

தனிமனித நிதியில் நிதிக்குறிக்கோள்களை அடைய பட்ஜெட் போடுவது அதாவது நிதி திட்டமிடல் செய்வது மிகவும் அவசியம். பட்ஜெட் போடும் முறைகளில் ஒன்றான காகித உறை பட்ஜெட் முறையைப் பற்றிப் பார்ப்போம்.
காகித உறை பட்ஜெட் என்றால் என்ன?
காகித உறை பட்ஜெட் மிகவும் எளிமையானது. எவ்வாறு பட்ஜெட் போடுவதற்கு ஒரு நோட்டுப் புத்தகமும் பேனாவும் போதுமானதோ, காகித உறை பட்ஜெட்டினைச் செயல்படுத்துவதற்கு காகித உறைகள் போதுமானவை. பட்ஜெட்டில் ஒவ்வொரு செலவு வகைக்கும் ஒதுக்கிய பணத்தைக் காகித உறைகளில் வைத்திருந்து, பட்ஜெட்டை செயல்படுத்த வேண்டும்.
காகித உறை பட்ஜெட் போடுவது எப்படி?
காகித உறை பட்ஜெட்டினைப் படிப்படியாக போடுவதைக் குறித்துப் பார்ப்போம்.
* ஒரு மாதத்திற்கான வரவுகளை, வரவு செலவு கணக்கு நோட்டு புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்
* ஒரு மாதத்திற்கான செலவுகளை வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்
* வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா , காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை
* அடுத்த மாதத்திற்கான பட்ஜெட்டைத் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு செலவு வகைக்கும் எவ்வளவு ஒதுக்கப்பட்ட தொகை என்று பணத்தைக் குறிப்பிட வேண்டும்.
* மாத சம்பளம் வந்தவுடன் அதனை பணத்தாள்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு செலவு வகைக்கும் ஒவ்வொரு காகித உறையை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த செலவு வகைக்கு ஒதுக்கப்பட்ட தொகையைப் பணத்தாள்களாக காகித உறைக்குள் வைத்து விட வேண்டும்.
* மாதம் முழுவதும் அந்தச் செலவு வகைக்கான செலவுகளுக்குக் காகித உறையிலேயே நாம் பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வகைச் செலவுக்கு காகித உறையில் பணம் தீர்ந்து விட்டது என்றால், அந்தச் செலவு வகைக்கு அந்த மாதத்திற்கு நம்மால் பணத்தைச் செலவு செய்ய முடியாது. அடுத்த மாதம் வரை அந்தச் செலவு வகை சார்ந்த செலவுக்கு நாம் காத்திருக்க வேண்டும்.
உதாரணமாக வெளியே உணவருந்துவதற்கு ரூபாய் ஆயிரம் என்றால், இரண்டு முறை வெளியே உணவருந்திய பின்னர் வெளியே உணவருந்துவற்கான காகித உறையில் பணம் தீர்ந்து விட்டது என்றால் அந்த மாதம் முழுவதும் நம்மால் வெளியே உணவருந்த முடியாது.
அடுத்த மாதம் சம்பளம் வந்த பிறகு மறுபடி காகித உறைக்குள் பணம் ஒதுக்கப்பட்ட பிறகு நம்மால் மறுபடியும் வெளியே உணவருந்த முடியும். இவ்வாறு செலவு வகைக்கான பணம் ஒதுக்கப்பட்டு அந்தப் பணத்திற்குள் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
* மாத இறுதியில் நமது செலவு அனுபவத்தைக் கொண்டு அடுத்த மாதத்திற்கு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு செலவு வகைக்கு நாம் பணத்தை அதிகமாக ஒதுக்கி இருக்கலாம் அல்லது குறைவாக ஒதுக்கி இருக்கலாம். அதற்கு ஏற்றவாறு நாம் அடுத்த மாத பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேலும் நமது நிதி குறிக்கோள்களுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். கடன்களை அடைத்து விட்டால், கடனுக்கான காகித உறையைப் பயன்படுத்த தேவையில்லை. அந்தப் பணத்தை முதலீடுகளுக்கான காகித உறையில் வைத்துக் கொள்ளலாம்.
காகித உறை பட்ஜெட்டின் நிறைகள் யாவை?
* பணம் தாள்களாக கண்களுக்குத் தெரிவதால், செலவழிக்கும் போது எவ்வளவு பணம் பாக்கி உள்ளது, எவ்வளவு பணம் செலவுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற செலவு சார்ந்த விழிப்புணர்வு அதிகரிக்கிறது. பணத்தை ஜாக்கிரதையாக செலவழிக்கும் பழக்கம் மேம்படுகிறது.
* காகித உறைக்குள் பணம் தீர்ந்துவிட்டால், பணத்தின் செலவு கட்டுப்படுத்தப்படுகிறது.
* காகித உறைகளை அடிப்படையாக கொண்ட எளிமையான முறை.
* பணத்தை கையாளும் பொறுப்பு அதிகரிக்கிறது.
காகித உறை பட்ஜெட்டின் குறைகள் யாவை?
* எங்கு செலவழிக்க வேண்டுமென்றாலும் பணமாக எடுத்துச் செல்ல வேண்டும். பணத்தைத் திருடாமல் காக்க வேண்டும்.
* மாத ஆரம்பத்தில் பணத்தைத் தனித்தனியாக உறைகளில் ஒதுக்கி வைப்பதற்கு அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது.
* பணம் வாயிலாக செலவழிக்காத செலவுகளுக்கு கட்டுக்குள் வைத்திருக்க தனியாக கவனம் செலுத்த வேண்டும்.
* பணம் வங்கியில் இல்லாதபடியால் பெறும் வட்டியை இழக்கிறோம்.
காகித உறை பட்ஜெட் முறையை, பணமாக கையாள வேண்டாமென்று எண்ணினால், கைப்பேசி செயலி போன்றவற்றைப் பயன்படுத்தி, எல்லா வகை பணப் பரிவர்த்தனைகளையும் செலவு வகைக்கு எதிராக பட்டியலிட்டு, காகித உறை பட்ஜெட்டை காகித உறைகள் இன்றி தொழில்நுட்ப ரீதியாக கையாளலாம்.
நமது நிதிக் குறிக்கோள்களை அடைய காகித உறை பட்ஜெட் முறையைப் பயன்படுத்திக் கொள்வோம்.