

பட்ஜெட் (budget) போட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எவ்வாறு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? இந்தப் பதிவு உங்களுக்குப் படிப்படியாக பட்ஜெட் போட உதவும்.
ஏன் பட்ஜெட் போட வேண்டும் ?
பட்ஜெட் (budget) என்றால் தமிழில் நிதி திட்டமிடல் என்று பொருள். அதாவது உங்களது நிதியை நீங்கள் திட்டமிடுகிறீர்கள். நிதி செலவாகுவதை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். ஆங்கிலத்தில் சொல்வார்கள் 'what is not measured, cannot be controlled'. அதாவது எது அளக்கப்படவில்லையோ, அதனைக் கட்டுப்படுத்த முடியாது. இங்கு பட்ஜெடானது நிதிச் செலவை அளக்க உதவுகிறது. அதன் மூலம் செலவுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பட்ஜெட் மூலம் எவ்வாறு பணம் வருகிறது எவ்வாறு பணம் செலவாகிறது என்ற விழிப்புணர்வு வருகிறது. அதன் மூலம் உங்களது நிதிக்குறிக்கோள்களுக்குத் தேவையான பணத்தை ஒதுக்க முடிகிறது.
பட்ஜெட்டை எவ்வாறு போடுவது?
பட்ஜெட் (budget) போடுவதற்கு உங்களுக்குத் தனியாக எந்த ஒரு மென்பொருளோ செயலியோ அவசியமில்லை. ஒரு நோட்டு புத்தகமும் பேனாவுமே போதுமானது.
தேவைப்பட்டால் எக்ஸெல் போன்ற மென்பொருளோ அல்லது ஆண்ட்ராய்டு கைப்பேசியில் கிடைக்கும் எக்ஸ்பென்ஸ் மேனேஜர் போன்ற செயலியையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
பட்ஜெட்டிற்கு மூன்று விஷயங்கள் முக்கியம்:
1. உங்களது வருமானம்
2. உங்களது செலவுகள்
3. உங்களது நிதிக் குறிக்கோள்கள்
1. உங்களது மாதாந்திர வருமானத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்:
உங்களுக்கு எவ்வாறெல்லாம் மாதாமாதம் வருமானம் வருகிறது என்பதனைக் குறித்துக் கொள்ளுங்கள்
2. உங்களது மாதாந்திர செலவுகளைக் குறித்துக் கொள்ளுங்கள்:
இதனை உங்களால் உடனே செய்ய முடியாது. ஒரு மாத காலம் நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு பணத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். அது பற்று அட்டை வழியாகவோ, யுபிஐ செயலி வழியாகவோ, பணத்தாள் வழியாகவோ இருக்கலாம். ஒவ்வொரு ரூபாயும் கணக்கில் கொண்டு வந்து ஒரு மாதம் முழுவதும் எழுதுங்கள்.
3. உங்களது நிதிக் குறிக்கோள்களைக் குறித்துக் கொள்ளுங்கள்:
அவசர கால நிதியைத் தயார் செய்வது, உங்களது கடன்களை அடைப்பது, சுற்றுலா செல்வதற்கு பணம் ஒதுக்குவது, குழந்தைகளின் மேல் படிப்பிற்கு பணம் ஒதுக்குவது, ஓய்வு காலத்திற்கு பணம் ஒதுக்குவது என்று எல்லா நிதிக் குறிக்கோள்களையும் குறித்துக் கொள்ளுங்கள்
4. உங்களது செலவுகளை வகைப்படுத்துங்கள்:
படி இரண்டாவதில் நீங்கள் உங்களது செலவுகளைப் பட்டியலிட்டு உள்ளீர்கள். அந்தப் பட்டியலில் உள்ள செலவுகளை வகைப்படுத்துங்கள். பின்வரும் வகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா , காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை. இப்போது உங்களது பணமானது எவ்வாறு செலவாகிறது என்கிற விழிப்புணர்வு கிடைக்கும்
5. பட்ஜெட் போடுங்கள்:
உங்களது மாதாந்திர வருமானத்தைக் குறிப்பிடுங்கள். உங்களது மாதாந்திர வருமானத்தில் நிதிக்குறிக்கோள்களுக்கு எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒதுக்கி வரிசைப் படுத்துங்கள். இப்போது உங்களது செலவுகளின் வகைகளுக்கு செலவான தொகையை வரிசைப்படுத்துங்கள். இவை உங்களது மொத்த மாதாந்திர நிதிச் செலவுகள். உங்களது வருமானத்திலிருந்து இந்த நிதிச் செலவுகளைக் கழித்தால், வரவுக்கு மீறிய செலவு உங்களுக்கு உள்ளது என்பது தெரிய வரும்.
பொதுவாக மக்கள்,
வரவு - செலவு = முதலீடு என்று பணத்தை ஒதுக்குகிறார்கள்.
இதற்கு மாறாக,
வரவு - முதலீடு = செலவு என்று பணத்தை ஒதுக்க வேண்டும்.
உங்களது நிதிக் குறிக்கோள்களுக்கு ஒதுக்கிய பணம் போக மீதம் உள்ள பணத்தில் எவ்வாறெல்லாம் மற்ற வகைகளில் செலவைக் குறைக்கலாம் என்று பார்க்க வேண்டும். அதற்கேற்றவாறு அந்த வகைக்கான ஒதுக்கப்பட்ட தொகையைக் குறைக்க வேண்டும்.
அத்தியாவசிய தேவைகளில் செலவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைக்க வேண்டும். விருப்பம் சார்ந்த செலவுகளில், எவையெல்லாம் தவிர்க்க முடியுமோ தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத விருப்பம் சார்ந்த செலவுகளில் எவ்வளவு பணத்தைக் குறைக்க முடியுமோ குறைக்க வேண்டும்.
இவ்வாறு செலவுகளுக்கு ஒதுக்கிய பணத்தைக் குறைக்கும் போது, மாதாந்திர வருவாயும், முதலீடு மற்றும் செலவுகளும் சமமாக இருக்கும்.
உங்களுக்கு பட்ஜெட் (budget) தயாராகிவிட்டது.
6. பட்ஜெட்டைக் கடைபிடியுங்கள்:
பட்ஜெட் போட்ட பிறகு அந்த மாதத்தில் வருமானத்தில் நிதிக்குறிக்கோள்களுக்குப் பணம் ஒதுக்குங்கள். செலவுகளுக்கு ஒதுக்கிய பணத்திற்குள் செலவைக் கட்டுக்குள் வைத்திருங்கள். உதாரணமாக வெளியே உணவருந்துவதற்கு மாதம் ரூபாய் ஆயிரம் என்றால் ஆயிரம் செலவாகிவிட்டது எனில் அந்த மாதம் முழுவதும் வெளியே உணவருந்த கூடாது. இதன் மூலம் குறிப்பிட்ட வகையில் பணமானது அதிகமாக செலவாகாமல் கட்டுக்குள் செலவாகிறது. நிதிக்குறிக்கோள்களையும் அடைய முடிகிறது. ஒரு மாதம் ஏதேனும் தவறு செய்து விட்டால் அந்தத் தவறை ஏன் நிகழ்ந்தது என்று அகத்தாய்வு செய்து அடுத்த மாதம் அந்தத் தவறு நிகழாமல் காத்துக் கொள்ளுங்கள்.
7. பட்ஜெட்டைக் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்:
ஒவ்வொரு மாதமும், பட்ஜெட்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று பாருங்கள். கடன்களை அடைக்க பணத்தை ஒதுக்கி இருந்தால், கடன்களை அடைத்த பின்பு கடனுக்காக தனியாக பணத்தை ஒதுக்க தேவையில்லை. அந்தப் பணத்தை நிதி குறிக்கோள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு காலம் செல்ல செல்ல பட்ஜெட்டை உங்களது நிதிக்குறிக்கோள்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு பட்ஜெட் போடுவதன் மூலம் நமது நிதிக்குறிக்கோள்களை நம்மால் எளிதில் அடைய முடிகிறது. நிதி சுதந்திரத்தை நம்மால் அடைய முடிகிறது.
உங்களது வீட்டின் பட்ஜெட்டிற்கு வாழ்த்துகள்.