வட்டிச் சுமையை எளிதில் குறைத்து கடனில் இருந்து சீக்கிரம் வெளிவருவது எப்படி?

கடன் வாங்கும் முன் செய்ய வேண்டிய முக்கிய திட்டமிடல்.
கடன் வாங்குவது - loan management tips
கடன் வாங்குவது - loan management tips
வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

Venkataraman Ramasubramanian (வெங்கடராமன் ராமசுப்ரமணியன்) பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மூத்த தொழில்நுட்ப கட்டமைப்பாளராகப் பணிபுரிகிறார். தமிழில் இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழ்க் கோராவில் சான்றமை எழுத்தாளர் விருது பெற்றவர். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம், வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம், யோகாவில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பரிசு வென்றுள்ளார். வேதாத்திரி மகரிஷி மனவளக்கலையில் துணைப் பேராசிரியராக சேவை செய்து வருகிறார். எழுத்துக்கலை, தனிமனித நிதி, தமிழ் ஆர்வலர்.

Updated on

ரு செயலில் இறங்குவதற்கு முன்பு அதனைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு இறங்கவேண்டும். இதைத்தான் ஆழம் தெரியாமல் காலைவிடாதே என்ற பழமொழியில் கூறுவார்கள். அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்தை உடைப்பதற்கு தெரிந்திருந்தது. ஆனால், அதிலிருந்து வெளியே மீண்டு வருவதற்கு தெரியவில்லை. எனவே, நாம் கடன் என்ற குழியில் இறங்குவதற்கு முன்பு, பின்வரும் கேள்விகளைக் கேட்டு கடனில் இறங்குவதற்கும் மேலும் வெளிவருவதற்கும் திட்டமிட்ட பிறகே கடனில் இறங்க வேண்டும்.

கடனில் இறங்குவதற்கு முன்பு கேட்க வேண்டிய 8 கேள்விகள்.

1. இந்தக் கடன் எனக்கு தேவையா?

எந்த ஒரு கடனும் தேவையை சார்ந்து அமையவேண்டும்.‌ விருப்பத்தைச் சார்ந்து அமையக்கூடாது. உதாரணமாக, கல்விக்காக கடன் வாங்குவது, வீட்டுக் கடன் வாங்குவது போன்றவை தேவை சார்ந்த கடன்கள். மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல கடன் வாங்குவது என்பது விருப்பம் சார்ந்த கடன்.

2. இந்தக் கடனை என்னிடம் இருக்கும் பணத்தைக் கொண்டே அல்லது மற்ற வாய்ப்புகளைக் கொண்டே தவிர்த்துக் கொள்ள முடியுமா?

கடன் வாங்க தேவைப்படும் பணத்தை வீட்டில் உள்ள அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதன் மூலம், ஏற்கனவே செய்த முதலீடுகளைப் பணமாக மாற்றுவதன் மூலம் தவிர்த்துக்கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமான்களை விற்று பணம் திரட்டுவது. அலுவலகத்தில் அடுத்த மாதத்தின் சம்பளத்தை இப்போதே பெறுவது.

3. இந்தக் கடனை நான் பணத்தைச் சேமித்து தவிர்க்க முடியுமா?

மாதாமாதம் பணத்தை வங்கியில் சேமித்து தேவைப்படும் பணத்தை தயார் செய்து, கடனைத் தவிர்த்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கவேண்டும். உதாரணமாக, வருடா வருடம் தீபாவளிக்கு தேவைப்படும் பணத்தை மாதா மாதம் சேமிப்பது.

4. இந்தக் கடனை என்னால் குறைத்துக்கொள்ள முடியுமா?

கடனுக்கான பணத்தைக் குறைப்பதற்கு, கடனுக்கான தேவையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஆறு இருக்கை சிற்றுந்து வாங்குவதற்கு பதிலாக நான்கு இருக்கை சிற்றுந்து வாங்குவதன் மூலம் சிற்றுந்துக் கடனைக் குறைக்க முடியும்.

5. இந்தக் கடன் மாதா மாதம் தாங்கும் அளவிற்கு உள்ளதா?

ஒருவரின் கடன்களின் மொத்த மாதாந்திர தவணைத் தொகை அவரது மாதாந்திர சம்பளத்தில் 25% முதல் 30% க்கு உள்ளாக இருக்கவேண்டும். அதன் மூலம் அவருக்கு கடன் சுமை மாதாந்திர வாழ்க்கையை பாதிக்காத அளவிற்கு இருக்கும். எனவே, கடன் வாங்கும்போது மொத்த கடன் தவணைத் தொகை 25% முதல் 30% க்குள்ளாக இருக்குமாறு கடன் வாங்க வேண்டும்.

கடன் வாங்குவது - loan management tips
கடன் வாங்குவது - loan management tips

6. இந்தக் கடனை நான் எவ்வாறு குறைந்த பண இழப்பில் பெறமுடியும்?

அடமானக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவு. ஏனென்றால், அந்தக் கடன்கள் ஒருவேளை திருப்பி செலுத்தப்படாவிட்டால் அடமான பொருளைக் கொண்டு, நிதி நிறுவனத்தால் பணத்தைப் பெறமுடியும். உதாரணமாக, தங்கக் கடன் போன்றவை. மேலும், எந்த வங்கியில் கடனுக்கு வட்டி விகிதம் குறைவாக இருக்கிறது, வட்டி விகிதம் மாறாததா அல்லது மாறக்கூடியதா என்று கண்டு மாறாத வட்டி விகிதத்தை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்க வேண்டும்.

கடனின் பரிசீலனைத் தொகை எவ்வளவு, முன்கூட்டியே கட்டினால் அபராதத் தொகை எவ்வளவு, கடன் சார்ந்த மற்ற கட்டணங்கள் எவ்வளவு என்று கணக்கில் கொண்டு கடனின் மொத்தத் தொகையை கணக்கிட வேண்டும். குறைந்த மொத்தத் தொகையைக் கொண்ட கடனை வாங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாதக் கடைசியில் கடன் வாங்காம வாழணுமா? இந்த 7 எளிய வழிகளை ட்ரை பண்ணுங்க!
கடன் வாங்குவது - loan management tips

7. இந்தக் கடனை வேலை இழப்பு, உடல்நலக் குறைவு போன்ற அவசரகாலங்களில் எவ்வாறு கையாள முடியும்?

வேலை இழப்பு, வீட்டின் திடீர் மராமத்து செலவு, உடல்நலக் குறைவு போன்ற காலங்களில் கடன் தவணை செலுத்தவில்லை என்றால் கடன் நிறுவனத்திற்கு பதில் சொல்ல நேரிடும். எனவே, இத்தகைய அவசர காலங்களில் கடன் தவணையைச் சமாளிக்க போதுமான அளவு அவசர கால நிதி உள்ளதா என்று சரிபார்த்துக் கொண்டு கடனில் இறங்க வேண்டும்.

அத்தகைய அவசரகால நிதி இல்லை என்றால் அதனை தயார் செய்து விட்டு கடனில் இறங்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கான செலவை அவசரகால நிதியாக வைத்திருப்பது அவசியம்.

8. இந்தக் கடனில் இருந்து நான் எவ்வாறு சீக்கிரம் வெளியேற முடியும்?

மாதாந்திர தவணை தொகை செலுத்துவது போக, எவ்வாறு அதிக தொகையை கடனில் அசலை நோக்கி திருப்பி கடனை சீக்கிரமாக அடைக்க திட்டமிட வேண்டும்.‌ அலுவலகத்தின் பதவி உயர்வு, முதிர்ச்சி அடையும் முதலீடுகள் போன்ற அதிக பண வரவுகளை பயன்படுத்திக் கொண்டு கடனிலிருந்து எவ்வாறு சீக்கிரம் வெளியேற முடியும் என்று திட்டமிட வேண்டும்.

நீண்ட காலவரையறைக் கடனைவிட குறைந்த காலவரையறைக் கடன்களில் நாம் சீக்கிரமாக கடனில் இருந்து வெளியேறுவதால், அவை சிறப்பானவை. உதாரணமாக, 30 ஆண்டுகள் வீட்டுக் கடனை விட, 15 ஆண்டுகள் வீட்டுக் கடன் சிறப்பானது. அதில் வட்டியாக இழக்கும் பணம் குறைவாக இருக்கும்.

ஒருவேளை கடன் வாங்கிவிட்டால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைக்கப் பார்க்க வேண்டும். கடன் இல்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.

இதையும் படியுங்கள்:
கழுத்தை நெரிக்கும் கடன் சுமை? தப்பிக்க இந்த 5 ஈஸி ஐடியாஸ் போதும்!
கடன் வாங்குவது - loan management tips
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com