24K, 22K, 916 தங்கம்: எது உண்மையான தங்கம்? ஏமாறாமல் வாங்க உதவும் ரகசியங்கள்!

தங்கத்தின் கேரட் அளவீடுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலையும் முதலீட்டு ரகசியங்களையும் எளிதாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
தங்கத்தின் தூய்மை - Gold Purity Measurement
தங்கத்தின் தூய்மை - Gold Purity Measurement
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

தங்கம் இந்தியர்களின் வாழ்வியலோடும், உணர்வு களோடும், பொருளாதாரப் பாதுகாப்போடும் இரண்டறக் கலந்த உயர்விலை உலோகம். தங்க விற்பனையில் 916 தங்கம், 22 கேரட், 24 கேரட் போன்ற தொழில்ரீதிச் சொற்களை அடிக்கடி எதிர்கொள்கிறோம். இந்தக் கேரட் அளவீடுகளுக்கும், அவற்றின் எண்களுக்கும் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் முதலீட்டு விஷயங்கள் என்ன? பார்ப்போம்.

கேரட் (Carat) என்றால் என்ன?

தங்கத்தின் தூய்மையை அளவிடப் பயன்படும் சர்வதேச அளவீடே ‘கேரட்’ ஆகும். 100% தூய்மையான தங்கத்தை 24 பாகங்களாகக் கொண்டு இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.

•24 கேரட் (24K) - 99.9% தூய தங்கம்:

இது எந்தக் கலப்படமும் இல்லாத மிகத் தூய்மையான தங்கம். இயற்கை நிலையிலேயே மிக மென்மையாக இருப்பதால், இதைக் கொண்டு நுணுக்கமான ஆபரணங்களையோ, தினசரி அணியும் நகைகளையோ செய்ய முடியாது; செய்தால் வளைந்துவிடும். அதனால் இது தங்கக் கட்டிகள் (Gold Bars), தங்க நாணயங்கள் (Gold Coins) மற்றும் பிஸ்கட் வடிவில் மட்டுமே தயாரிக்கப் படுகிறது.

•22 கேரட் (22K) - 91.6% தூய தங்கம்:

24 பாகங்களில் 22 பாகம் தூய தங்கமும், மீதி 2 பாகம் (8.4%) செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்ற உலோகங்களும் கலக்கப்படுகின்றன. பிற உலோகங்கள் சேர்வதால் தங்கத்திற்கு உறுதியும், நகைகளாக வடிவமைக்கும் தன்மையும் கிடைக்கிறது. எனவே, ‘ஆபரணத் தங்கம்’ என்று அழைப்பது இதையே.

•18 கேரட் (18K) - 75% தூய தங்கம்:

18 பாகம் தூய தங்கமும், 6 பாகம் (25%) பிற உலோகங்களும் கலந்தது. இது 22 கேரட்டைவிட அதிக வலிமை கொண்டது. வைர நகைகள், கற்கள் பதித்த நகைகள், 'ஒயிட் கோல்ட்' (White Gold), 'ரோஸ் கோல்ட்' (Rose Gold) போன்ற நவீன டிசைனர் நகைகள் செய்ய இதுவே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.

தங்கத்தின் தூய்மை - Gold Purity Measurement
தங்கத்தின் தூய்மை - Gold Purity Measurement

சுவாரஸ்யமான தகவல்: 'கேரட்' என்ற சொல் 'காரப்' (Carob) என்ற தாவரத்தின் விதைகளில் இருந்து உருவானது. பண்டைய காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகர்கள் தங்கத்தின் எடையை அளவிட இந்தக் காரப் விதைகளையே நிலையான எடையாகப் பயன்படுத்தினர்.

இதையும் படியுங்கள்:
2 மாதங்களில் 48% உயர்வா? தங்கம் கிராம் ₹20,000 இலக்கை எட்ட முடியாமல் போனது ஏன்?
தங்கத்தின் தூய்மை - Gold Purity Measurement

தங்கத்தின் தூய்மை குறியீடுகள் (Hallmark Numbers)

நகைக்கடைகளில் தங்கத்தின் மீது பொறிக்கப் பட்டிருக்கும் 999, 916 போன்ற எண்கள், அதன் தூய்மை சதவீதத்தைக் குறிக்கும் 'ஹால்மார்க்' குறியீடுகளாகும்.

கேரட் தூய்மை சதவீதம் ஹால்மார்க் எண் பயன்பாடு

24K 99.9% 999 (அல்லது 995) தங்கக் கட்டிகள், நாணயங்கள்

22K 91.6% 916 பாரம்பரிய ஆபரண நகைகள்

18K 75.0% 750 வைரம் மற்றும் கற்கள் பதித்த நகைகள்

14K 58.5% 585 குறைந்த எடையுள்ள தினசரி பயன்பாட்டு நகைகள்

9K 37.5% 375 அதிக வலிமை கொண்ட பட்ஜெட் ரக நகைகள்

(குறிப்பு: 995 என்பது 99.5% தூய்மை கொண்ட 24 கேரட் தங்கக் கட்டிகளைக் குறிக்கும்).

ஆபரணத்துக்கும் முதலீட்டுக்கும் உகந்தவை யாவை?

தங்கத்தை நாம் வாங்கும் நோக்கத்தைப் பொறுத்து, தேர்வு செய்ய வேண்டிய கேரட் மாறுபடும்.

ஆபரணத் தேவைக்கு:

• சிறந்த தேர்வு: 22 கேரட் (916) & 18 கேரட் (750)

• பாரம்பரிய முறையில் தாலிக் கொடி, சங்கிலி, வளையல் போன்ற தங்க நகைகள் வாங்க 22 கேரட் (916) சிறந்த தேர்வு. இதில் தங்கத்தின் மதிப்பும் குறையாது, அழகிய வடிவமைப்புக்கும் உகந்தது.

• வைர நகைகள், மோதிரங்கள், தினமும் அணியும் சிறிய நகைகள் மற்றும் நவீன 'ரோஸ் கோல்ட்' விரும்பிகளுக்கு 18 கேரட் (750) ஏற்றது. இது கற்களை இறுகப் பிடித்துக் கொள்ளும் உறுதியை நகைக்குத் தரும்.

முதலீட்டுத் தேவைக்கு:

• சிறந்த தேர்வு: 24 கேரட் (999/995)

• நீங்கள் சேமிப்பாகவோ அல்லது எதிர்கால முதலீடாகவோ தங்கம் வாங்க விரும்பினால், ஆபரணமாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆபரண நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் சுமார் 8% முதல் 25% வரை பிடிக்கப்படும். மீண்டும் விற்கும்போது இந்தத் தொகை திரும்பக் கிடைக்காது.

• முதலீட்டிற்கு 24 கேரட் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், கோல்ட் ஈடிஎஃப் (Gold ETF), டிஜிட்டல் கோல்ட் ஆகியவற்றைத் தேர்வு செய்வதே லாபகரமான உத்தி.

நிறைவுரை

தங்க ஆபரணம் வாங்கும்போது வெறும் டிசைனை மட்டும் பார்க்காமல், அதன் கேரட் மற்றும் 'BIS Hallmarked' குறியீட்டைச் சரிபார்த்து வாங்குவது நமது பணத்திற்குப் பாதுகாப்பளிக்கும். பயன்பாட்டிற்கு 22 கேரட், பகட்டான நவீன டிசைன்களுக்கு 18 கேரட், தூய முதலீட்டிற்கு 24 கேரட் என்பதே தங்கக் கொள்முதலின் அடிப்படைச் சூத்திரம்!

இதையும் படியுங்கள்:
தங்கம் விலை அதிரடி சரிவு: இப்போ வாங்கலாமா? அல்லது இன்னும் குறையுமா?
தங்கத்தின் தூய்மை - Gold Purity Measurement

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.