
இன்சூரன்ஸ் ரைடர்ஸ் என்றால் என்ன? (What are insurance riders?)
பொதுவாக டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும் போது அதில் இன்னொரு இணைப்பாக ரைடர்களை இணைக்கும் ஆப்ஷன் இருக்கும், ரைடர்களை நாம் துணை இன்சூரன்ஸ் என்று கூட அழைக்கலாம். ஒரு முதன்மையான பாலிசியில் விருப்ப தேர்வாக, கூடுதல் நன்மைகளுடன், மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு துணை இன்சூரன்சை தான் ரைடர் என்று அழைக்கிறோம்.
உதாரணத்திற்கு பாலிசி பிரீமியம், ஆண்டிற்கு ₹1 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கும் போது, அதற்கான டெர்ம் கிளைம் ₹1 கோடியாக இருப்பதாக வைத்துக் கொள்வோம், அந்த முதன்மை பாலிசியுடன் கூடுதலாக ₹2000 - ₹7000 வரை சேர்த்துக் கட்டினால் ரைடரின் பயன்களையும் அனுபவிக்கலாம். குறைந்த பட்சமாக ரைடரின் கிளைம் தொகை ₹20 லட்சத்தில் இருந்து ₹50 லட்சம் வரை இருக்கும்.
பிரிமியமாக ஒரு பெரிய தொகையை கட்டும் போது அதனுடன் ஒரு மிகச் சிறிய தொகையை அதிக அளவு நன்மைக்காக சேர்த்து கட்டுவது புத்திசாலிதனமாக இருக்கும். முதன்மை இன்சூரன்ஸ் பாலிசி காலம் முடியும் தருவாயில் அல்லது பாலிசிதாரர் உயிரிழந்தால் மட்டுமே அவரது குடும்பத்திற்கு, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து இழப்பீடு கிடைக்கும். ஆனால், ரைடர்கள் விபத்தில் காயம் ஏற்பட்டாலோ, உடல் ஊனம் ஏற்பட்டாலோ குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். அதே நேரம் பாலிசிதாரரின் முதன்மை பாலிசியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
காப்பீட்டு ரைடர்ஸ் வகைகள் மற்றும் அதனால் பெறும் நன்மைகள் (Types of insurance riders & Benefits of adding insurance riders) என்ன?
ரைடர்களில் பாலிசிதாரருக்கு கிடைக்கும் நன்மைக்கு ஏற்ப பல வகைகள் உள்ளன. அதில் முதன்மையாக உள்ள சில வகைகளை இங்கு பார்க்கலாம்.
1. விபத்து சலுகை (Accidental Benifit Rider): ஏதேனும் ஒரு விபத்தில் பாலிசிதாரர் உயிர் இழக்கும் பட்சத்தில் அவருக்கு முதன்மையான தொகை ₹1 கோடி என்றால், கூடுதலாக ரைடரில் சொல்லப்பட்டுள்ள தொகையும் தனியாக கிடைக்கும். உதாரணத்திற்கு ₹50 லட்சத்திற்கு ரைடர் எடுத்திருந்தால் பயனாளிக்கு ₹1.50 கோடி இழப்பீடு கிடைக்கும்.
2. தீவிர நோய் மற்றும் விபத்து காப்பீடு சலுகை (Critical illness& Accidental disability rider):
இந்த ரைடரில் பயனாளிக்கு ஏதேனும் ஒரு விபத்தில் உடல் ஊனம் ஏற்பட்டால் அல்லது தீவிர நோய்களால் பாதிப்பட்டால் அதற்கான இழப்பீட்டு தொகை கிடைக்கும். அதே நேரம் நோய்வாய் பட்டிருந்தால் முதன்மை பாலிசி தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை மருத்துவ செலவுகளுக்கு பெறலாம். இந்த இரட்டை ரைடர் சில சமயம் தனியாகவோ அல்லது சேர்ந்தோ சில காப்பீட்டு நிறுவனங்களில் கிடைக்கலாம்.
3. வருமான ரைடர் (Income Rider):
பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால், அவரது பயனாளிகளுக்கு முதன்மை பாலிசி தொகை கிடைப்பதுடன், குறிப்பிட்ட காலம் வரை மாதம் அல்லது ஆண்டு வருமானத்தை காப்பீடு நிறுவனம் தனியாக வழங்கும்.
4. பிரீமியம் தள்ளுபடி (Premium waiver Rider):
இது பெரும்பாலும் வருமான காப்பீடு அல்லது குழந்தை காப்பீட்டு திட்டங்களுடன் தொடர்புடையது. இந்த பாலிசியின் படி பாலிசிதாரர் உயிரிழந்தால், அவர்களுக்கு டெர்ம் பெனிபிட் கிடைக்காது. அதற்கு பதில் அந்த பாலிசி தொடர்ந்து கொண்டிருக்கும், பாலிசி தாரர் கட்ட வேண்டிய தொகையை நிறுவனமே செலுத்தும். இறுதியில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய முழுத் தொகையும் கிடைக்கும், வருமான காப்பிட்டில் பிரீமியம் செலுத்தும் காலம் வரை நிறுவனமே பிரீமியம் செலுத்தி விடும் பின்னர் வருமான சலுகைகளை பயனாளி முழுமையாக பெறுவார்.
சரியான காப்பீட்டு ரைடர்ஸை எவ்வாறு தேர்வு செய்வது? (How to choose the right insurance riders?
பாலிசிதாரர் தனக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு ரைடர்களை கூட தேர்ந்தெடுக்கலாம். பெரும்பாலும் பாலிசி எடுப்பவர் தனது சூழல்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும். ஒவ்வொரு ரைடரிலும் ஒரு நன்மை இருக்கிறது.
காப்பீட்டு ரைடர்ஸ் மற்றும் அவற்றின் செலவுகள் (Insurance riders and their costs) எவ்வளவு?
பொதுவாக காப்பீடு ரைடர்களின் செலவு முதன்மை பாலிசியின் பிரீமியம் தொகையை விட குறைவாகத் தான் இருக்கும். ரைடர் செலவு நாமினிக்கு கிடைக்கும் தொகைக்கு ஏற்ப உயர அல்லது குறையக் கூடும், இது காப்பீடு நிறுவனத்திற்கு தகுந்தாற் போல மாறக் கூடும்.