
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெறும் நடைமுறை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் எளிதாதி விட்டது. இருப்பினும் கடன் பெறுவதற்கான தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்பதை வங்கிகள் ஆராயும். அதில் முக்கியமான ஒன்று தான் சிபில் ஸ்கோர். இந்த மதிப்பீட்டை வைத்து தான் ஒருவருக்கு கடன் வழங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை வங்கிகள் முடிவு செய்யும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்து கடன் பெற வங்கிகள் அனுமதித்தால், நிச்சயமாக வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். நம்மால் வட்டி விகிதத்தைக் குறைக்கச் சொல்லி கேட்கவே முடியாது. அப்படியே கேட்டாலும் சிபில் ஸ்கோரைக் காட்டி நம் வாயை அடைத்து விடுவார்கள்.
அடமானம் வைக்கப்படாத எந்தக் கடனுக்கும் சிபில் ஸ்கோர் அவசியம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இதில் அப்ளிகேஷன் ஸ்கோர் என்று இன்னொன்றும் இருக்கிறது. இதுபற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனிநபர் கடன் வாங்க விண்ணப்பிக்கும் சிலருக்கு அப்ளிகேஷன் ஸ்கோர் குறைவாக இருக்கிறது என்று வங்கிகள் கடனைத் தராமல் நிராகரித்த சம்பவங்கள் கூட இங்கே நடந்திருக்கின்றன. அப்படியெனில் அப்ளிகேஷன் ஸ்கோர் அவ்வளவு முக்கியமா என்று நீங்கள் நினைக்கலாம். இதுவும் முக்கியம் என சில வங்கிகள் தொடக்க நிலையிலேயே அப்ளிகேஷன் ஸ்கோரை சரிபார்க்கின்றன.
நாம் எந்த வகையான கடனுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும், வங்கிகள் கொடுக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுப்போம். இதில் நம்முடைய முகவரி, வருமானம், ஆதார் எண் மற்றும் பான் எண் உள்ளிட்ட பல தகவல்களை நிரப்புவோம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுக்கும் போது வருமானம் மற்றும் கடன் தொடர்பான சில கேள்விகளை கேட்பார்கள்.
நீங்கள் நிரப்பிய விண்ணப்பம் மற்றும் வங்கி அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களை வைத்து, வங்கிகளே உங்களுக்கு ஒரு மதிப்பீடு வழங்கும். இதுதான் அப்ளிகேஷன் ஸ்கோர். இந்த ஸ்கோரும் ஒரு அளவைக் கடந்தால் தான், நீங்கள் கடன் பெறுவதற்கான அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். ஒவ்வொரு வங்கிக்கு ஏற்பவும் குறைந்தபட்ச அப்ளிகேஷன் ஸ்கோர் வேறுபடும். வங்கி அளவில் நடைபெறும் வடிகட்டல் தான் இந்த அப்ளிகேஷன் ஸ்கோர்.
டிஜிட்டலில் காட்டும் சிபில் ஸ்கோரைப் போலவே, உங்கள் நிதி செயல்பாடுகளின் தரநிலையை வங்கிகள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வழிமுறை என்றும் அப்ளிகேஷன் ஸ்கோரைக் கூறலாம்.
மாதச் சம்பளம், இதர வருமானம், செலவுகள் மற்றும் உங்களின் மாதாந்திர நிதி நடவடிக்கைகள் என்னென்ன என்பதை அப்ளிகேஷன் ஸ்கோரை வைத்தும் வங்கிகள் தெரிந்து கொள்ளும். இதில் நீங்கள் குறைந்தபட்ச அளவைத் தாண்டினால் தான் அடுத்தகட்ட கடன் செயல்பாடுகள் நடைபெறும். இருப்பினும் இந்த அப்ளிகேஷன் ஸ்கோர் பெரும்பாலும் தனிநபர் கடன்களுக்குத் தான் மதிப்படப்படுகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் வங்கிக்குச் செல்லாமலே கடன் பெற முடியும். ஆனால் வட்டி வகிதம் அதிகமாக இருக்கும். ஆகையால் எளிமையாக கடன் பெற்று விடலாம் என எண்ணி இதுபோல் செய்ய வேண்டாம். முறையாக வங்கிக்குச் சென்று கடன் பெற விண்ணப்பியுங்கள். அப்போது தான் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.