
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,060-க்கும், ஒரு சவரன் ரூ.80,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரிக்க அதிகரிக்க நாளுக்கு நாள் நகைக்காக திருட்டு சம்பவங்களும், கொலைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது தங்கத்தால் மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையே நிலவி வரும் சூழலில், சில மனிதாபிமான சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது.
21 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒருவரது 3½ சவரன் தங்க செயின் தற்போது அவருக்கு திரும்ப கிடைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேரியுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் 65 வயதான கதீஜா. இவர் தனது மகன் இப்ராஹிம் உடன் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வலாஞ்சேரி பெரியகுன்னு என்ற பகுதிக்கு பஸ்சில் சென்றிருந்த போது பஸ்சில் அவரது 3½ சவரன் தங்கச்சங்கிலி தொலைந்து போனது.
கதீஜா அந்த நகையை எங்கு தேடியும் கிடைக்காததால் மனமுடைந்த அவர் போலீசிலும் புகார் கொடுக்காமல் வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதீஜாவின் மகன் இப்ராஹிம் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்திருப்பதாகவும் அதை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இப்ராஹிம் கூரியர் நிறுவனத்திற்கு சென்று பார்சலை வாங்கி வந்து வீட்டில் பிரிந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். பெயரிடப்படாத அந்த பார்சலில் ஒரு கடிதமும், ஒரு தாளில் சுருட்டப்பட்ட நகையும் இருந்துள்ளது.
அந்த கடிதத்தில் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன உங்களது(கதீஜா) தங்க நகை அவருக்கு கிடைத்ததாகவும், அவருக்கு அப்போது இருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நகையை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியுடன் கடந்த 21 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், தற்போது அதற்கு பதிலாக 3½ சவரன் தங்கச்சங்கிலியை அனுப்பியுள்ளதாகவும் அதனை சந்தோஷமாக பெற்று கொண்டு தன்னை மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நகையை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த கதீஜா, இப்ராஹிம், அது உண்மையான தங்க நகை தானா என்பதை சோதித்து பார்த்ததில் அது உண்மையான தங்கம் தான் என உறுதியாகி உள்ளது. 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த நகை மீண்டும் வேறொரு வடிவில் கிடைத்ததால் அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இத்தனை ஆண்டுகள் கழித்து நகையை திரும்ப கொடுத்த அவரின் மனிதநேயத்தை பாராட்டினார்.
இதுகுறித்து இப்ராஹிம் கூறும் போது, 21 ஆண்கள் கழித்து தங்களது நகையை திருப்பி கொடுத்த அவருக்கு நன்றி தெரிந்த அவர், இதற்கு மேல் நகையை திருப்பி அனுப்பியவரை பற்றி அறிந்து கொள்ள விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தங்கம் விலை தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சவரனுக்கு ரூ.80,000ஐ தாண்டி விற்பனையாகும் சூழ்நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன நகையை எடுத்தவர், தவறு செய்திருந்தாலும், அதற்காக மனம் வருந்தி தற்போது உரியவருக்கே அந்த நகையை அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், அவரின் மனிதாபிமான செயல் பாராட்டப்பட வேண்டியதாகும்.