இந்திய முதலீட்டாளர்களுக்கு தங்கம் என்பது எப்பொழுதுமே ஒரு நம்பகமான சொத்தாக இருந்து வருகிறது. இது பண வீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாகவும், செல்வத்தின் அடையாளமாகவும் உள்ளது. சமீப காலமாக டிஜிட்டல் தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டிற்கான வளர்ந்து வரும் விருப்பத்தை பிரதிபலிப்பதே இந்த மாற்றத்திற்கான காரணம்.
டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?
டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தில் செய்யப்படும் ஒரு வகையான முதலீடாகும். இது நாம் நேரடியாக தங்கத்தை வாங்காமல் ஆன்லைன் தளங்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வதாகும். இது பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் கருதப்படுகிறது. தங்கத்தின் டிஜிட்டல் வடிவமான இதனை ஆன்லைனில் வாங்கலாம். இதனை நேரடி தங்கமாக மாற்றவும் முடியும்.
டிஜிட்டல் தங்கத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?
இது தங்கத்தை சொந்தமாக வைத்திருக்காமல் தங்கத்தில் முதலீடு செய்யும் நவீன முறையாகும். பாரம்பரிய தங்க முதலீடுகளைப் போல் இல்லாமல் இவற்றை வாங்குவதும், விற்பதும், சேமிப்பதும் எளிதான வழியாகும். இந்த வசதியான முதலீட்டில் இவை பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகரிக்கும் பொழுது டிஜிட்டல் தங்கத்தின் மதிப்பும் அதிகரிக்கும். இதனை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம் அல்லது ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றவும் செய்யலாம்.
டிஜிட்டல் தங்கம் 24K தூய தங்கத்தில் முதலீடு செய்வதற்கு வசதியான மற்றும் நெகிழ்வான வழியை வழங்குகின்றன.
அவசர காலங்களில் இது உடனடி பணப்புழக்கத்திற்கு உதவுகிறது. எந்த நேரத்திலும் சந்தை விலையில் தங்கத்தை விற்கலாம்.
திருட்டு பயமோ, லாக்கருக்கு வாடகை தர வேண்டியது போன்ற தொந்தரவுகளோ இல்லாமல் பாதுகாப்பான காப்பீடு செய்யப்பட்ட சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்படுகிறது. அத்துடன் எந்த நேரத்திலும் தங்கமாகவோ அல்லது பணமாகவோ மாற்றும் வசதி உள்ளது.
டிஜிட்டல் தங்க வலைதளங்கள் நிகழ் நேர விலை நிர்ணயத்தை வழங்குகின்றன. இதன் வெளிப்படைத்தன்மை காரணமாக இவற்றில் நம்பிக்கை அதிகரிக்கிறது.
வாங்குவது எப்படி?
டிஜிட்டல் தங்கத்தை பல ஆன்லைன் தளங்கள் விற்கின்றன. அவற்றில் பாதுகாப்பான நம்பகத்தன்மை மிகுந்த ஒன்றை தேர்வு செய்து நம் கணக்கை உருவாக்கலாம். நாம் நம் கணக்கில் பணத்தை செலுத்தி, தங்கத்தை வாங்கலாம். வாங்குவதுடன் அதனை நம் கணக்கில் பாதுகாப்பாக சேமிக்கவும் செய்யலாம்.
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது வசதியாகவும், பாதுகாப்பான சேமிப்பாகவும், எளிதான பணப்புழக்கம் உடையதாகவும், அதன் தூய்மைக்கு சான்றளிக்கப்படுவதால் உத்திரவாதத்துடனும் இருக்கிறது.
வாங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை:
டிஜிட்டல் தங்கம் 24K தங்கத்தை ஆன்லைனில் சிறிய அளவில் வாங்க முடியும். வாங்குவதற்கு முன்பு முதலில் நம் முதலீட்டு இலக்குகளைப் பற்றி தெளிவாக சிந்தித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக முதலீடு செய்ய விரும்பும் தொகையை தீர்மானிக்க வேண்டும்.
பல ஆன்லைன் தளங்கள் டிஜிட்டல் தங்கத்தை விற்கின்றன. வாங்குவதற்கு முன்பு அந்த தளத்தின் நம்பகத்தன்மையை சரி பார்க்க வேண்டியது அவசியம்.
டிஜிட்டல் தங்கம் பாதுகாப்பானதா?
டிஜிட்டல் தங்கத்தின் பாதுகாப்பு நாம் தேர்ந்தெடுக்கும் தளத்தையும், நம் முதலீடுகளை எவ்வாறு கையாளுகிறோம் என்பதையும் பொறுத்தது. பாதுகாப்பான சேமிப்பு வசதிகளுடன் கூடிய தளங்களை ஆராய்ச்சி செய்து முதலீடு செய்யலாம்.
தூய்மை மற்றும் சான்றிதழ்களை சரி பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாங்குவதற்கு முன்பு படித்து தெரிந்து கொள்வது அவசியம். அத்துடன் பாதுகாப்பான கட்டண முறைகளையும் பயன்படுத்தவும்.
பரிவர்த்தனையை பாதுகாக்க எப்பொழுதும் பாதுகாப்பான ஆன்லைன் கட்டண விருப்பங்களையே பயன்படுத்தவும்.