இந்த 7 படிநிலைகளைத் தாண்டினால்தான் நீங்கள் நிதி சுதந்திரம் பெறுவீர்கள்!

financial freedom
financial freedom

உணவு உடை இருப்பிடம் தாண்டி ஒவ்வொரு உயிருக்கும் அடுத்தபடி தேவையானது சுதந்திரம். கருத்து சுதந்திரம், பேச்சு எழுத்துக்களில் சுதந்திரம், உணர்வுகளை வெளியிடுவதில் சுதந்திரம் என்று பல்வேறு சுதந்திரங்கள் ஒரு மனிதனுக்குத் தேவையாய் உள்ளன. அதிலொன்று நிதிச் சுதந்திரம். இப்பதிவு அதைப் பற்றி தான் பேசுகிறது.

நிதிச் சுதந்திரம் என்பதென்ன?

நிலையான வேலையோ/ வெற்றிகரமான சுய தொழிலோ கைவசம் இருக்கிறது; நன்றாக சம்பாதிக்கிறோம்; சொந்த காலில் நிற்கிறோம்; யாரிடமும் அனுமதி பெற்றுச் செலவு செய்யவேண்டியதில்லை; அதனால் நமக்கு நிதிச் சுதந்திரம் உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

வேலைக்குச் செல்லாமல் யாரையும் சாராமல், வாழ்நாள் முழுமைக்குமான செலவுகளைச் செய்துகொள்ளும் அளவுக்கான வருமானமோ சொத்தோ நம்மிடம் இருக்குமாயின், அப்போது தான் நிதிச் சுதந்திரமடைந்தவராக நம்மை நாமே சொல்லிக்கொள்ளலாம்.

மேற்கண்ட வரையறையை இன்னும் சற்று ஆழமாகச் சென்று புரிந்து கொள்வோம். உங்களுக்கு 30 வயது என்று வைத்துக்கொள்வோம். இன்னும் 30 வருடங்கள் நீங்கள் வாழ்வீர்கள் என்றால், அதுவரை நீங்கள் வேலைக்கே செல்லாவிட்டாலும் எந்த விதத்திலும் வருமானம் வரும் செயல்களை நீங்கள் செய்யாவிட்டாலும், யாரையும் சார்ந்திராவிட்டாலும், உங்கள் தேவைகளை உங்கள் செலவுகளை உங்களால் எந்த சிரமமும் இன்றி செய்துகொண்டு வாழ முடியுமானால் அதற்கான நிதி உங்களுக்குத் தங்கு தடை இல்லாமல் வந்துகொண்டிருக்குமானால் நீங்கள் நிதிச் சுதந்திரமடைந்த நபர்.

எப்படி எங்கிருந்து அந்த பணம் வரும்? உங்களுக்குப் பூர்வீக சொத்து இருந்தாலோ, அதிலிருந்து வருமானம் வந்தாலோ, வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை இருந்தாலோ, உங்களால் சமாளித்துக்கொள்ள முடியும் தானே!

ஆக நிதிச் சுதந்திரம் என்பதைச் செலவுகள் தான் தீர்மானிக்கிறது. இந்த நிதிச் சுதந்திரத்தை அடையத் தேவையான நிதி எவ்வளவு என்பதைக் கண்டறிய பல நுணுக்கங்கள் உள்ளன. பொதுப்படையாக உங்களிடம் இத்தனை பணம் இருந்தால் உங்களுக்கு நிதிச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒரே போல் வாழ்வதோ செலவுகள் செய்வதோ இல்லையே. வாழும் முறையும் மனப்பான்மையும் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றன.

நிதிச் சுதந்திரத்தை நோக்கிய 7 படிநிலைகள்:

நிதிச் சுதந்திரத்தை 7 படிகளில் ஏறி அடையலாம் என்கிறது பொருளாதாரவியல்.

முதல் படி: தெளிவு

பொருளாதார நிலையில் நாம் இப்போது எங்கிருக்கிறோம்; எங்கு செல்ல விழைகிறோம் என்று முதலில் தெளிவாகிக் கொள்ள வேண்டும்.

இரண்டாம் படி: தன்னிறைவு

நம் நிதித் தேவைகளுக்காக யாரையும் சார்ந்திராமல் முழுக்க முழுக்க நாமே சமாளிக்கும் நிலைக்கு உயருதல் அடுத்த கட்டம்.

மூன்றாம் படி: கடனற்ற நிலை

மாதாமாதம் கட்ட வேண்டிய தவணைகளோ கடனோ ஏதுமில்லாத நிலைக்கு முன்னேறுதல்.

நான்காம் படி: ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு

திடீர் செலவுகளையும் கடன் வாங்காமல் சமாளிக்கும் அளவுக்கான நிதி கையிருப்பில் இருக்கும்படியான பாதுகாப்பு நிலைக்கு உயர்த்திக்கொள்ளுதல்.

ஐந்தாம் படி: நெகிழ்வுத்தன்மை

2 ஆண்டுகளுக்குக்கான செலவுகளைச் சமாளிக்கும் அளவு தேவையான நிதி சேர்த்து விட்ட நிலை. ஓராண்டு வரை வருமானமின்று சமாளிக்க முடியும் என்ற நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டால் நாம் நிதிச் சுதந்திரத்தை நோக்கிய ஐந்தாவது படிக்கு வந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

ஆறாம் படி: சுதந்திரம்

உங்களின் கையிருப்பில் உள்ள சொத்தும் நிதியும் அதிலிருந்து வரும் வருமானமுமே வாழ்வதற்குப் போதும். இனி வருமானம் ஈட்டுவதற்காக உழைத்தாகவேண்டிய நிர்பந்தம் இல்லை என்ற நிலைக்கு வந்து சுதந்திரம் அடைதல்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தில் முதலீடு செய்ய இவ்வளவு வழிகள் உள்ளதா? அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே! 
financial freedom

ஏழாம்/கடைசி படி: நிதி மிகுதி

மொத்த வாழ்நாளுக்கும் தேவை என்று நீங்கள் எதிர்பார்க்கும் நிதி உங்களிடம் உள்ளது என்றால் வாழ்த்துகள்!! நீங்கள் நிதிச் சுதந்திரம் பெற்றுவிட்டீர்கள்.

மேற்கண்ட படிநிலைகள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை. தன்னுடைய நிதித் தேவை என்னவென்பதை அவரவர் தான் நிர்ணயம் செய்ய வேண்டும். மொத்தத்தில் ஒரு மாதம் நமக்கு செலவு செய்ய எவ்வளவு பணம் தேவை என்பதைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் மீதமுள்ள மொத்த வாழ்நாட்களுக்கும் உடனிருப்பவர்களுக்கும், சுற்றுலாக்களுக்கும், திடீர் அவசர செலவுகளுக்கும் சேர்த்து எவ்வளவு தொகை வேண்டும் என்று கணக்கிட்டு அதை உருவாக்க உழைத்து நிதிச் சுதந்திரம் அடைவதை நோக்கிப் பயணப்படுவது அறிவுக்கூர்மையாக இருந்து செய்யவேண்டிய ஒரு பணியாகும். இது முழுக்க முழுக்க தனிப்பயனாக்கப்படக்கூடிய ஒன்றாகும். "பொறுப்புணர்வே சுதந்திரத்தின் விலை" என்ற எல்பர்ட் ஹப்பார்ட் அவர்களின் வரிகளின் படி நிதிச் சுதந்திரத்தை அடைய பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com