
தங்க முட்டையிடும் வாத்திற்கும் தனிமனித நிதிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். அதனைப் பற்றி விளக்குகிறேன்.
*******************
நமக்கு பிரபலமான ஈசாப் கதையான தங்க முட்டையிடும் வாத்து கதை தெரியும். அதைப் பார்ப்போம்.
ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவன் தனது வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் திண்டாடினான்.
அப்போது அவனது துயரத்தை கண்ட ஒரு வழிப்போக்கன் அவனுக்கு ஒரு வாத்தைக் கொடுத்தான். அது அவனது வறுமையைப் போக்கும் என்று கூறினான்.
அடுத்த நாள் காலை அந்த வாத்து கத்தியது. அந்த வாத்தின் அருகில் சென்று பார்த்த போது, விவசாயிக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வாத்து ஒரு தங்க முட்டையை இட்டிருந்தது.
தங்க முட்டையைச் சந்தைக்கு சென்று விற்று விவசாயி பணமாக்கிக் கொண்டான். இவ்வாறு தினந்தோறும் தங்க முட்டைகளை விற்று தனது வாழ்க்கையை வளமாக்கி கொண்டான். ஏழை விவசாயி பணக்காரனாக ஆனான்.
விவசாயிக்கு திடீரென்று ஒரு பேராசை தோன்றியது. இந்த வாத்து தினமும் ஒரு தங்க முட்டை தானே இடுகிறது. இதன் வயிற்றுக்குள் நிறைய தங்க முட்டைகள் இருக்குமே என்று எண்ணி, பேராசை கொண்டு எல்லா தங்க முட்டைகளையும் ஒரே நாளில் அடைய எண்ணினான். தங்க முட்டை இடும் வாத்தினை வெட்டியபோது, அதன் வயிற்றுக்குள் ஒன்றும் இல்லை. காலியாக இருந்தது.
தங்க முட்டையிடும் வாத்தைக் கொன்றதன் மூலம், தனது வளமான எதிர்காலத்தை விவசாயி கெடுத்துக் கொண்டான்.
கூட்டு வட்டி திட்டங்கள் தங்க முட்டையிடும் வாத்தை போன்றவை.
கூட்டுவட்டி திட்டங்களில் நடுவில் பணத்தை எடுத்து விடுவது என்பது தங்க முட்டையிடும் வாத்தை வெட்டுவதற்கு சமமானது. உதாரணமாக பொது சேமநல நிதியில் (Public Provident Fund) வருடா வருடம் கூட்டு வட்டியில் பணம் வளர்கிறது. அது பதினைந்து வருடங்களுக்கான திட்டம். ஆண்டுக்கு ரூபாய் 1.5 இலட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். வட்டி சராசரியாக 8% என்று கொள்வோம்.15 வருடம் இவ்வாறு முதலீடு செய்தால், பதினைந்தாவது வருட இறுதியில், நாம் முதலீடு செய்த மொத்த தொகை. ரூபாய் 22,50,000/- . கூட்டு வட்டியுடன் சேர்த்து மொத்தமாக வளர்ந்த தொகை கிட்டத்தட்ட 49 லட்சம்.
இந்த கூட்டு வட்டி திட்டத்தினை ஏழாவது வருடத்திலேயே வளர்ந்த பணத்தை எடுத்துவிட்டால், 17 இலட்சம் மட்டுமே கிடைக்கும். மறுபடி வருடா வருடம் முதலீடு செய்தால், 15 ஆவது வருட இறுதியில் கிட்டத்தட்ட 20 இலட்ச ரூபாய் கிடைக்கும். நடுவில் பணத்தை எடுத்த காரணத்தால், மொத்தமாக வளர்ந்த பணம் ரூபாய் 37 இலட்சம் (17 இலட்சம் + 20 இலட்சம்). நடுவில் எடுத்த காரணத்தால், 49 இலட்சத்திலிருந்து கிட்டத்தட்ட 12 இலட்சம் குறைவாக கிடைக்கிறது.
எனவே, வளர்ந்து வரும் தங்க முட்டையிடும் வாத்தை வெட்டிவிட்டு புதியதொரு தங்க முட்டையிடும் வாத்தை அங்கு கொண்டு வருவதால் பணத்தின் வளர்ச்சி குறைகிறது. கூட்டு வட்டி திட்டங்கள் தங்க முட்டை இடும் வாத்தைப் போல் என்பதால் அவற்றை முதிர்ச்சி காலம் வரை நடுவில் எடுக்காமல் இருக்க வேண்டும். அவ்வாறு எடுப்பதென்பது தங்க முட்டையிடும் வாத்தை வெட்டுவதற்கு சமமானது.
எனவே, நாமும் கூட்டு வட்டி திட்டங்களில் பணத்தை நடுவில் எடுக்காமல், நமது குறிக்கோளை அடையும் வரை கூட்டு வட்டியினைத் தொடர வேண்டும்.