
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பெருகி வந்தாலும், இன்றும் பலர் ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளையே விரும்புகின்றனர். அதே சமயம், வீட்டில் குறிப்பிட்ட அளவு பணத்தை கையிருப்பாக வைத்திருக்கவும் விரும்புகின்றனர். ஆனால், வருமான வரித்துறை கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை விதித்துள்ளது. எனவே, வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வது அவசியம்.
வருமான வரிச் சட்டத்தின்படி, வீட்டில் எவ்வளவு ரொக்கப் பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு நேரடியான வரம்பு எதுவும் இல்லை. ஆனால், அந்தப் பணத்திற்கான ஆதாரத்தை நீங்கள் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அதாவது, அந்தப் பணம் எப்படி வந்தது, அதற்கான வருமான வரி முறையாகச் செலுத்தப்பட்டதா என்பதற்கான ஆவணங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும். வருமான வரிக் கணக்கு தாக்கல் (ITR) மற்றும் பிற முறையான ஆவணங்கள் மூலம் பணத்தின் ஆதாரத்தை நிரூபிக்க முடிந்தால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம். சட்டப்பூர்வமாகச் சம்பாதித்து, முறையாக கணக்கில் காட்டப்பட்ட பணம் என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
வருமான வரித்துறை எப்போது நடவடிக்கை எடுக்கும்?
உங்கள் வீட்டில் அதிக அளவு ரொக்கப் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சரியான ஆதாரத்தை உங்களால் சமர்ப்பிக்க முடியாவிட்டால், வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ளலாம். குறிப்பாக, விசாரணையின் போது பணத்தின் மூலம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்க முடியாவிட்டால். வருமான வரிக் கணக்குகளில் முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டால். பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் சந்தேகத்தை ஏற்படுத்தினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கைகள்: பணத்தின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். வருமான வரிக் கணக்குகள் மற்றும் வரி செலுத்திய விவரங்களை ஆய்வு செய்வார்கள். முறையாக கணக்கில் காட்டப்படாத பணம் கண்டுபிடிக்கப்பட்டால், வரி மற்றும் அபராதமாக 137% வரை வசூலிக்க நேரிடலாம்.
வீட்டில் பணம் வைத்திருப்பது மட்டுமின்றி, ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஒரே நேரத்தில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்தால், வருமான வரித்துறை விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. வங்கியில் ஒரே நேரத்தில் ரூ.50,000க்கு மேல் ரொக்கமாகப் பணம் எடுக்கும்போது, உங்கள் பான் கார்டு விவரங்களை அளிக்க வேண்டும். ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கும்போது, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை அளிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இல்லாமல் ரொக்கப் பரிவர்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.