

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய தங்க நகை கடன் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை (NBFCs) உள்ளடக்கியுள்ளது.
தற்போதைய சூழலில், தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது என்பது, கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்ட மற்றும் நுணுக்கமாகக் கண்காணிக்கப்படும் ஒரு செயல்முறையாக மாறியுள்ளது.
அவசரத் தேவைக்குப் பணம் வேண்டும் என்றால் பலரும் முதலில் ஓடுவது நகைக்கடனுக்குத்தான். இந்திய ரிசர்வ் வங்கி (RBI), தங்கத்தின் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், சீரான நடைமுறைகளை உருவாக்கவும் விரிவான மற்றும் தெளிவான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடன் பெறுபவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.
தங்க நகை கடன் மீதான இந்த புதிய விதிகள் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்வது, கடன் பெற விரும்பும் நபர்கள் சரியான முடிவுகளை எடுக்க பெரிதும் உதவும். இந்த அடிப்படை அம்சங்களைக் கருத்தில் கொண்டு, கடன் பெறுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள் இதோ:
சிறு கடன் பெறுபவர்களுக்கு அதிக கடன் தகுதி :
அத்தியாவசிய நோக்கங்களுக்கான கடன்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அடுக்குமுறை கடன்-மதிப்பு விகித (LTV) கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, தங்கத்தின் மதிப்பில் எவ்வளவு சதவீதம் கடன் வழங்க வேண்டும் என்பதில் பழைய 75% என்ற பொதுவான வரம்பு மாற்றப்பட்டு, கடன்தொகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமான கடன் பெறுபவர்களுக்குப் பெரும் நிவாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பொருள், சிறு கடன் பெறுபவர்கள் ஒரே அளவிலான தங்கத்தை அடமானமாக வைத்து, முன்பை விட அதிக தொகையைக் கடனாகப் பெற முடியும் என்பதாகும். இருப்பினும், ரூ.2.5 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கும் பட்சத்தில், கடன் வழங்கும் நிறுவனங்கள் அந்த நபரின் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பீடு செய்ய வேண்டும்.
ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்கள்: தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடனாகப் பெறலாம் (சிறிய கடன் வாங்குவோருக்கு கூடுதல் பலன்).
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை: தங்கத்தின் மதிப்பில் 80% வரை கடன் கிடைக்கும்.
ரூ.5 லட்சத்திற்கு மேல்: தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாகப் பெற முடியும்.
வெளிப்படையான தங்க மதிப்பீடு (Gold Valuation)
* கடன் வழங்கும் நிறுவனங்கள், தங்கத்தின் உண்மையான தூய்மையின் அடிப்படையில் அதன் மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். அதாவது, இனி தங்கத்தின் மதிப்பு முற்றிலும் ஹால்மார்க் மற்றும் சான்றளிக்கப்பட்ட டிஜிட்டல் இயந்திரங்கள் மூலம் மட்டுமே கணக்கிடப்படும். இதனால் மதிப்பீட்டாளர்கள் தன்னிச்சையாகத் தங்கத்தின் தரத்தைக் குறைக்க முடியாது.
* முந்தைய 30 நாட்களின் சராசரி இறுதி விலை அல்லது முந்தைய நாளின் இறுதி விலை ஆகியவற்றில் எது குறைவோ, அதன் அடிப்படையிலேயே தங்கம் மதிப்பிடப்படும்.
* தங்கத்தின் உண்மையான உள்ளார்ந்த மதிப்பு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது மிக முக்கியம். அதன்படி, தங்க நகைகளில் உள்ள விலையுயர்ந்த கற்கள் (Gems) அல்லது ரத்தினங்கள், ஆபரணங்கள் செய்வதற்கான கூலி (Making charges) ஆகியவை கடனுக்கான மதிப்பில் சேர்க்கப்படாது. தங்கத்தின் உண்மையான எடைக்கும், தூய்மைக்கும் மட்டுமே கடன் வழங்கப்படும்.
கடுமையான ஏல விதிமுறைகள் (Stricter Auction Rules) :
வாடிக்கையாளர்கள் கடன் தொகையைத் செலுத்தத் தவறினால், நகைகளை ஏலம் விடுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன:
நுகர்வு நோக்கங்களுக்காக வழங்கப்படும் மொத்தத் திருப்பிச் செலுத்தும் தங்கக் கடன்கள் 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், கடன் காலம் முழுவதும், முதிர்வு காலத்தில் செலுத்த வேண்டிய வட்டியையும் சேர்த்து, கடன் மதிப்பு வரம்பு (LTV) கண்டிப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
* கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து அடமானம் வைக்கப்பட்ட தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன்பு, வங்கிகள், வாடிக்கையாளருக்கு ஏலம் குறித்த முறையான முன்னறிவிப்பு (Notice) மற்றும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
* ஏலத்திற்கான குறைந்தபட்ச தொடக்க விலை (Reserve Price) தற்போதைய சந்தை மதிப்பில் 90%க்குக் குறைவாக இருக்கக்கூடாது. அடுத்தடுத்து இரண்டு முறை ஏலம் தோல்வியடைந்தால் மட்டுமே அதை 85 சதவீதமாகக் குறைக்கலாம்.
* ஏலம் விடப்பட்டு, கடனை விடக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையை வங்கி, 7 வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
நகைகளைத் திருப்புவதில் தாமதத்திற்கான அபராதம் :
* வாடிக்கையாளர் கடனை முழுமையாக அடைத்தவுடன், அதே நாளில் அல்லது அதிகபட்சமாக 7 வேலை நாட்களுக்குள் அடகு வைக்கப்பட்ட நகைகளை வங்கி திருப்பித் தர வேண்டும்.
* ஒருவேளை, இதில் ஏதேனும் தாமதம் (கடன் வழங்கும் நிறுவனம் அல்லது வங்கி) ஏற்பட்டால், பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் வங்கி, வாடிக்கையாளருக்குத் தினமும் ரூ.5,000 வரை அபராதம் (Penalty) வழங்க நேரிடும்.
இதர முக்கிய விதிகள் :
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நடைமுறைகள், தங்கத்தின் மீதான கடன் வாங்குதலை மேலும் வெளிப்படையானதாகவும், தடையற்றதாகவும், கடன் வாங்குபவருக்கு உகந்ததாகவும் மாற்றுவதை உறுதி செய்கிறதது.
* வட்டி மற்றும் அசலை முதிர்வின் போது ஒரே தவணையாகச் செலுத்தும் 'Bullet Repayment' முறைக்கான கால வரம்பு 12 மாதங்களாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
* கடன் விதிமுறைகள், வட்டி விகிதம் மற்றும் ஏல விதிகள் போன்ற விவரங்கள் வாடிக்கையாளருக்குப் புரியும் பிராந்திய மொழியிலேயே (உதாரணமாக, தமிழில்) எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும்.
* புதிய தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதற்காக தங்க நகைக்கடன் (Gold Loan) பெறுவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. கடனாகப் பெறும் பணத்தை மீண்டும் அதே தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க முயலும் ஊக வணிக நடவடிக்கைகளைத் தடுக்க RBI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடன் வாங்கும் முன்: வட்டி விகிதம், கடன் காலம், நகையைத் திருப்பித் தரும் நடைமுறை, ஏல விதிகள் ஆகியவற்றை எழுத்துப்பூர்வமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கும் நிறுவனமும் இந்த விதிகளைப் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.