

முன்னுரிமை பட்ஜெட் என்றால் என்ன?
முன்னுரிமை பட்ஜெட் ஆங்கிலத்தில் Priority Based Budgeting என்றழைக்கப்படுகிறது. இது பல்வேறு அரசாங்க நிதி திட்டமிடலில் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முன்னுரிமையான நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முன்னுரிமை பட்ஜெட் உதவுகிறது. அரசு நிதிக்கு மட்டுமன்றி தனிமனித நிதிக்கும் முன்னுரிமை பட்ஜெட் மிகவும் உதவிகரமாக இருக்கும். தனிமனிதனின் முன்னுரிமை நிதிக் குறிக்கோள்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமையின்படி நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ஒதுக்குவதன் மூலம் தனிமனிதனின் முன்னுரிமையான நிதிக் குறிக்கோள்களுக்குப் போதிய நிதி கிடைக்கிறது. வாழ்க்கையில் தனிமனிதனின் மன உளைச்சல் குறைகிறது. இந்த முன்னுரிமையானது தனி மனிதனுக்கு தனி மனிதன் மாறுபடும். ஒரு மனிதனுக்கு கடன்களை கட்டி முடிப்பது முன்னுரிமையாக இருக்கலாம். இன்னொரு மனிதனுக்கு வருடா வருடம் சுற்றுலா செல்வது முன்னுரிமையாக இருக்கலாம். இவ்வாறு முன்னுரிமைகளை ஒட்டி பட்ஜெட் அமைக்கப்படுவதால் அந்த முன்னுரிமை நிதி குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது.
முன்னுரிமை பட்ஜெட் போடுவது எப்படி?
1. ஒரு மாதத்திற்கான வரவுகளை வரவு செலவு கணக்கு நோட்டு புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
2. ஒரு மாதத்திற்கான செலவுகளை வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்
3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா , காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை
4. நிதிக்குறிக்கோள்களைப் பட்டியலிட வேண்டும். கடன்களை அடைத்து முடிப்பது, வருடாந்திர சுற்றுலா செல்வது, குழந்தைகளின் மேல்படிப்பு, குழந்தைகளின் திருமணம், நிம்மதியான ஓய்வு காலம் என பட்டியலிட்டு, முன்னுரிமையின்படி வரிசைப்படுத்த வேண்டும். மிகவும் முன்னுரிமையான குறிக்கோளுக்கு 1 என்று குறிக்க வேண்டும். அடுத்த முன்னுரிமையான குறிக்கோளுக்கு 2 என்று குறிக்க வேண்டும். இவ்வாறு நிதிக்குறிக்கோள்களை முன்னுரிமையின் படி ஒன்றன் பின் ஒன்றாக வரிசை படுத்த வேண்டும்.
5. மாதத்தின் அத்தியாவசிய செலவுகளுக்குப் பணத்தை முதலில் ஒதுக்க வேண்டும். உணவு,உடை, இருப்பிடம், பயன்பாடுகள், தொலைத் தொடர்பு, வாகனங்கள் சார்ந்த செலவுகள் போன்றவை அத்தியாவசியமான செலவுகள். அவைகள் இன்றி வாழ்க்கையை நடத்துவது கடினம்.
அத்தியாவசிய செலவுகள் போக மீதம் உள்ள பணத்தை ஒவ்வொரு முன்னுரிமைக்காக வரிசையாக ஒதுக்கத் துவங்க வேண்டும். இவ்வாறு ஒதுக்கும்போது அந்த முன்னுரிமைக்கு குறைந்தபட்ச தொகை நிச்சயமாக ஒதுக்கியே தீர வேண்டுமென்று ஒருவருக்குத் தோன்றுகிறதோ அதனை ஒதுக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முன்னுரிமை குறிக்கோளுக்கும் குறைந்தபட்சத் தொகையை ஒதுக்கிக் கொண்டே வர வேண்டும். இவ்வாறு ஒதுக்கிக் கொண்டே வந்த பிறகு, மறுபடியும் பணம் மீதமானால் மறுபடியும் முதல் முன்னுரிமையிலிருந்து குறைந்தபட்ச தொகையை ஒதுக்கி கொண்டே வர வேண்டும். பணம் தீரும் வரை, இத்தகைய ஒதுக்குதலைத் தொடர வேண்டும். இவ்வாறு ஒதுக்கும் போது, பின்வரிசையில் வரும் சில முன்னுரிமைகளுக்குப் போதிய பணம் இல்லையென்றால், அந்த முன்னுரிமைகளுக்கு பணம் ஒதுக்க இயலாது, ஏனென்றால், மற்ற முன்னுரிமைகளை அடைவதற்குத்தான் பணம் உள்ளது.
உதாரணமாக ஒருவரது முன்னுரிமைகள் பின்வருமாறு உள்ளதாக கொள்வோம்.
1. கடன்களை அடைப்பது
2. ஓய்வு காலத்திற்கான நிதி ஒதுக்குவது
3. வெளியே உணவருந்துவது
4. வருடாந்திர சுற்றுலா
அவருக்கு அத்தியாவசியமான செலவுகள் போக 20 ஆயிரம் ரூபாய் மீதமாவதாகக் கணக்கில் கொள்வோம். அவர் தனது முன்னுரிமையின்படி பின்வருமாறு குறைந்தபட்ச தொகையினை நிதிக்குறிக்கோள்களுக்கு ஒதுக்குகிறார்.
1. கடன்களை கட்டி முடிப்பது - 5000
2. ஓய்வு காலத்திற்கான நிதி ஒதுக்குவது - 5000
3. வெளியே உணவருந்துவது- 1000
4. வருடாந்திர சுற்றுலா - 4000
இப்போது மறுபடியும் அவருக்கு 5000 ரூபாய் மீதமாகிறது. இந்த 5000 ரூபாயினை அவர் மறுபடி முதல் முன்னுரிமையான கடன்களைக் கட்டி முடிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்.
6. மாத இறுதியில், பட்ஜெட்டைத் தாண்டி ஏதேனும் செலவுகள் நடந்தால், அவை முன்னுரிமை சார்ந்தா இல்லையா என்று பார்த்து அதற்கேற்றவாறு முன்னுரிமை பட்ஜெட்டில் அடுத்த மாதம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஒரு முன்னுரிமையை அடைந்து விட்டால், அந்த முன்னுரிமைக்கு ஒதுக்கியத் தொகையை அடுத்த முன்னுரிமைக்கு அந்த எண்ணை ஒதுக்கி, அடுத்த மாதம் முதல், அதற்கு முன்னுரிமை கொடுத்து, பணத்தை ஒதுக்க வேண்டும்.
முன்னுரிமை பட்ஜெட்டின் நிறைகள் யாவை ?
1. முன்னுரிமையான நிதிக் குறிக்கோள்களுக்குப் போதிய பணம் கிடைக்கிறது. மன உளைச்சல் குறைகிறது.
2. எளிமையான பட்ஜெட் முறை. அத்தியாவசிய செலவுகள், முன்னுரிமைகள் என்று இரண்டே வகைக்குள் பட்ஜெட் அமைகிறது.
3. வாழ்வின் எல்லா அங்கங்களுக்கும் பணம் ஒதுக்கப்படுகிறது. வெளியே உணவருந்துவது, சுற்றுலா போன்ற முன்னுரிமைகளுக்கும் மாதா மாதம் பணம் ஒதுக்கப்படுவதால், வாழ்வின் அங்கங்களை நடத்துவது எளிதாகிறது.
முன்னுரிமை பட்ஜெட்டின் குறைகள் யாவை?
1.சரியான வரிசைப்படுத்துதல் முக்கியம். சுற்றுலா செல்வது போன்ற முன்னுரிமைகளுக்கு பணம் ஒதுக்கி, ஓய்வுகாலத்திற்கு, கடனை அடைத்தல் போன்ற முன்னுரிமைகளுக்கு பணம் ஒதுக்க முடியாவிட்டால், எதிர்கால வாழ்க்கை கடினமாகிவிடும்.
2. சரியான தொகை ஒதுக்குதல் முக்கியம். குறைந்தபட்சத் தொகை ஒதுக்குகிறோம் என்ற பெயரில், குறிக்கோளினை அடைவதற்கு போதிய பணம் ஒதுக்கவில்லையென்றால், குறிக்கோளினை அடைவது கடினமாகிவிடும்.
முன்னுரிமை பட்ஜெட்டினை மேம்படுத்துவது எப்படி?
அதிக முன்னுரிமைகளை வைத்திருக்காமல் குறைந்த முன்னுரிமைகளை வைத்திருப்பதன் மூலம், முன்னுரிமைகளுக்கு அதிக பணம் கிடைக்கும். நிதிக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது.
நீங்கள் முன்னுரிமை பட்ஜெட்டைப் பயன்படுத்தி நிதி சுதந்திரம் அடைய வாழ்த்துகள்.