
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமுதம் பெற கடைந்தபோது அதிலிருந்து தோன்றியவள் மகாலட்சுமி. மகாலட்சுமி தாயார் வைகுண்டத்தில் ரமா தேவி, பாதாள உலகில் நாகலட்சுமி, சொர்க்கத்தில் சொர்க்க லட்சுமி, ராஜாக்களிடம் ராஜலட்சுமி, விலங்குகளிடத்தில் சோமாலட்சுமி, வேத காலத்தில் ஸ்ரீ வசுந்தரா, ஸ்ரீ பிரிதிவி எனும் பெயர்களால் குறிப்பிடப்படுகிறாள்.
* திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் மகாலட்சுமி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளாள். அச்சநீதிக்கு எதிரே உள்ள லட்சுமி தீர்த்தத்தில் இருந்தே பூஜைக்குரிய நீர் எடுக்கப்படுகிறது.
* பத்ரிநாத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் கோயில் சிலை சாளக்ராமத்தால் ஆனது.
* புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலில் மகாலட்சுமி அஷ்டபுஜ மகாலட்சுமி என்னும் பெயரில் தேவி மகாத்மிய வர்ணனைப்படி காட்சி தருகிறாள்.
* கேரள மாநிலம், பள்ளிப்புழா எனும் ஊரில் உள்ள மலையாள மகாலட்சுமி கோயிலில் முதலை மகாலட்சுமிக்கு வாகனமாக உள்ளது.
* மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் புகழ் பெற்ற மகாலட்சுமி கோயில் உள்ளது. சிம்ம வாகனத்தில் சென்று, கோலாசுரனை வதம் செய்த இடம் இது. இங்கு அன்னை கருப்பு நிற ரத்தினக் கல்லால் ஆன சதுர பீடத்தில், ஆதிசேஷன் குடை பிடிக்க, அமுதசுரபியை கரத்தில் ஏந்தி, நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
* ஆந்திர மாநிலம், மங்களகிரி மலை மேல் உள்ள நரசிம்மர் கோயிலில் மகாலட்சுமி ஆபரணங்கள் ஏதும் இன்றி தவக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
* திருகொல்லம்பூதூரில் உள்ள சிவன் கோயில் நந்தவனத்தின் மையத்தில் மகாலட்சுமிக்கு தனிக் கோயில் உள்ளது.
* கேரளாவில் ஆதிசங்கரருக்காக மகாலட்சுமி ஏழைப் பெண் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளைப் பொழிந்த வீடு சொர்ணத்துமனை இன்றும் பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது.
* பெங்களூருவில் மகாலட்சுமிக்கு தனிக் கோயில் உள்ளது. அதனால் அந்தப் பகுதி மகாலட்சுமி லே அவுட் என்று அழைக்கப்படுகிறது.
* செங்கல்பட்டு மாவட்டம், அரசர்கோவிலில் மகாலட்சுமி ஆறு விரல்களுடன், ‘சுந்தர மகாலட்சுமி’ எனும் பெயரில் எழுந்தருளி உள்ளாள்.
* மும்பை, ஹேதவடே கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோயில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் திறக்கப்படுகிறது. ஒரு பாறையே இங்கு மகாலட்சுமியாக வணங்கப்படுகிறது.
* ராமேஸ்வரம் கோயில் பிராகாரத்தில் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயாருக்கு முன்பு ஒரு சிவலிங்கம் உள்ளது. ஸ்ரீராமனின் பிரம்மஹத்தி தோஷம் போக்கிய ஈசனை மகாலட்சுமி வணங்கிய கோலம் இது.
* திருமாலையும் திருமகளையும் நீரில் தரிசித்த சமுத்திர ராஜனுக்கு, நிலத்தில் திருமால், திருமகளோடு காட்சி தந்த ஊர் திருநின்றவூர் ஆகும்.
* நாமக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் மாலையில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
* மும்பை, மலபார் குன்று அடிவாரத்தில் பிரீச் காண்டி என்னும் இடத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி, துர்கையோடு எழுந்தருளியுள்ளார். மும்பையின் செல்வ செழிப்புக்கு இந்த மகாலட்சுமியே காரணம் என்கிறார்கள் பக்தர்கள்.
* திருப்பதி, திருச்சானூரில் மகாலட்சுமியே அலர்மேல் மங்கை தாயாராகக் கோயில் கொண்டுள்ளார்.
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்: பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், கோலங்கள், சந்தனம், வாழை இலை, மாவிலை தோரணம், தாம்பூலம், வாசம் மிக்க மலர்கள், விளக்குகள், யானை முகம், பசுவின் பின்புறம், குதிரை, கண்ணாடி, உள்ளங்கை ஆகியன ஆகும்.
தேவேந்திரன், தான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்காக மகாலட்சுமியை வேண்டி துதித்ததுதான் மகாலட்சுமி அஷ்டோத்திரம் ஆகும். நாமும் மகாலட்சுமியை துதித்து செல்வ வளம் பெறலாம்.