தேசிய சேமிப்பு பத்திரம் (NSC - National savings certificate) என்பது இந்திய அரசால் வழங்கப்படுகிற ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். இது சிறு மற்றும் நடுத்தர வருமான முதலீட்டாளர்களுக்கு வரி சேமிப்புடன் கூடிய பாதுகாப்பான முதலீட்டுக்கான வாய்ப்பை வழங்குகிறது. சிறு மற்றும் நடுத்தர வருமான முதலீட்டாளர்கள் வருமானம் ஈட்டும் பொழுது வரியை சேமிக்க சேமிப்பு பத்திரம் ஏற்றது. இது இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
குறைந்த ஆபத்துள்ள முதலீட்டை தேடுபவர்கள் மற்றும் நிலையான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்கள் இதைத் தேர்வு செய்யலாம். வருமான வரி சேமிக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.
NSC பற்றிய முக்கிய தகவல்கள்:
வருமான வரி சேமிப்பு:
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நாம் வருமான வரி விலக்கு பெற முடியும்.
முதலீட்டு வரம்பு:
குறைந்தபட்ச வைப்புத் தொகை ஆயிரம் ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு எதுவும் கிடையாது.
பாதுகாப்பான முதலீடு:
NSC என்பது இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். எனவே இதில் முதலீடு செய்வது குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு திட்டமாகும்.
இந்த தேசிய சேமிப்பு பத்திரத்தை அடமானம் வைத்து கடன் பெறும் வசதியும் உள்ளது.
முதிர்வு காலம் மற்றும் வட்டி விகிதம்:
NSCயின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். இந்த பத்திரங்களை வங்கிகள் மற்றும் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களில் வாங்கலாம். இதற்கான வட்டி விகிதம் அவ்வப்பொழுது அரசாங்கத்தால் மாற்றி அமைக்கப்படும். எனவே சமீபத்திய விபரங்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம். தற்போதைய நிலவரப்படி இந்தத் திட்டத்தில் வட்டிவிகிதம் 6.8% ஆகும்.
பத்திர முடிவில் திரட்டப்படும் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் இருக்காது. ஆனால் ஒருவருடைய வருமான வரி வரம்பைப் பொறுத்து முதலீட்டின் மூலம் கிடைக்கப்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். கிடைக்கப்பெறும் வட்டியை மறு முதலீடு செய்தும் வரி விலக்கு பெறலாம்.
NSCயில் வரி நோக்கங்களுக்காக இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் உங்களது வருமான வட்டியை காட்டலாம் அல்லது முதிர்வு காலத்தில் பெற்ற தொகையை கட்டலாம்.
வரிச்சலுகை எப்போதெல்லாம் கிடைக்கும்?
NSCஇல் வட்டி மாதா மாதம் கணக்கிடப்பட்டாலும் திட்ட முடிவிலேயே முதிர்வு தொகை கிடைக்கிறது. இதனால் கிடைக்கும் வட்டி வருமானமும் முதலீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. எனவே 80C பிரிவின் கீழ் வரிச்சலுகை பெற தகுதியுடையதாகவே பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் முதிர்வு காலத்தில் பணம் கிடைக்கும் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் வரிசலுகையை பெறலாம்.