

அந்தந்த மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றன. அதற்காக மத்திய அரசிடமிருந்து அல்லது மாநில அரசிடம் இருந்து எவ்வளவு நிதி வருகிறது என்பதை குடிமக்கள் எப்படி அறிந்துகொள்ளலாம்?
நிதி பகிர்வுகள் (Financial distributions) - இதற்கு ‘திறந்த அரசாங்க தரவு’ (Open Government Data (data.gov.in)) தளம் ஒரு மையக் களஞ்சியமாக செயல்படுகிறது. அங்கு குடிமக்கள் நிதி ஒதுக்கீடு, விநியோகங்கள், திட்டங்களின் முன்னேற்றம் குறித்த தரவு(Datas) தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல் ‘National Data and Analytics Platform’, ‘Comptroller and Auditor General (CAG)’ போன்ற தளங்களில் துறைவாரியான தகவல்கள் மற்றும் அதற்காகச் செய்யப்படும் செலவினங்களைப்(Expenses) பார்க்கலாம். இவை மூலம் திட்டங்களுக்குத் தேவையான நிதிகள் அந்தந்த அமைச்சகங்கள், மாநிலங்களுக்கு இடையே எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
தனியார் முதலீடுகள் (Private Investments) அரசு முதலீடுகளைத் தாண்டி திட்டங்களுக்குப் பெறப்படும் வெளிப்புற முதலீடுகளைப்(external investments) பற்றி ‘இந்திய முதலீட்டு’ (india investment grid.gov.in) தளத்தில் ‘National Infrastructure Pipeline’ என்ற பெயரில் பார்க்கலாம். இதில் உள்நாட்டு வங்கிகள், சர்வதேச நிதி நிறுவனங்கள்(international financial institutions), தனியார் முதலீட்டாளர்களால் பொதுத்திட்டங்களுக்கெனக் கொடுக்கப்படும் நிதிகளைப் பட்டியலிடுகிறது.
இப்படி உள்ளூர் கூட்டுறவு வங்கிகள் முதல் உலக வங்கி அல்லது ஆசிய மேம்பாட்டு வங்கி(Asian Development Bank) மற்றும் ‘Japan International Cooperation Agency’ போன்ற உலகளாவிய நிறுவனங்களால் வழங்கப்படும் வெளிப்புற முதலீடுகள் வரை இங்கு நடக்கும் எந்தெந்தத் திட்டங்களை ஆதரித்துக்கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள குடிமக்களுக்கு உதவுகிறது. இதை அரசு அதிகாரப்பூர்வச் செய்தியாகவும் (Press Information Bureau.com) தளத்திலும் வெளியிடுகிறது.
திட்டம் முடிய காலதாமதம்...
தனியார் முதலீடுகளைப் பெரிதும் நம்பியிருக்கும் திட்டங்கள், சில நேரங்களில் (பெரும் ஊழலால் வரும்??) ஏற்படும் நிதி பற்றாக்குறையால், அரசியல் அல்லது நிர்வாகக் காரணங்களால் தாமதங்களுக்கு உட்படலாம் அல்லது முற்றிலும் நிறுத்தப்படலாம். இத்தகைய பிரச்னைகள் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு கோணங்களில் ஒரு எதிர்மறை விளைவை(Negative) ஏற்படுத்தும்.
சர்வதேசக் கடன் வாங்குதல் அதிகரித்து, திட்டங்கள் தேக்கமடைந்துகொண்டே இருக்கும்போது குடிமக்கள் மட்டுமே இதற்கான விளைவுகளை எதிர்கொள்கின்றனர். திட்டம் முழுமையாக முடியாமல் இருந்தாலும்கூட வாங்கிய கடனை அரசாங்கங்கள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். இது நாளடைவில் அடுத்தடுத்து வரும் ஆளும் அரசாங்கங்களுக்கு ஒரு பெரிய கடன் சுமையை உருவாக்குகிறது. இந்தக் கடன்களை ஈடுகட்ட அந்தந்த அரசுகளால் பல வரிகள் உயர்த்தப்படலாம், மானியங்கள் குறைக்கப்படலாம் அல்லது அத்தியாவசியச் சேவைகளில் இருக்கும் நிதி திருப்பி எடுத்துக் கொள்ளப்படலாம்..
வட்டியை வெளிநாட்டு நாணயத்தில் திருப்பிச் செல்லுத்துவதால் உள்ளூர் நாணயத்தைப் பலவீனப்படுகிறது. இது எரிபொருள், மருந்துகள், தொழில்நுட்பம் போன்ற இறக்குமதிகளை(Imports) அதிக விலைக்கு வாங்க வைக்கிறது; இறுதியில் இது சாமானியரின் வாழ்க்கைச் செலவுகளை அதிகரிக்கிறது. இதற்கிடையில் அந்தந்த மாநில அரசுகளால் வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளாக சொல்லப்பட்ட சிறந்த சாலைகள், வீட்டுவசதி அல்லது தரமான போக்குவரத்து போன்ற நன்மைகளைச் சாமானியர்கள் இழக்கலாம்.
இதனால் விலையுயர்ந்த தனியார் பழக்கவழக்கங்களுக்கு (costly private options) போகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம். இது மென்மேலும் செலவுகளை அதிகரித்து; அடுத்த தலைமுறைக்கும் இந்தக் கடனைச் சுமக்கவேண்டிய அழுத்தத்தை உருவாக்குகிறது.