
அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளில் அதிக வட்டி கிடைக்கும் திட்டம் என்றால் அது பிக்சட் டெபாசிட் தான். அதிக பணம் வைத்திருக்கும் பலரது கவனமும் பிக்சட் டெபாசிட் முதலீட்டில் தான் இருக்கும். இருப்பினும் அதிகபட்சமாக எவ்வளவு பணத்தை பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது. அவ்வகையில் இத்திட்டத்திற்கு ஏதேனும் உச்ச வரம்பு இருக்கிறதா என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
நம்மிடம் இருக்கும் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், எதிர்காலத்தை சிறப்பானதாக அமைத்துக் கொள்ள முடியும். விலைவாசி உயர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பும், முதலீடும் அவசியம் தேவை. இதனைக் கருத்தில் கொண்டு தான் பொதுமக்கள் பலரும் முதலீட்டுத் திட்டங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கேற்ப பல முதலீட்டுத் திட்டங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும் பாதுகாப்பான முதலீட்டுக்கு ஏற்ற திட்டம் என்றால் பலருக்கும் முதல் தேர்வாக இருப்பது பிக்சட் டெபாசிட் தான்.
ஒவ்வொரு வங்கியிலும் பிக்சட் டெபாசிட் முதலீட்டிற்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும். மேலும் முதிர்ச்சி காலத்திற்கு ஏற்பவும் வட்டி விகிதம் மாறும். இருப்பினும் வங்கிகளில் சாதாரண மக்களைக் காட்டிலும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் சற்று அதிகமாகும். அஞ்சல் அலுவலகங்களில் 5 வருட பிக்சட் டெபாசிட்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. வங்கிகளை ஒப்பிடும் போது அஞ்சல் அலுவலகத்தில் வட்டி விகிதம் அதிகம் தான்.
பிக்சட் டெபாசிட் முதலீட்டுக்கு உச்ச வரம்பு என்று எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு பணத்தை முதலீடு செய்தாலும் வங்கிகளுக்கும், அஞ்சல் அலுவலகங்களுக்கும் மகிழ்ச்சி தான். இருப்பினும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையானது ஒரு குறிப்பிட்ட அளவைக் கடந்தால், அதற்கு வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். மூத்த குடிமக்கள் ஈட்டுகின்ற வட்டியானது ஒரு வருடத்திற்கு ரூ.50,000-க்கு அதிகமானால் 10% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். சாதாரண மக்களுக்கு வட்டித்தொகை ரூ.40,000-க்கு அதிகமானால் 10% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கு அதிக வட்டியை அளிக்கின்றன என்பதால், பொதுமக்கள் பயன்படுத்திக் கொளவது நல்லது.
அஞ்சல் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட்டுக்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000. மேலும் முதலீட்டின் தொகை 100 இன் மடங்குகளில் இருக்க வேண்டும். வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டுக்கான குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும். இந்தத் தொகை வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், சிலரிடம் மொத்தமாக முதலீடு செய்ய பணம் இருக்காது. இவர்கள் முதலில் மாதந்தோறும் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து வர வேண்டும். இந்தத் திட்டத்தின் முதிர்ச்சித் தொகையை, அப்படியே பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். நமது முதலீட்டை விரைவாக இருமடங்காக மாற்றுவதற்கு பிக்சட் டெபாசிட் திட்டம் கைகொடுக்கிறது. முதலீடு செய்ய நினைத்து விட்டால், காலம் தாழ்த்தக் கூடாது. நீங்கள் தாமதித்தால் உங்களுக்கான பலன்கள் குறையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.