ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..!

பிரதமர் மோடி டெல்லியில் ரூ.11,000 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 17-ந்தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி 2 பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். டெல்லியில் உள்ள ரோகினி பகுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான திட்டத்தினை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதன்படி துவாரகா விரைவுச்சாலையின் டெல்லி பிரிவு மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், அலிபூர்-டிச்சான் கலான் நகர்ப்புற விரிவாக்க சாலை-II (UER-II) திட்டம், மற்றும் ரூ.5,580 கோடி மதிப்பிலான பகதூர்கர், சோனிபட்டிற்கான புதிய இணைப்புகளுடன் கூடிய திட்டங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கண்காணிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை: 10 கிலோமீட்டர் இடைவெளியில் அதிநவீன கேமரா!
பிரதமர் மோடி

துவாரகா விரைவுச் சாலையின் டெல்லி பிரிவு மற்றும் நகர்ப்புற விரிவாக்கச் சாலை-II (UER-II) ஆகிய திட்டங்கள் தலைநகரின் நெரிசலைக் குறைக்கவும், இணைப்பை மேம்படுத்தவும், பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்கவும், டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைக் குறைக்கவும் அரசாங்கத்தின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

டெல்லி-என்.சி.ஆர். இடையே எப்பொழுதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த விரைவு சாலை திறக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் இனிமேல் நொய்டாவில் இருந்து விமான நிலையத்தை 20 நிமிடத்தில் சென்றடையலாம். டெல்லியின் புறநகர் பகுதிகளை இணைக்கும் 76 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையும் இன்று திறந்து வைக்கப்பட உள்ளது.

துவாரகா விரைவுச்சாலையின் 10.1 கி.மீ நீளமுள்ள டெல்லி பிரிவு சுமார் ரூ.5,360 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு யசோபூமி, டி.எம்.ஆர்.சி ப்ளூ லைன் மற்றும் ஆரஞ்சு லைன், வரவிருக்கும் பிஜ்வாசன் ரெயில் நிலையம் மற்றும் துவாரகா கிளஸ்டர் பஸ் டிப்போ ஆகியவற்றுக்கு இணைக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

10 கி.மீ நீளமுள்ள இந்த பகுதியில், 5.9 கி.மீ நீளம் ஷிவ் மூர்த்தி சந்திப்பிலிருந்து துவாரகா செக்டார்-21 வரை இருக்கும், அதே நேரத்தில் 4.2 கி.மீ தூரம் துவாரகா செக்டார்-21ஐ டெல்லி-ஹரியானா எல்லையுடன் இணைக்கும்.

துவாரகா விரைவுச்சாலையின் 19 கி.மீ நீளமுள்ள ஹரியானா பிரிவை பிரதமர் மோடி மார்ச் 2024-ல் திறந்து வைத்தார்.

பொதுமக்களுக்குத் திறக்கப்படும் இரண்டாவது திட்டம், அர்பன் எக்ஸ்டென்ஷன் ரோடு-II (UER-II)ன் அலிப்பூர் முதல் டிச்சான் கலான் வரையிலான பாதையாகும், இது சுமார் ரூ. 5,580 கோடி செலவில் கட்டப்பட்டது. இது டெல்லியின் உள் மற்றும் வெளிப்புற ரிங் சாலைகள் மற்றும் முகர்பா சௌக், தௌலா குவான் மற்றும் NH-09 போன்ற பரபரப்பான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மதுரை மக்களை மகிழ்விக்க வருகிறது வந்தே பாரத் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
பிரதமர் மோடி

நாட்டு மக்களின் வாழ்க்கை வசதியை மேம்படுத்தி, தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்து, தலைநகர் டெல்லியில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது போன்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை கீழ் இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com