
தங்க ஈ.டி.எஃப்கள் மற்றும் டிஜிட்டல் தங்கம் இரண்டுமே தங்கத்தில் முதலீடு செய்வதற்கான நவீன வழிகளாகும். இவை இரண்டும் உடல் ரீதியாக தங்கத்தை வாங்காமல், ஆன்லைனில் தங்கத்தில் முதலீடு செய்ய உதவுகின்றது. இருப்பினும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அவை இரண்டுமே வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. ஈ.டி.எஃப்கள் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் ஒரு நிதி கருவியாகும். இது தங்கத்தின் விலையை பிரதிபலிக்கிறது. டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை ஆன்லைனில் வாங்குவது, விற்பது மற்றும் சேமிப்பதாகும். இதை சிறிய தொகைகளில் கூட வாங்கலாம்.
தங்க ஈ.டி.எஃப்கள்:
பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட்டாகும். இது தங்கத்தினுடைய விலையை பிரதிபலிக்கிறது. இதில் முதலீடு செய்வது என்பது தங்கத்தின் விலையை ஒட்டிய ஒரு பத்திரத்தில் முதலீடு செய்வதற்கு சமமாகும். இதனால் தங்கத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதனை பங்கு சந்தையில் எளிதாக வாங்கலாம், விற்கலாம். இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். டிமேட் கணக்குள்ள முதலீட்டாளர்கள் அவற்றை எளிதில் அணுக முடியும். அவற்றின் விலைகள் தற்போதைய தங்க விலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவை வெளிப்படை தன்மையை வழங்குகின்றது.
தங்க ஈ.டி.எஃப்-கு நிர்வாக கட்டணம் உண்டு. தரகுச் செலவுகள் ஏற்படக்கூடும். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படலாம்.
டிஜிட்டல் தங்கம்:
டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை சொந்தமாக வைத்திருக்காமல் தங்கத்தில் முதலீடு செய்யும் நவீன முறையாகும். ஆன்லைன் மூலம் தங்கம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் இணையதளத்தில் பணம் கட்டி தங்கம் வாங்க முடியும். இதனை எப்போது வேண்டுமானாலும் எளிதாக வாங்கலாம், விற்கலாம் என்பது இதில் இருக்கும் கூடுதல் சிறப்பு. சிறிய அளவில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த வகையான தங்க முதலீடு வசதியானது. பாதுகாப்பானது மற்றும் எந்த நேரத்திலும் வாங்கலாம் விற்கலாம். அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்.
ஆனால் இவற்றில் ஒழுங்குமுறை சிக்கல்கள் இருக்கலாம். நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு பற்றிய கவலைகள் இருக்கலாம்.
இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்:
தங்க ஈ.டி.எஃபில் முதலீடு செய்வதற்கு ஒரு பங்குச்சந்தை கணக்கு தேவை. டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கு ஆன்லைன் கணக்கு தேவை.
தங்க ஈ.டி.எஃப் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றது. டிஜிட்டல் தங்கம் ஆன்லைன் தளங்களில் வாங்கப்படுகிறது.
தங்க ஈ.டி.எஃப் ஒரு நிதிக் கருவியாக இருப்பதால் அதன் விலை பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படலாம். டிஜிட்டல் தங்கத்தின் விலை பெரும்பாலும் தங்கத்தின் விலையை ஒட்டியே இருக்கும்.
தங்கத்தில் வர்த்தகம் செய்ய விரும்பும் முதலீட்டளர்களுக்கு தங்க ஈ.டி.எஃப் பொருத்தமானவை. சிறிய அளவுகளில் வாங்குவதில் நெகிழ்வுத் தன்மையையும் எந்த நேரத்திலும் எளிதான பணப்புழக்கத்தையும் விரும்பும் சிறிய முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் பொருத்தமானது.
தங்க ஈ.டி.எஃப்ல் அதிக வெளிப்படை தன்மையையும், பெரிய முதலீடுகளுக்கு குறைந்த கட்டணங்களையும் வழங்குகின்றன.
இரண்டில் எதில் முதலீடு செய்வது நல்லது?
டிஜிட்டல் தங்கம் மற்றும் தங்க ஈ.டி.எஃப்-களில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நம் முதலீட்டு விருப்பங்களை கவனிக்க வேண்டும். கட்டணங்கள், சேமிப்பு கட்டணங்கள் மற்றும் விற்பனையின் எளிமை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். அத்துடன் எந்த ஒரு விருப்பத்திலும் ஈடுபடுவதற்கு முன்பு நம் முதலீட்டின் நோக்கம் மற்றும் ஆபத்து சகிப்புத்தன்மையை பற்றியும் சிந்திக்க வேண்டும்.
சிறிய முதலீடுகள் மற்றும் எந்த நேரத்திலும் பணப்புழக்கத்துடன் நெகழ்வுத்தன்மையை விரும்பினால் டிஜிட்டல் தங்கம் சிறந்தது. நம்மிடம் டிமேட் கணக்கு இருந்து, ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையில் வர்த்தகம் செய்ய விரும்பினால் தங்க ஈ.டி.எஃப் மிகவும் பொருத்தமாக இருக்கும்.