
தங்கம்! இது வெறும் உலோகம் மட்டுமல்ல, நம் கலாசாரத்தின் ஒரு அங்கம். தங்கம் வாங்கும்போது கிராம் (Gram), பவுன் (Sovereign) அல்லது சவரன் (Savaran) பற்றிதான் பேசுவோம். ஆனால், வட இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்னும் ஒரு எடை அலகு பிரபலம். அதுதான் 'தோலா' (Tola)!
ஆனால், ஒரு தோலா என்றால் எத்தனை கிராம் தங்கம் (Gold) என்பதில் பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கிறது.
தோலா என்றால் என்ன?
'தோலா' என்பது கிட்டத்தட்ட 1833-ல் பிரிட்டிஷ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரிய எடை அளவீடு. "துல்" (Tol) என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது. இந்த வார்த்தைக்கு 'எடை போடுதல்' என்று அர்த்தம்.
இந்த தோலாவுக்கு ஒரு நிலையான எடை உண்டு. பெரும்பாலனோர் ஒரு தோலா தங்கம் என்பது 10 கிராம் தங்கத்தை குறிப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
அதிகாரப்பூர்வமாக, 1 தோலா தங்கம் (Gold) என்பது சரியாக 11.6638 கிராம் ஆகும். அதாவது, 10 கிராம்-ஐ விட சுமார் 1.66 கிராம் அதிகம்.
ஏன் இந்த குழப்பம் வருகிறது?
1. சீரமைக்கப்பட்ட கணக்கு: சில வட இந்திய நகைக் கடைகளிலும், வர்த்தக வசதிக்காகவும் (Round Figure-க்காக) ஒரு தோலாவை 10 கிராம் என்று சுலபமாக கணக்கிடுவது வழக்கமாகிவிட்டது.
2. பவுன் Vs தோலா: தமிழ்நாட்டில் நாம் பயன்படுத்தும் ஒரு சவரன் (பவுன்) என்பது 8 கிராம் எடை கொண்டது. தோலாவோ அதை விடவும் அதிக எடை கொண்டது.
3. வரலாற்றுப் பின்னணி: ஆங்கிலேயர்கள் வெளியிட்ட வெள்ளிக் காசின் எடைதான் ஒரு தோலாவுக்கு அடிப்படையாக இருந்தது. அதுவே காலப்போக்கில் 11.6638 கிராமாக நிர்ணயிக்கப்பட்டது.
நீங்கள் இந்தியாவுக்கு வெளியே அல்லது வட இந்தியாவில் தங்கம் வாங்கும்போது, தங்கக் கட்டிகள் (Gold Bar) மற்றும் நாணயங்கள் (Coins) 'தோலா' கணக்கில் விற்கப்படுவதுண்டு. அப்போது, 10 கிராம் என்று நினைத்து ஏமாறாமல், அதன் உண்மையான எடையான 11.66 கிராமுக்கு விலையைக் கணக்கிட வேண்டும்.
எப்போது நீங்கள் 'தோலா' என்ற வார்த்தையைக் கேட்டாலும், அது 11.66 கிராம் என்று உறுதியாக நினைவில் வையுங்கள். 10 கிராம் என்று சொன்னால், அதன் சரியான எடையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
தங்கத்தின் இந்த பாரம்பரிய அளவீட்டை தெரிந்து வைத்திருப்பது, புத்திசாலித்தனமாக தங்கம் (Gold) வாங்க உதவலாம்.
ஒரு தோலா = 11.6638 கிராம்! மறக்காதீங்க!