உங்கள் நிதி கட்டடம் பலமாக இருக்க வேண்டுமா? முதல் சம்பளத்தில் இந்த 5 தவறுகளைத் தவிர்க்கவும்!

வலுவான நிதி எதிர்காலத்தை உருவாக்க உதவும் எளிய நிதி மேலாண்மை வழிகாட்டி.
நிதி மேலாண்மை - Financial Planning
நிதி மேலாண்மை - Financial PlanningImage credit: Gemini
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

Venkataraman Ramasubramanian (வெங்கடராமன் ராமசுப்ரமணியன்) பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். தமிழில் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்க் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம், யோகாவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையில் துணைப் பேராசிரியராக சேவை செய்து வருகிறார். எழுத்துக்கலை, தனிமனித நிதி, தமிழ் ஆர்வலர்.

Updated on: 

நீங்கள் முதல் சம்பளம் வாங்கிவிட்டீர்களா? நீங்கள் உடனடியாக செய்யவேண்டிய ஐந்து நிதி சம்பந்தமான வேலைகளைப் பார்ப்போம்.

நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக நிதி என்ற கட்டடத்தைக் கட்டுகிறீர்கள். அந்த கட்டடத்திற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று அஸ்திவாரம். இரண்டாவது கட்டடம்.‌ இரண்டுமே சரியாக இருந்தால்தான் நிதி என்கிற கட்டடத்தில் நீங்கள் வாசம் செய்வது எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லையெனில், வடிவேலு சொல்வதைப் போல், பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் என ஆகி, கட்டடம் கீழே விழ வாய்ப்பு உண்டு.

நிதி மேலாண்மை:

இந்த ஐந்து விஷயங்களைப் பற்றி நாம் விரிவாக பார்ப்போம்.

முதல் மூன்று விஷயங்கள் அஸ்திவாரத்தைப் போன்றவை. கட்டடத்தைக் காப்பவை. இவை காப்பீடுகள் சார்ந்தவை.

காலவரையறையுள்ள ஆயுள் காப்பீடுத் திட்டம்(Term Insurance) தொடங்குவது.

மருத்துவக் காப்பீடுத் திட்டம்(Medical Insurance) தொடங்குவது.

அவசர கால நிதி(Emergency Fund) தொடங்குவது.

அடுத்த இரண்டு விஷயங்கள் கட்டடத்தை எழுப்பத் தேவையான வரைபடம் மற்றும் கட்டுமானப் பொருடங்கள் போன்றவை. கட்டடத்தை கட்டமைப்பவை. இவை முதலீடுகள் சார்ந்தவை.

நிதிக் குறிக்கோள்களை வரிசைப்படுத்துவது

நிதிக் குறிக்கோள்களுக்கு முதலீடு தொடங்குவது

இவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

காலவரையறையுள்ள ஆயுள் காப்பீடுத் திட்டம் தொடங்குவது - சம்பாதிக்கும் நபர் திடீரென இறந்து விட்டால், குடும்பத்தின் நிதி நிலைமையைக் காப்பதற்கு இந்த கால வரையறையுள்ள ஆயுள் காப்பீடுத் திட்டம் உதவும். திருமணம் ஆகாமல் பெற்றோர் மட்டும் சார்ந்து இருந்தால் கூட, திருமணம் ஆன பிறகு மனைவி, மக்கள் உங்களைச் சார்ந்திருப்பர்.

மேலும் வீட்டுக் கடன் போன்றவையும் சேர்ந்திருக்கும்.‌ எனவே, எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, வருடாந்திர சம்பளத்தைப் போல், 20 முதல் 25 மடங்கு கால வரையறையுள்ள காப்பீடுத் திட்டம் எடுப்பது நலம்.‌ உதாரணமாக, உங்களது வருடாந்திர சம்பளம் 5 இலட்சம் எனில், 1 கோடி முதல் 1.25 கோடி வரை காலவரையறையுள்ள காப்பீடுத் திட்டம் எடுப்பது நலம்.

இளம் வயதில் காப்பீடுத் தவணை குறைவாக இருக்கும்.‌ இதன் மூலம், சம்பாதிக்கும் நபர் இறந்தால் கூட, நிதி நெருக்கடிகள் இன்றி கடன் வாங்காமல் குடும்பத்தைக் கையாள முடியும்.

மருத்துவக் காப்பீடு தொடங்குவது- வருடா வருடம் மருத்துவத்திற்கான பணவீக்கம் 14% அதிகரிப்பதாக ஆக்கோ இந்தியா மருத்துவக் காப்பீடு குறியீடு 2024 தெரிவிக்கிறது.

நிதி மேலாண்மை - Financial Planning
நிதி மேலாண்மை - Financial PlanningImage credit: Gemini

எனவே, மருத்துவம் சார்ந்த பெரிய செலவுகளைக் கடன் வாங்காமல் கையாள மருத்துவக் காப்பீடு உதவும். மருத்துவக் காப்பீடு மூன்று வகைப்படும்.

1.அடிப்படைக் காப்பீடு (Basic Insurance)

மேலடுக்குக் காப்பீடு (Top Up Insurance)

மிக மேலடுக்குக் காப்பீடு(Super Top Up Insurance).‌

அடிப்படைக் காப்பீடு போக மீதம் உள்ள மருத்துவச் செலவுகளுக்கு மேலடுக்குக் காப்பீடு, மிக மேலடுக்குக் காப்பீடு உதவும். அடிப்படைக் காப்பீடு குறைந்தபட்சம் 10 முதல் 15 இலட்சம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். மிக மேலடுக்குக் காப்பீடு 50 இலட்சம் முதல் 1 கோடி வரை எடுத்துக் கொள்வது நலம்.

மிக மேலடுக்குக் காப்பீடுத் தவணை குறைவாக இருக்கும். சிறிய வயதில் மருத்துவக் காப்பீடுத் தவணை குறைவாக இருக்கும். வயதானவர்களுக்கு காப்பீடுத் தவணை அதிகம்.

எனவே, பெற்றோர்களுக்கு தனியாக மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய மருத்துவக் காப்பீடுகளின் மூலம் மருத்துவம் சார்ந்த பெரிய செலவுகளை நிதி நெருக்கடிகள் இன்றி கடன் வாங்காமல் கையாள முடியும்.

அவசரக்கால நிதி தொடங்குவது- வீட்டில் திடீர் மராமத்து வேலைகள், வாகனம் திடீரென பழுதாவது, வீட்டில் சம்பாதிக்கும் நபர் திடீரென நோய்வாய்ப்படுவது போன்ற அவசரகால சந்தர்ப்பங்களில் கடன் வாங்காமல் கையாள அவசர கால நிதி உதவும்.

அவசர கால நிதி குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் என தொடங்கி மூன்று முதல் ஆறு மாதங்களுக்கானச் செலவை அவசரகால நிதியாக வைத்திருக்க வேண்டும்.‌ இதனை எளிதில் எடுக்குமாறு வங்கியின் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், அவசர காலச் செலவுகளை நிதி நெருக்கடிகள் இன்றி கடன் வாங்காமல் கையாள முடியும்.

நிதிக் குறிக்கோள்களை வரிசைப்படுத்துவது - உங்களது நிதிக்குறிக்கோள்களை குறுகிய கால (5 வருடங்களுக்கு உட்பட்ட), நடுத்தர கால(5 முதல் 10 வருடங்களுக்கு உட்பட்ட), நீண்ட கால(10 வருடங்கள் தாண்டிய) என்று வகைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வட்டிச் சுமையை எளிதில் குறைத்து கடனில் இருந்து சீக்கிரம் வெளிவருவது எப்படி?
நிதி மேலாண்மை - Financial Planning

இவ்வாறு வகைப்படுத்தும்போது, அதற்கு ஏற்றவாறு நீங்கள் உங்களது முதலீடுகளைச் செய்து கொள்ளலாம். இது கட்டடத்திற்கான வரைபடம் போன்றது. கட்டடத்தில் வசிக்கப் போகும் நபர்கள் எவ்வளவு பேர், அவர்களுக்கு எவ்வளவு படுக்கையறை தேவை, கூடம் எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்று பல்வேறு விஷயங்கள் வரைபடத்தில் இருப்பதுபோல் நிதிக்குறிக்கோள்கள் உங்களது கட்டடத்தை முடிவு செய்கின்றன.

குறிக்கோள்களுக்கு ஏற்ற முதலீட்டினைச் செய்வது - எந்த ஒரு முதலீட்டிற்கும் மூன்று கூறுகள் உண்டு.

1.பணம் வளரும் விகிதம் (Rate of Return)

2.பணத்தை இழக்கும் அபாயம் (Risk)

3. நீர்ப்புத்தன்மை (Liquidity)

நமது குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறுகிய காலக் குறிக்கோள் களுக்கு வைப்பு நிதிகள் சிறப்பானவை. நடுத்தர காலக் குறிக்கோள்களுக்கு கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. நீண்ட காலக் குறிக்கோள்களுக்கு பங்குச்சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகள் சிறப்பானவை. குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினை மாதா மாதம் செய்யவேண்டும்.

இதையும் படியுங்கள்:
சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? கடன் வாங்குவது எப்படி லாபம்!
நிதி மேலாண்மை - Financial Planning

இந்த ஐந்து விஷயங்களையும் படிப்படியாக செய்வதற்கு பட்ஜெட் அதாவது நிதி திட்டமிடல் அவசியம். முதலில் எளிமையாக 50/30/20 என்ற பட்ஜெட்டைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 50% சதவீதம் உணவு, இருப்பிடம் போன்ற தேவைகளுக்கு, 30% வெளியே உணவருந்துதல், திரைப்படம் செல்வது போன்ற வேண்டல்களுக்கு, 20% காப்பீடுகள் மற்றும் முதலீடுகளுக்கு. இந்த 20% ஒதுக்கப்பட்ட தொகையைக் கொண்டு இந்த ஐந்து விஷயங்களையும் நீங்கள் உடனே செய்ய தொடங்க வேண்டும்.

இவற்றின் மூலம் உங்களது நிதி கட்டடம் பலமான அஸ்திவாரத்துடனும், சரியான வரைபடத்துடனும், சரியான கட்டமைப்புடன் அருமையாக அமையும். இந்த நிதி கட்டடத்தில் நீங்கள் நிம்மதியாக வாசம் செய்யலாம்.

உங்களது நிதிக்குறிக்கோள்கள் வெற்றியடைய வாழ்த்துகள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com