கடன் என்பதை வீட்டுக் கடன், வாகனக் கடன், நண்பரிடம் வாங்கிய கடன் என்று விவரமாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு வரியாக படித்து, அவைகளை விவரமாக வகைப்படுத்த வேண்டும். முடிந்த அளவிற்கு விவரமான வகைகளில் பட்ஜெட் போட வேண்டும். மேலோட்டமான வகைகளில் பட்ஜெட் போடக்கூடாது.
இப்போது, எந்த எந்த விவரமான செலவு வகைகளைக் கட்டுப்படுத்த முடியுமென்று பார்த்து, அவற்றில் ஒதுக்கப்பட்ட பணத்தைக் குறைத்து, அந்தப் பணத்தை நிதிக் குறிக்கோள்களுக்கு ஒதுக்க வேண்டும். இங்கு வரி வரியாக பட்ஜெட் போடுவதால், பணம் எப்படி செலவாகிறது என்ற விழிப்புணர்வு அதிகரிக்கிறது. செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிதாகிறது.
4. மாத இறுதியில் ஏதேனும் பட்ஜெட்டை மீறி தவறு நடந்திருந்தால் அதற்கு ஏற்றவாறு அடுத்த மாத பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நிதிக்குறிக்கோள்களை அடைந்த பிறகு அதற்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, தனிநபர் கடனை அடைப்பது என்ற நிதிக் குறிக்கோளினை அடைந்து விட்டால், அதற்கு ஒதுக்கிய பணத்தை மற்ற நிதிக்குறிக்கோள்களுக்குத் திருப்ப வேண்டும்.
வரிவரியான பட்ஜெட் நிறைகள் யாவை?
எளிமையான முறை - இந்தப் பட்ஜெட் பொடுவதற்கு ஒரு நோட்டுப் புத்தகம் போதுமானது.
தெள்ளத் தெளிவான முறை - இங்கு பணம் எப்படி செலவாகிறது என்பது தெளிந்த நீரோடைப் போல தெள்ளத் தெளிவாக தெரிவதால், செலவுகளைக் குறைப்பது எளிதாகிறது
பொறுப்புணர்வு அதிகரிக்கிறது - இங்கு வரி வரியாக பட்ஜெட் போடப்படுவதால் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது.
நிதிக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது - வரிவரியாகப் போடப்படும் பட்ஜெட் செலவுகளைப் பெருமளவு குறைக்க உதவுகிறது. சேமித்த பணம், நிதிக்குறிக்கோள்களுக்கு ஒதுக்கப்படுகிறது. நிதிக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது.
வரிவரியான பட்ஜெட் குறைகள் யாவை?
அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது - வரிவரியாக பட்ஜெட் போடப்படுவதால், மற்ற பட்ஜெட் முறைகளை விட, அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது. பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்யும் போதும், இத்தகைய மெனக்கெடல் தேவைப்படுகிறது.
மாறக்கூடிய வருமானத்தை உடையவர்களுக்கு கடினமானது - மாதாந்திர வருமானம் உடையவர்களுக்கு, வரி வரியாக பட்ஜெட் போடுவது எளிமையானது. ஆனால், மாதாமாதம் மாறக்கூடிய வருமானம் உடையவர்களுக்கு வரிவரியான பட்ஜெட் போடுவது கடினமானது.
வரிவரியான பட்ஜெட் மேம்படுத்துவது எப்படி?
வரிவரியான பட்ஜெட்டினை மேம்படுத்த எவ்வளவு தூரம் விவரமாக பட்ஜெட் போடுகிறோமா, அவ்வளவு தூரம் நல்லது. அதன் மூலம், செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது எளிதாகிறது.
வரி வரியான பட்ஜெட் பயன்படுத்தி நீங்கள் நிதிக் குறிக்கோளினை அடைய வாழ்த்துகள்.