
தங்க நகை கடன் என்பது, அவசர நிதித் தேவைக்காக உங்களிடம் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து, தங்களது நகைகளின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை, குறைந்த வட்டி விகிதத்தில், கடனாகப் பெறும் ஒரு வழிமுறையாகும். இது இந்தியாவில் பல காலமாக ஒரு பொதுவான நிதி உதவியாக உள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அடகு கடைகள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு நகைக்கடன் வழங்குகின்றன. வங்கிகள் உங்கள் நகைகளை மதிப்பீடு செய்து, அதன் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கடனாக வழங்குகின்றன.
இந்தியாவில் தங்கத்தின் மீது கடன் வாங்குவது என்பது மிக எளிமையான ஒன்றாகும். ஏழைகளும், நடுத்தர மக்களும் தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடமானம் வைத்து அவசர தேவைக்கு கடனாக பணத்தை வாங்கி கொள்வார்கள்.
அதுமட்டுமின்றி மற்ற கடன்களோடு ஒப்பிடும்போது தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியிலேயே உடனடியாக கடன் கிடைக்கும். இதனாலேயே அவசர தேவைக்கு உதவும் என்பதற்காக ஏழை எளியமக்கள் தங்களிடம் பணம் கிடைக்கும் போதெல்லாம் அதில் தங்கத்தை வாங்கி வைத்து கொள்கின்றனர். ஏனெனில் இந்த தங்கத்தை வைத்து தேவைப்படும் போது கடன் வாங்கி கொள்ளலாம் மற்றும் விஷேசங்களுக்கு அணிந்து கொண்டும் செல்லலாம் என்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கத்தை பயனுள்ள பொருளாகவே கருதுகின்றனர்.
அதேபோல் தங்கத்தை அடமானமாக பெறும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் தங்கம் என்பதால், நிச்சயம் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் கடனை திரும்ப செலுத்தி தங்கத்தை மீட்டு கொள்வார்கள் இல்லை என்றாலும் கவலையில்லை வங்கிகள் அந்த நகையை ஏலம் விட்டு கடன் தொகைகையை பெற்று கொள்ள முடியும் என்பதாலும் தங்க நகைக்கு அதிகளவில் கடன் கொடுக்க முன்வருகின்றன.
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு தகவலில் இந்தியாவில் தங்கத்தின் மீது கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறுகிறது. தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவது என்பது மிகப்பெரிய ஒரு மாய வலை. நம்மில் பெரும்பாலானவர்கள் அதனை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம் என்பது தான் உண்மை. சில குடும்பங்களில் ஒரு குறுகிய கால தேவைக்காக அடகு வைக்கக்கூடிய தங்கம் பின்னர் அவர்கள் கையை விட்டே சென்று விடக் கூடிய நிலையை உண்டாகி விடுகிறது.
தற்போதைய ஆர்பிஐ விதிமுறைப்படி நகையை அடமானம் வைத்து கடன் வாங்கியவர்கள் ஒரு வருடத்திற்குள் முழு தொகையையும் செலுத்திய பின்னரே நகைக்கடனை ரெனிவல் (Renewal) செய்ய முடியும். நகைக்கடன் முழுவதையும் செலுத்த பணம் இல்லாத போது மற்றொரு நகையை அடமானம் வைத்து பழைய நகையை ரெனிவல் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் போன முறையை விட இந்த முறை தங்கத்தின் விலை உயர்வு காரணமாக அதிக தொகை கடனாக கிடைக்கும். ஆனால் அதற்கு ஏற்ப நீங்கள் செலுத்தும் வட்டியும் அதிகமாக இருக்கும்.
அந்த கடனை அடைக்கும் அளவிற்கு உங்கள் வருமானம் உயராத போது இந்த வட்டிக்காக நீங்கள் கூடுதலாக பணம் ஒதுக்கிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதுமட்டுமின்றி ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் என இப்படி தங்க நகை கடன் என்பது ஒரு முடியாத விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் தான் இந்தியாவில் தங்க கடன் என்பது வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு வணிகமாக மாறி விட்டது என்றே சொல்லலாம்.
தங்க நகை கடன் என்பது தொடக்கத்தில் எளிமையானதாக தோன்றினாலும் , அது மீண்டும் மீண்டும் உங்களை அடகு வைக்க தூண்டி மீண்டும் மீண்டும் உங்களை கடனாளியாக மாற்றி விடும் என்பதை மறக்க வேண்டாம். ஒரு கட்டத்தில் அந்த தங்கத்தின் மதிப்பை விட நீங்கள் திரும்ப செலுத்திய வட்டியே அதிகமாக இருக்கும். இறுதியில் நீங்கள் அடமானம் வைத்த நகையை திருப்ப முடியாமல் நகையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
மாதம்தோறும் வரக்கூடிய செலவுகளுக்காக தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்குவது முட்டாள்தனம். அதாவது குழந்தைகளின் பள்ளி கட்டணம் , வீட்டு வாடகை, அவசர தேவை, தவணைக்கு வாங்கிய பொருட்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கு என இதுபோன்ற செலவுகளுக்கு தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கினால் உங்களால் நிச்சயமாக அந்த தங்கத்தை மீட்டெடுக்கவே முடியாது என்பதை மறக்க வேண்டாம். ஏனெனில் மாதந்தோறும் வரும் செலவுகளை ஈடுகட்டவே உங்களுடைய வருமானம் சரியாக இருக்கும் போது எப்படி உங்களால் வட்டியை கட்டி தங்கத்தை மீட்டெடுக்க முடியும்.
அதேபோல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் உடனே கையில் உள்ள நகையை அடமானம் வைத்து மீண்டும் அதே தொழிலில் முதலீடு செய்வது தவறான முடிவு. இதனால் தொழிலும் நஷ்டமாகி நகையும் கைவிட்டு போய்விடும் நிலை ஏற்படலாம். அதே போல பங்குகளில் முதலீடு செய்வதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் தங்கத்தை அடகு வைப்பதும் சரியான முடிவல்ல. ஏனெனில் முதலீடு தோல்வியடைந்து விட்டால் தங்கம் உங்கள் கையை விட்டுப் போய்விடும் .
மிக மிக அவசரமான மருத்துவ தேவை இருக்கிறது எனும் பட்சத்தில் வேறு எந்த வழியிலும் பணம் கிடைக்கவில்லையெனில் நகையை அடகு வைத்து பணம் வாங்கலாம். அதேபோல் உங்களிடம் முறையான வருமானம் வருகிறது, வேறு கடன்கள் எதுவும் இல்லை எனும் பட்சத்தில் நிச்சயம் பட்ஜெட் போட்டு நகையை மீட்டு விடலாம் என்ற சூழல் இருந்தால் நகையை அடகு வைக்கலாம்.
ஏனெனில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் புதிய தங்க நகை வாங்க முடியாவிட்டாலும் இருக்கும் தங்கத்தை காப்பாற்றிக்கொள்வது நல்லது.