

நம்மில் பலருக்கும் பெரிய கோடீஸ்வரராக வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில் பலரும் ஏழையாகவே வாழ்வதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. பணக்காரர் ஆவதை விட, எப்படி எல்லாம் நாம் ஏழையாக மாறுகிறோம் என்ற வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒருவரை கடனாளியாக மாற்றும் முக்கிய தவறுகளைப் (Financial Mistakes) பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.
போதிய நிதி அறிவின்மை!
பணத்தை நிர்வகிக்கும் கலையை கற்றுக்கொள்ள மறுப்பது தான் ஏழையாவதற்கான முதல் படி. ரொனால்ட் ரீட் என்ற சாதாரண துப்புரவுத் தொழிலாளி, பங்குச் சந்தையில் முதலீடு செய்து இறக்கும்போது 75 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருந்தார். ஆனால் அவரைவிட நான்கு மடங்கு அதிக சம்பளம் வாங்கிய அவரது மேலாளர் எந்த சேமிப்பும் இல்லாமல் ஏழையாகவே இறந்தார்.
தகுதிக்கு மீறிய செலவு!
அடுத்தபடியாக, சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்வது மிகப்பெரிய தவறாகும். ஸ்விக்கி, சொமாட்டோ, ஐபோன் என ஆடம்பரத்திற்காக செலவு செய்து மக்கள் கடனாளியாகிறார்கள். இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் சராசரியாக முப்பதாயிரம் ரூபாய் கடனில் உள்ளனர். முறையான பட்ஜெட் இல்லாமல் எல்லாவற்றிற்கும் கண்மூடித்தனமாக செலவு செய்வது ஆபத்தானது.
தீய பழக்கங்கள்!
மது, சூதாட்டம் போன்ற கெட்ட பழக்கங்கள் பணத்தை அழிப்பதோடு மட்டுமில்லாமல் மருத்துவச் செலவு களையும் அதிகரிக்கும். அமெரிக்கர்கள் ஆண்டுக்கு சராசரியாக 35,000 ரூபாயை லாட்டரிக்காக செலவழிக்கின்றனர். 2002 ஆம் ஆண்டு மைக்கேல் கரோல் என்ற குப்பை அள்ளும் தொழிலாளி லாட்டரியில் 200 கோடி ரூபாய் வென்றார். ஆனால், தேவையற்ற பழக்கங்களால் அந்தப் பணத்தை இழந்து மீண்டும் பழைய வேலைக்கே திரும்பினார்.
தவறான முதலீடுகள்!
மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக எந்த புரிதலும் இல்லாமல் முதலீடு செய்வது முட்டாள்தனமானது. தங்கம் என்பது பணத்துக்கான மாற்று, ஆனால் வெள்ளி என்பது தொழிற்சாலைகளில் பயன்படும் உலோகம் என்ற வித்தியாசம் தெரியாமல் பலரும் வெள்ளியில் முதலீடு செய்து நஷ்டமடைகிறார்கள். அதேபோல, ஆளை சேர்த்து விட்டால் பணம் கிடைக்கும் MLM Schemes, கோயம்புத்தூரில் நடந்த MyV3 Ads போன்ற விளம்பரம் பார்த்து சம்பாதிக்கும் குறுக்குவழித் திட்டங்கள் உங்களை ஏமாற்றிவிட்டு ஓடிவிடும்.
சேமிப்பின்மை!
அவசர காலத்திற்காக பணத்தை சேமிக்காமல் இருப்பதும் பெரும் தவறு. திடீர் வேலை இழப்பு அல்லது மருத்துவ செலவுகளைச் சமாளிக்க குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான பணத்தை சேமிப்பில் வைத்திருக்க வேண்டும்.
மோசமான நட்பு வட்டம்!
உங்கள் அறையில் நீங்கள்தான் புத்திசாலி என்றால், நீங்கள் தவறான அறையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கேரளா பார்டருக்குச் சென்று மது அருந்தத் திட்டமிடும் நண்பர்களை விட்டு விலகி இருங்கள். பல முன்னணி நடிகர்கள் கூட தவறான பழக்கவழக்கங்களாலும் நண்பர்களாலும் தங்கள் வாழ்க்கையை அழித்துள்ளனர். தனித்துவமான திறமைகள் கொண்ட மனிதர்களுடன் பழகுவது மட்டுமே நம்மை வாழ்க்கையில் முன்னேற்றும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களும் ஒரு மனிதனை எப்படி எளிதாக ஏழையாக மாற்றும் என்பதற்கான தெளிவான சான்றுகளாகும். இந்தத் தவறுகளைத் தவிர்த்து, சரியான நிதி மேலாண்மையைக் கற்றுக் கொண்டு செயல்பட்டால் யார் வேண்டுமானாலும் தங்களின் பொருளாதார நிலையை சிறப்பாக உயர்த்திக் கொள்ள முடியும்.