
மக்கள் பணத்தை சேமிக்க உதவும் வகையில் தபால் நிலையங்கள் பல வகையான சிறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. சேமிப்பு திட்டங்களில் உள்ள பணத்தை பாதுகாக்க ஒரு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி PPF, NSC, RD போன்ற செயல்படாத சிறு சேமிப்பு கணக்குகளை முடக்க தபால் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்களின் நிதிகளைப் பாதுகாக்கவும், அங்கீகரிக்கப்படாத அணுகலை தடுப்பதற்காகவும் தபால் அலுவலகம் சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி தபால் அலுவலகத்தில் உள்ள செயலற்ற (inactive) கணக்குகள் மோசடி செய்பவர்களுடைய இலக்காக மாறாமல் இருப்பதற்காக தபால் அலுவலகம் நீட்டிக்கப்படாத அல்லது மூடப்படாத கணக்குகளை முடக்க முடிவு செய்துள்ளது.
நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத கணக்குகளை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். இதை தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1ஆம் தேதி என வருடத்திற்கு இரண்டு முறை செயலற்ற கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குகிறது.
நீட்டிக்கப்படாத அல்லது மூடப்படாத கணக்குகள் அடையாளம் காணப்பட்ட 15 நாட்களுக்குள் முடக்கப்படும். ஜூலை 15, 2025 அன்று அறிவிக்கப்பட்ட விதிகளின்படி, முதிர்வு தேதிக்கு பிறகு 3 ஆண்டுகள் வரை செயலற்ற நிலையில் உள்ள கணக்குகளுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கிறது.
இந்த விதி அனைத்து முக்கிய சிறுசேமிப்பு திட்டங்களுக்கும் பொருந்தும். முடக்கப்பட்ட பிறகு, கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் வரை எந்த பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படமாட்டாது.
கணக்குகள் முடக்கப்பட்டால் என்ன செய்யலாம்?
போஸ்ட் ஆபீஸ் கணக்கு முடக்கப்பட்டால் அனைத்து பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும். பணத்தை எடுக்க முடியாது. அத்துடன் நிதிகளை டெபாசிட் செய்யவும் முடியாது. கணக்கினுடைய ஆன்லைன் சேவைகளையும் அணுக முடியாது. இதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு தேவையான ஆவணங்களுடன் சென்று முடக்கப்பட்ட கணக்கின் பாஸ்புக் அல்லது சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
மொபைல் எண், பான் கார்டு, ஆதார் அட்டை அல்லது முகவரிச் சான்று போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். அத்துடன் தபால் நிலையத்திலேயே கிடைக்கும் கணக்கு மூடல் படிவத்துடன் (SB-7A) முதிர்வுத் தொகை மாற்றப்பட வேண்டிய தபால் நிலைய சேமிப்புக் கணக்கு அல்லது வங்கி கணக்கின் விவரங்களையும் வழங்க வேண்டும்.
கொடுத்த விவரங்களை சரிபார்த்து, உண்மையான கணக்கு வைத்திருப்பவர் தான் என்பதை உறுதிப்படுத்த அவர்களுடைய பதிவுகளுடன் நம் கையெழுத்தை சரிபார்ப்பார்கள். சரிபார்த்தலுக்கு பிறகு கணக்கு முடக்கம் நீக்கப்படும். முதிர்வுத் தொகை நம் தபால் நிலைய சேமிப்புக் கணக்கு அல்லது வங்கி கணக்கில் மின்னணு பரிமாற்றம் மூலம் டெபாசிட் செய்யப்படும். அதுவே நம்முடைய கணக்கு ஒரு சிறிய தபால் நிலையத்தில் இருந்தால், ஆவணங்கள் செயலாக்கத்திற்காக அருகிலுள்ள தலைமை தபால் நிலையத்திற்கு அனுப்பப்படும்.
முடக்கத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?
தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் முடக்கத்தை தவிர்ப்பதற்கு முதிர்ச்சியடைந்த கணக்குகளை முறையாக நீட்டிக்க அல்லது மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை அடையாளம் காணப்படுவதால், முதிர்வு காலக்கெடுவை கண்காணித்து மூன்று ஆண்டு காலத்திற்குள் பதிலளிப்பது அவசியம்.