நிதி திட்டமிடலில்... குடும்பத்தின் நலம், நிதி சுதந்திரம், முதலீடு, கடன் மேலாண்மை மற்றும் நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வதில்... பெண்களின் பங்கு முக்கியமானது. பெண்கள் நிதி முடிவுகளை எடுத்து, நிதி சார்பின்றி சுதந்திரமாக செயல்படுவதன் மூலம் (Financial Freedom) செல்வத்தை உருவாக்குவதும், தங்கள் எதிர்காலத்திற்காக திட்டமிடுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள் பெரும்பாலும் தங்கள் சிக்கன சேமிப்பு பழக்க வழக்கங்களால் குடும்ப நிதியை திறம்பட நிர்வகிக்கிறார்கள். இது செல்வத்தை உருவாக்குவதற்கு உதவுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், பெண் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நிதி சந்தையில் பெண்களின் ஈடுபாட்டை காட்டுகிறது.
குடும்பத்தின் நிதித் தேவைகளை நிர்வகிப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. பெண்கள் தங்களின் நிதியை (finance) திறம்பட நிர்வகிப்பதுடன், சரியான முடிவுகளை எடுப்பது, நிதி சார்பின்றி இருப்பது அதிகரித்து வருகிறது. இவர்கள் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் சொத்துக்கள் போன்ற பல்வேறு வழிகளில் முதலீடு செய்வதன் மூலம் செல்வத்தை உருவாக்க முடியும்.
நிதி திட்டமிடலில் பெண்களின் பங்கை அதிகரிக்கும் காரணிகள்:
a) நிதி அறிவும் கல்வியும்:
நிதி (finance) கல்வியறிவை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் நிதி சேர்க்கையும் அதிகாரமளித்தலும் மேம்படுகிறது. இது பெண்களின் நிதி நம்பிக்கையை அதிகரித்து, சிக்கலான நிதி அமைப்புகளை வழி நடத்தவும், சுரண்டலில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. உயர் கல்வி மற்றும் தொழில்முறைப் பயிற்சி, பெண்களை முறையான மற்றும் முறைசாரா பொருளாதாரத்தில் ஈடுபடச் செய்து அவர்களின் நிதி பங்கேற்பை அதிகரிக்கிறது.
b) தொழில்முனைவு:
தொழில் முனைவில் ஈடுபடுவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற முடிகிறது. புதிய வணிகங்களை உருவாக்குவதன் மூலம் பெண்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றனர். இது நிதி சுதந்திரத்திற்கு உதவுவதுடன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
நிதி திட்டமிடலில் ஈடுபடுவது பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் நிதி விவகாரங்களில் அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக உணர வைக்கிறது.
c) டிஜிட்டல் நிதி மற்றும் ஃபின்டெக் (Fintech):
டிஜிட்டல் நிதி சேவைகள் மற்றும் ஃபின்டெக் தளங்கள் பெண்களுக்கு நிதித் துறையில் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. டிஜிட்டல் நிதி சேவைகளின் வளர்ச்சி, பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பை எளிதாக்குகிறது. வங்கிக் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் பெண்களை சேர்ப்பது, அவர்களின் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகிறது.
இந்தியாவில் பெண்களின் பங்கு:
இந்தியாவில் நிதி முடிவெடுப்பதில் பெண்கள் பங்கேற்பது அதிகரித்து வருவதுடன், துறையிலும் செழித்து முன்னேறி வருகிறார்கள்.
குடும்ப நிதி முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சேமிக்கும் பழக்கம் மற்றும் சிக்கனமான செலவினங்கள் மூலம் குடும்பங்களின் நிதி எதிர்காலத்தை வடிவமைக்க உதவுகிறார்கள்.
கடன் வாங்குபவர்கள்:
கடன் வாங்குவதிலும் முதலீடு செய்வதிலும் பெண்கள் குறிப்பாக அதிகம் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக பெண்கள் கடன் வாங்குபவர்களாக உள்ளனர். இது அவர்களின் நிதிப் பங்களிப்பின் வளர்ந்து வரும் தன்மையைக் காட்டுகிறது.