
பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதிப்பது மட்டும் முக்கியமல்ல. அதை சரியாக கையாள்வதும் மிக முக்கியம். மனிதர்கள் செய்யக்கூடிய நிதித் தவறுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பட்ஜெட் போடாமல் இருப்பது:
நாட்டிற்கு பட்ஜெட் எவ்வளவு அவசியமோ வீட்டிற்கும் பட்ஜெட் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இது வீட்டின் நிதி ஆரோக்கியத்திற்கான ஒரு வரைபடம் போன்றது. ஒருவரது வருமானம், செலவுகள், சேமிப்பு மற்றும் தேவைகள் பற்றிய தெளிவான பார்வையை அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை, மளிகை, பால், காய்கறிச் செலவுகள், பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவுகள், அவசரத் தேவைகள், வாகனச் செலவுகள் போன்றவற்றை பற்றி ஒரு தெளிவான பட்ஜெட் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
2. அதிகமாக செலவு செய்தல்:
சிலர் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்வார்கள். வாழ்க்கை முறை, பணவீக்கம் போன்றவற்றை அனுசரித்தே செலவு செய்ய வேண்டும். சிலர் வருமானம் அதிகரிக்கும் போது செலவுகளை அதிகரித்துக் கொள்வார்கள். தேவையில்லாத ஆடம்பரப் பொருள்களுக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள். இதனால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. பெரும்பாலும் கடன் வாங்க வழி வகுக்கிறது. இதனால் அவசரத் தேவைகளுக்கு பணமில்லாமல் போவதும், சேமிப்பு இல்லாமல் எதிர்காலத்தில் கஷ்டப்படவும் நேரிடும்.
3. அவசரத் தேவைகளுக்கு சேமிக்காமல் இருப்பது:
மருத்துவச் செலவுகள் அல்லது திடீரென்று வேலை இழந்தால் எதிர் கொள்ள வேண்டிய செல்வங்களுக்காக எப்போதும் அவசரகால நிதியை சேமித்து வைத்திருக்க வேண்டும். இது ஒரு பாதுகாப்பு வலை போல செயல்படும். பெரும்பாலும் மக்கள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி மருத்துவச் செலவுகளையும் திடீரென்று ஏற்படும் எதிர்பாராத செலவுகளையும் எதிர்கொள்கிறார்கள். எனவே ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று முதல் ஆறு மாதகால வாழ்க்கைச் செலவுக்கான சேமிப்பை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
4. அதிக வட்டிக்குக் கடன் வாங்குதல்:
மீட்டர் வட்டி, கந்து வட்டி போன்றவற்றில் சிக்கிக் கொள்ளும் மக்களுக்கு என்றுமே விமோசனமே இல்லை. அதுபோல வங்கிகளில் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கட்டுப்பாடற்ற செலவுகளை செய்வதும் கடனை அதிகரிக்கும். தேவையின்றி கடன் வாங்கவே கூடாது. அதற்குப் பதிலாக தேவைகளைக் குறைத்துக் கொண்டால் கடன் வாங்குவது குறையும். திடீரென்று பணம் வந்தால் அல்லது இன்கிரிமெண்ட் கிடைத்தால் முதலில் செய்ய வேண்டியது கடனை அடைப்பதாகும்.
5. முதலீடு செய்யாமல் இருப்பது:
பணக்காரராக வாழ்வதற்கும் மனிதனின் நீண்ட கால வளர்ச்சிக்கும் முதலீடு என்பது மிக முக்கியமானது. அதிலும் நீண்ட கால முதலீடுகள் கூட்டு வட்டி காரணமாக அதிக வருமானத்தை வழங்குகின்றன. மேலும் வரிச்சலுகைகளையும் பண வீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குகின்றன. முதலீடுகளைத் தவிர்த்தால் செல்வத்தை இழக்க நேரிடும். அத்துடன் பிள்ளைகளின் கல்லூரிக் கட்டணங்கள், அவர்களின் இலக்குகளை நிறைவேற்றுதல் மற்றும் ஓய்வூதிய காலத்தை மகிழ்ச்சிகரமாக அனுபவிக்க முடியாமல் போகும்.
6. காப்பீட்டைப் புறக்கணித்தல்:
நோய், விபத்துகள் அல்லது வருமான இழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக காப்பீடுகள் உதவுகின்றன. எனவே சரியான பாலிசிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு ஏற்ற காப்பீட்டை உறுதி செய்ய வேண்டும்
7. பொழுதுபோக்கு செலவுகள்:
பொழுதுபோக்குக்காக மக்கள் தற்போது கணக்கு வழக்கில்லாமல் செலவழிக்கிறார்கள். அடிக்கடி குடும்பத்துடன் சென்று திரைப்படம் பார்ப்பது, வெளியில் உண்ணுவது, ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்ணுவது போன்றவை பெருமளவு பணத்தை விரயமாக்கும்.
8. புதிய வாகனம் வாங்குதல்:
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான புதிய வாகனங்கள் விற்கப்படுகின்றன. பலர் 5 அல்லது 10 வருடங்களில் தங்களது வாகனத்தை விற்றுவிட்டு புதிதாக வாங்குகிறார்கள். இது மோசமான நிதி நிலைமைக்கு வழிவகுக்கும். கடன் வாங்கி அதில் வாகனம் வாங்குகிறார்கள். ஆண்டுகள் செல்லச் செல்ல வாகனத்தின் மதிப்பிற்கும் அதற்கான விலைக்கும் இடையே பெரிய வேறுபாடு வரும். இந்த நிதித் தவறுகளை செய்யாமல் இருந்தால் அனைவரும் வளமாக வாழலாம்.