தங்கம் விலை வீழ்ச்சி: நகைக் கடன் வாங்கியவர்களுக்கு காத்திருக்கும் சட்ட, நிதி சிக்கல்கள் என்ன?

குறைந்த தங்க விலையில் அடகு மீட்பு நெருக்கடி, ஏல அபாயம் மற்றும் சிபில் ஸ்கோர் பாதிப்பு குறித்த எச்சரிக்கை.
நகைக் கடன் - gold price drop
நகைக் கடன் - gold price drop
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

தங்கத்தின் விலை அதிரடியாகச் சரிந்து வருவது, பெரும்பான்மையான மக்களுக்குப் பெருமகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்துள்ளது. பல மாதங்களாக சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக உயர்ந்து நின்ற ஆபரணத் தங்கம் இப்போது கணிசமான அளவு இறங்கி வந்திருப்பதால் அவர்கள் தங்கம் வாங்குவதற்கு ஆவலோடு முன்வருகின்றனர்.

குறிப்பாக, பெண் பிள்ளைகளின் திருமணத்திற்காகத் தங்க நகைகள் வாங்குவதற்குச் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து வைத்துக் காத்திருந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்களுக்கும், எதிர்காலச் சேமிப்பிற்காகத் தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கும் இந்த விலையிறக்கம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆனால், நாணயத்தின் மறுபக்கத்தைப் போல, இந்த விலையிறக்கம் ஒரு தரப்பினருக்கு சிக்கலையும் உண்டாக்கியிருக்கிறது.

ஆபத்பாந்தவனால் வந்த ஆபத்து

ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் பொதுவாக மூன்று காரணங்களுக்காகவே தங்க நகைகள் வாங்குவார்கள். 1. அன்றாட வாழ்வியல் பயன்பாடு, 2. திருமணம் உள்ளிட்ட சுப வைபவங்களுக்காக, 3. நிதி நெருக்கடி காலங்களில் அடகு வைப்பதற்காக.

இதில் அவசர காலத் தேவைகளுக்கு அடமானம் மூலம் உதவும் என்பதாலேயே தங்கத்தை ‘ஆபத்பாந்தவன்’ எனச் சொல்வது சாமானிய மக்களின் வழக்கம். அப்படி சில பல மாதங்களுக்கு முன்பு வங்கிகளிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் தங்க நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் வாங்கியவர்களில் பலரும் இப்போது இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். அடகு மீட்புக்கான நிதி நெருக்கடி அல்லது ஆசையாகச் சேர்த்த நகைகளை நிரந்தரமாக இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்க நகை கடன் வாங்குபவர்களுக்கு செம நியூஸ்..! இனி இவ்வளவு கூடுதல் தொகை பெறலாமா?
நகைக் கடன் - gold price drop

தமிழகத்தின் அதிர்ச்சி தரும் நகைக்கடன் புள்ளிவிவரம்

இந்தியாவிலேயே அதிக அளவில் நகைக்கடன் வாங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த நகைக்கடனில் சுமார் 32%, அதாவது ஏறத்தாழ ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவிற்குத் தமிழக மக்கள் மட்டுமே நகைகளை அடமானம் வைத்துக் கடன் பெற்றுள்ளனர்.

தனியார் நிதி நிறுவனங்களின் நகைக்கடன் வர்த்தகமும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 40%-த்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. திருப்ப முடியாமல் ஏலத்திற்கு வரும் நகைகளின் மதிப்பும் பல்லாயிரக்கணக்கான கோடிகளைத் தாண்டியுள்ளது.

தற்காலத்தில் தமிழக மக்கள் தங்க ஆபரணங்களை அணிதல் பயன்பாட்டுக்காகவோ, முதலீடாகவோ வாங்குவதைவிட, அவசரத் தேவைகளுக்கு அடமானம் வைப்பதற்காக வாங்குவதே அதிகம் என்பதைக் இந்தக் கணக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

விலை குறைந்தால் அடகு வைத்தவர்களுக்கு என்ன சிக்கல்?

வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் நகைக்கடன் வழங்கும்போது, அன்றைய தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% முதல் 85% வரை கடனாக வழங்குகின்றன.

இவ்வாண்டின் உச்ச விலையாக, 22 கேரட் தங்கம் ஜனவரி 29-ல் ஒரு கிராம் ₹16,800-ஐ அடைந்தது; ஒரு சவரன் ₹1,34,400. இது போன்ற உயர் விலையில் இருந்தபோது நகைகளை அடகு வைத்தவர்கள், அந்த அதிகபட்ச மதிப்பிற்கு ஏற்பப் பெரிய தொகையைக் கடனாகப் பெற்றிருப்பார்கள்.

உதாரணத்திற்கு, ஜனவரி மாதம் பத்து சவரன் நகையின் மதிப்பு ₹13,44,000 ஆக இருந்தபோது, ஒருவர் எழுபத்தைந்து சதவீத மதிப்பில் சுமார் ₹10,00,000 கடன் வாங்கியிருப்பார். ஆனால், இப்போது தங்கம் விலை முப்பது சதவீதத்திற்கும் மேல் சரிந்து, அந்தப் பத்து சவரன் நகையின் மொத்த மதிப்பே ₹9,20,800 ஆகக் குறைந்துவிட்டது.

நகைக் கடன் - gold price drop
நகைக் கடன் - gold price drop

இதனால், அடகுவைத்த நகையின் இன்றைய சந்தை மதிப்பைவிட, வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டித் தொகை அதிகமாகிவிட்டது. வங்கிகள் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதால், உடனடியாகக் கூடுதல் பணத்தைக் கட்டுமாறோ அல்லது கூடுதல் நகையை அடமானமாக வைக்குமாறோ வாடிக்கையாளர்களுக்கு அழைப்புகளும் நோட்டீஸ்களும் வரத் தொடங்கியுள்ளன. செய்தித்தாள்களில் தினமும் முழுப் பக்கத்திற்கு வெளியாகும் நகை ஏல அறிவிப்புகள் இந்த நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகின்றன.

நகையை வங்கிலேயே விட்டுவிடலாமா?

தங்கம் விலை குறைந்துவிட்டதால், “நாம் வாங்கிய கடன் தொகையைவிட நகையின் மதிப்பு குறைந்துவிட்டதே...! பேசாமல் கடனைக் கட்டாமல் நகையை வங்கிலேயே விட்டுவிடலாமே...” என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், அது சட்டரீதியாகவும் நிதிரீதியாகவும் உங்களைப் பெரும் சிக்கலில் தள்ளிவிடும் மிகப்பெரிய தவறாகும். நீங்கள் வங்கியில் வாங்கியது கடன்; நகையை விற்கவில்லை. வட்டி, ஏல விளம்பரச் செலவு மற்றும் நிர்வாகக் கட்டணங்களைச் சேர்த்து வங்கி உங்கள் நகையை ஏலத்தில் விடும்.

இதையும் படியுங்கள்:
வங்கி லாக்கர் விதிமுறைகள்: உங்கள் தங்கம் திருடுபோனால் முழுப் பணம் கிடைக்குமா?
நகைக் கடன் - gold price drop

ரிசர்வ் வங்கி விதிகளின்படி சந்தை மதிப்பில் தொண்ணூறு சதவீதத்திற்குக் குறையாமல் ஏலம் விடப்பட்டாலும், அந்தத் தொகை உங்கள் அசல் மற்றும் வட்டியை ஈடுகட்டப் போதவில்லை என்றால், மீதமுள்ள நிலுவைத் தொகையை உங்களிடமிருந்து சட்டப்பூர்வமாக வசூலிக்க வங்கிக்கு முழு உரிமை உண்டு.

அதுமட்டுமின்றி, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நகையை ஏலத்திற்கு விட்டால், உங்கள் சிபில் ஸ்கோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது பிள்ளைகளின் கல்விக் கடன் எதுவுமே கிடைக்காத நிலை ஏற்படும்.

ஏலத்தைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

நகைக்கடன் பெற்றவர்கள் முதலில் தங்கள் அடகு ரசீதை எடுத்து, வாங்கிய கடன் எவ்வளவு, இதுவரை சேர்ந்திருக்கும் வட்டி எவ்வளவு, நகையின் இன்றைய சந்தை மதிப்பு என்ன என்பதைத் தெளிவாகக் கணக்கிட வேண்டும். வங்கியிலிருந்தோ நிதி நிறுவனத்திலிருந்தோ அழைப்பு வந்தால், பயந்துகொண்டு தொலைபேசியைத் தவிர்க்காமல் நேரில் சென்று அதிகாரிகளிடம் பேசினால் கூடுதல் அவகாசம் பெறமுடியும்.

ஆண்டு இறுதியில் மொத்தமாக வட்டியும் அசலும் கட்டும் புல்லட் ரீபேமெண்ட் முறையில் கடன் வாங்கியிருந்தால், வட்டி குட்டி போட்டுச் சுமை எகிறிவிடும்; எனவே, மாதந்தோறும் சிறிய அளவிலாவது வட்டியையும் அசலையும் குறைக்க முயற்சி செய்யவேண்டும்.

மேலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, நகை ஏலத்திற்கு முன்பு வாடிக்கையாளருக்கு முறையான நோட்டீஸ் அனுப்புவதோடு, இரண்டு செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஏலத்தில் கடன் போக மீதமுள்ள தொகையை ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரிடம் திருப்பித் தரவேண்டும்.

அதேபோல், கடனை முழுமையாக அடைத்த ஏழு வேலை நாட்களுக்குள் நகையைத் திருப்பித் தரவேண்டும்; தாமதமானால் வங்கி தினமும் ₹5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதியையும் கடன் பெற்றவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

எத்தனையோ கனவுகளோடும் தியாகங்களோடும் சேர்த்த குடும்ப நகைகள், ஏலத்தில் இன்னொருவர் கைகளுக்குச் செல்லும் துயரம் எந்தக் குடும்பத்திற்கும் நேரக்கூடாது. ஒவ்வொரு நகையிலும் ஒரு தாயின் கனவுகளும், ஒரு தந்தையின் உழைப்பும், ஒரு குடும்பத்தின் உணர்வுபூர்வமான நினைவுகளும் கலந்திருக்கின்றன.

தங்கம் விலை சரிந்துள்ள இந்த இக்கட்டான சூழலில், கடன் பெற்றவர்கள் இப்போதே விழித்துக்கொண்டு திட்டமிடுவதே தங்களின் சேமிப்பையும் தன்மானத்தையும் காப்பாற்றிக்கொள்ளும் ஒரே வழியாகும்.

இதையும் படியுங்கள்:
தங்கச் சீட்டு போட்டு ஏமாந்தவர்கள்... இந்த வழியில் உடனே பணத்தை மீட்கலாம்!
நகைக் கடன் - gold price drop

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.