மாதந்தோறும் தங்கச் சீட்டு போடுறீங்களா? இந்த மறைமுகக் கட்டுப்பாடுகள் தெரியாம ஏமாறாதீங்க!

மாற்றத்தைத் தவிர்த்து உங்கள் தங்கக் கனவை பாதுகாப்பாக நனவாக்க உதவும் வழிகாட்டி!
நகை வாங்குவது - Gold Rate Today Tamil
நகை வாங்குவது - Gold Rate Today Tamil
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 6 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, மூன்று சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். இவரது உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள், 2024-ல், ஓர் அங்குலச் சிறுவன், அமேஸான் கானகத்தில் வழி மறந்த சிறுமி, ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள் ஆகிய மூன்று நூல்களாக வெளியாகியுள்ளன. இவ் வரிசையில் இன்னும் சில தொகுப்புகள் வரவுள்ளன.

Updated on: 

இந்தியப் பண்பாட்டில் தங்க நகைகளுக்கும் பட்டுப்புடவைகளுக்கும் எப்போதும் தனித்துவமான இடமுண்டு. மதிப்பு, அழகியல், சமூகப் பெருமிதம் என்பதைத் தாண்டி, பண நெருக்கடி காலத்தில் உதவும் சிறந்த ஆபத்பாந்தவனாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது.

செல்வந்தர்களுக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் தங்கத்தின் விலை ஒரு பொருட்டல்ல. தங்களுக்குத் தேவைப்படும்போது ஒரே தவணையில் தங்க நகைகளை வாங்கிவிட அவர்களால் இயலும்.

ஆனால், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்குத் தங்க நகைகள் வாங்குவது என்பது வாழ்வில் நிகழும் அரிய அல்லது முக்கிய நிகழ்வு. ஏழை எளிய மக்களுக்கோ, அது அருஞ்சாதனை. அதுவும் கடந்த ஆண்டில் நிகழ்ந்த 'வரலாறு காணாத விலையுயர்வு', தங்கத்தை ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே ஆக்கிவிட்டது எனலாம். இந்த ஆண்டும் விலை தொடர்ந்து ஏறியுள்ளது.

இன்றைய சூழலில் அரை பவுன் நகை (4 கிராம்; இன்றைய விலையில் தங்க மதிப்பு மட்டுமே சுமார் ₹55,000; செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி தனி) வாங்குவதுகூட ஏழைகளின் மாத வருவாயில் பெரிய சுமையையும், நீண்ட காலச் சேமிப்பையும் கோருகிறது. அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்கும், நிழலாகத் தொடர்கிற பொருளாதார நெருக்கடிகளுக்கும் நடுவே தனியாகப் பெரிய தொகையைச் சேமித்து வைத்து நகை வாங்குவது இயலாத ஒன்று.

இத்தகைய எளிய மக்களின் தங்கக் கனவுகளை நனவாக்கும் பாலமாக அமைபவைதான் நகைக் கடைகளின் மாதாந்திர தங்கச் சேமிப்புத் திட்டங்கள். மாதந்தோறும் சிறுகச் சிறுக 11 மாதங்கள் சேமித்து, 12-ஆவது மாதத்தில் தங்க நகையாக மாற்றிக் கொள்ளக்கூடிய இந்தச் சீட்டுத் திட்டங்கள் எளிய மக்களுக்குச் சிறந்த வரப்பிரசாதமே!

இருப்பினும், இத்திட்டங்களில் இருக்கும் சாதகங்களைப் போலவே, சில மறைமுகக் கட்டுப்பாடுகளும், பாதகங்களும் உள்ளன. எனவே, ஒரு நகைக்கடையில் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் சேருவதற்கு முன்பாக முதலீட்டாளர்களும், பெண்களும் இந்த 6 முக்கியமான கேள்விகளைக் கேட்பது அவசியம்.

நகை வாங்குவது - Gold Rate Today Tamil
நகை வாங்குவது - Gold Rate Today Tamil

1. நான் கட்டும் பணம் கிராமாக (Gold Weight) மாறுமா? அல்லது ரூபாயாகவே (Rupee Value) இருக்குமா?

இதுவே நீங்கள் கேட்க வேண்டிய முதல் மற்றும் மிக முக்கியமான கேள்வியாகும்.

• எடை அடிப்படையிலான திட்டம்: நீங்கள் ஒவ்வொரு மாதமும் தவணை செலுத்தும் நாளில், அன்றைய தங்கத்தின் விலைக்கு ஏற்ப உங்களது பணம் தங்கக் கிராமாக உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். (எ.கா: ₹6,000 கட்டுகிறீர்கள், அன்றைய தங்கம் விலை கிராம் ₹13,800 என்றால், சுமார் 0.43 கிராம் உங்களது கணக்கில் சேரும்). 11 மாத முடிவில் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்து இருந்தாலும், நீங்கள் சேமித்த மொத்த கிராம் தங்கத்திற்கு நகை எடுத்துக்கொள்ளலாம். இதுவே முதலீட்டாளருக்குப் பாதுகாப்பானது.

• பண அடிப்படையிலான திட்டம்: நீங்கள் கட்டும் பணம் ரூபாயாகவே சேமிக்கப்பட்டு, 11-ஆவது மாத முடிவில் அன்றைய தேதியில் நிலவும் தங்கத்தின் விலைக்கு நகை வழங்கப்படும். இத்திட்டத்தில் தங்கத்தின் விலை உயர்ந்தால் உங்களுக்குப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே, எப்போதுமே 'கிராம் அடிப்படையிலான' திட்டத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நகைக்கடையில் ஏமாறாமல் இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காம கேளுங்க!
நகை வாங்குவது - Gold Rate Today Tamil

2. செய்கூலி, சேதாரம் முழுமையாகத் தள்ளுபடி உண்டா? அதில் நிபந்தனைகள் என்ன?

பெரும்பாலான நகைக்கடைகள் "செய்கூலி, சேதாரம் இல்லை" என்ற விளம்பரத்தைக் காட்டியே வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன. ஆனால், இதில் உள்ள நிபந்தனைகளைத் தெளிவாகக் கேட்க வேண்டும்.

• பொதுவாகக் கடைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் (எடுத்துக்காட்டாக 10% அல்லது 12%) வரையிலான சேதாரத்திற்கு மட்டுமே தள்ளுபடி தருவார்கள். நீங்கள் எடுக்கும் நகை ஆண்டிக் (Antique), கற்கள் பதித்த நகை (Stone/Diamond Work) அல்லது டிசைனர் நகையாக இருந்தால், சேதாரம் இதைவிடக் கணிசமாக உயரக்கூடும் (கடைக்குக் கடை மாறுபடும்).

• அத்தகைய சூழலில், குறிப்பிட்ட சதவீதத்திற்கு (எ.கா: 12%) மேல் வரும் கூடுதல் சேதாரத்தை நீங்கள் சொந்தப் பணத்தில்தான் தரவேண்டி இருக்கும். எனவே, "எந்தெந்த நகைகளுக்கு முழுத் தள்ளுபடி பொருந்தும்? எவற்றுக்குக் கூடுதல் கட்டணம் உண்டு?" என்பதை முன்கூட்டியே கேட்டுத் தெளிவு பெறவேண்டும்.

இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கணுமா? பில் போடும் முன் பார்க்க வேண்டிய 6 ரகசியங்கள்!
நகை வாங்குவது - Gold Rate Today Tamil

3. திட்டத்தின் நடுவே தவணை செலுத்தத் தவறினால் அல்லது அவசரத்திற்குப் பணமாகத் திரும்பக் கேட்டால் என்ன விதிமுறைகள்?

எதிர்பாராத மருத்துவச் செலவுகளோ அல்லது நிதி நெருக்கடியோ வரும்போது, சேமிப்புச் சீட்டைத் தொடர முடியாமல் போகலாம்.

• சில கடைகளில் ஒரு மாதம் தவணை கட்டத் தவறினாலும், அவர்கள் வாக்குறுதி அளித்த சேதாரத் தள்ளுபடி அல்லது போனஸ் சலுகையை ரத்து செய்துவிடுவார்கள்.

• மேலும், பெரும்பாலான நகைக்கடைச் சீட்டுத் திட்டங்களில் கட்டிய பணத்தைப் பணமாகத் திரும்பப் பெற முடியாது (No Cash Refund); நகையாக மட்டுமே எடுக்க முடியும்.

• இடையிலேயே திட்டத்தை ரத்து செய்தால், அதுவரை கட்டிய பணத்திற்கு என்ன மதிப்பீட்டில் நகை தருவார்கள் என்பதைச் சேரும் முன்பே கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியமாகும். இவற்றையெல்லாம் எழுத்துப்பூர்வமான விதிமுறைகளில் பெறுவது நல்லது.

4. ஜிஎஸ்டி (GST) மற்றும் கற்களின் எடைக்கு (Stone Weight) கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படும்?

நகை எடுக்கும்போது எதிர்பாராத கூடுதல் செலவுகள் வரக்கூடும்.

• நகைக்கடைச் சீட்டு முடிவில் நகை எடுக்கும்போது, அதற்குரிய 3% ஜிஎஸ்டி (GST) வரியை வாடிக்கையாளர்தான் செலுத்த வேண்டும். இதைச் சேமிப்புத் தொகை தள்ளுபடி செய்யாது.

• நீங்கள் எடுக்கும் நகையில் கற்கள் அல்லது மணிகள் இருந்தால், நகையின் மொத்த எடையில் கற்களின் எடையைக் கழித்துவிட்டு, நிகர தங்கத்தின் எடைக்கு (Net Gold Weight) மட்டுமே தங்கக் கணக்கீடு செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

5. நான் கட்டும் பணத்திற்கு உரிய ரசீது மற்றும் டிஜிட்டல் கணக்கு வழக்குகள் சரியாகத் தரப்படுமா?

முறையான ரசீதுகள் இல்லாதபட்சத்தில் பின்னாளில் சிக்கல்கள் எழலாம்.

• ஒவ்வொரு மாதமும் பணம் கட்டியவுடன் அதற்குரிய அதிகாரப்பூர்வ ரசீது அல்லது மொபைல் செயலி மூலமாக உடனடியாகக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

• பாஸ்புக் அல்லது டிஜிட்டல் கணக்கில் அன்றைய தங்கத்தின் விலை மற்றும் உங்களது கணக்கில் சேர்ந்த தங்கத்தின் கிராம் அளவு துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! ‘5D Hard Gold’.. ரூ.3 லட்சத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம்.!
நகை வாங்குவது - Gold Rate Today Tamil

6. இந்த நகைக்கடை BIS பதிவு பெற்ற, ஹால்மார்க் நகைகளை விற்கும் நம்பகமான நிறுவனமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் சேமிக்கும் நிறுவனத்தின் நற்பெயரும் நம்பகத்தன்மையும் மிக முக்கியம். எனவே, பல ஆண்டுகளாக இயங்கி வரும், BIS பதிவு பெற்ற, HUID ஹால்மார்க் நகைகளை விற்கும் நம்பகமான நகைக்கடைகளில் மட்டுமே சேமிப்புத் திட்டங்களில் சேரவேண்டும். அதிகச் சலுகை தருகிறோம் என்று கூறிச் செயல்படும் அறிமுகமில்லாத புதிய அல்லது சிறிய கடைகளில் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் அணுகுங்கள்!

நகைக்கடை மாதாந்திர சேமிப்புத் திட்டம் என்பது ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிச்சயமாக ஒரு சிறந்த வாய்ப்புதான். ஆனால், திட்டத்தையும் அதில் உள்ள நிபந்தனைகளையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் ஏமாறக் கூடாது.

மேற்கண்ட 6 கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெற்று, திட்டத்தின் விதிமுறைகளை முழுமையாக அறிந்துகொண்டு சேர்வது, உங்களது தங்க நகைக் கனவுகள் எவ்வித ஏமாற்றமுமின்றி இனிமையாக நனவாக வழிவகுக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com