

இந்தியாவில் மிகச்சிறந்த முதலீட்டாளர்கள் யார் என்றால் உண்மையில் பெண்கள்தான். ஆம், ஆசைக்காகவும் கௌரவத்திற்காகவும் பெண்கள் வாங்கிய தங்க நகைகளின் மதிப்பு இன்று பல மடங்கு உயர்ந்துள்ளது.
தங்கம் என்றாலே பெண்களுக்கு அலாதி பிரியம். இந்தப் பிரியம்தான் தங்கத்தின் மீதான ஆசை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமைகிறது. அவ்வகையில் இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் தங்கம் வாங்குவதில் 9தங்கம் வாங்குவது) அதிக அக்கறை காட்டுகின்றன. ஆனால் தங்கத்தின் விலை கடந்த ஓராண்டாக விலை உயர்ந்து அதிகபட்ச விலைக்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலையில் 23% வரை குறைந்துள்ளது. தங்க நகைகளை வாங்குவது சிறந்த முதலீடு மட்டுமின்றி, அது ஒரு பாரம்பரியமாக கருதப்படுகிறது. ஆனால் தங்க நகைகளை வாங்கும்போது நாம் அதிக கவனமுடன் இருக்கவேண்டும்.
நகைக் கடைகளில் செய்கூலி, சேதாரம், மற்றும் HUID உள்ளிட்ட கணக்கீடுகளில் நீங்கள் ஏமாறாமல் இருக்க, கீழ்க்கண்ட 6 விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
1. தங்கம் விலை சரிபார்ப்பு:
தங்கம் வாங்க நகைக் கடைக்கு செல்வதற்கு முன்பு, அன்றைய தினத்தில் தங்கத்தின் விலையை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நம்பகமான செய்தி ஊடகங்கள், இணைய தளங்கள் மற்றும் மொபைல் செயலிகளில் தங்கத்தின் விலையை ஒரே நொடியில் தெரிந்துகொள்ளலாம். இதில் 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலையைத் தனித்தனியாக தெரிந்து கொள்வது அவசியம்.
2. செய்கூலி கட்டணம்:
ஆபரண நகைகளின் பலவிதமான டிசைன்களை செய்ய உழைக்கும் பொற்கொல்லரின் கூலி இது. பொதுவாக நகையின் எடையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அல்லது ஒரு கிராமுக்கு இவ்வளவு ரூபாய் என்ற வகையில் நிலையான கட்டணமாக இது கணக்கிடப்படும். குறிப்பாக எளிமையான டிசைன் கொண்ட நகைகளுக்கு செய்கூலி குறைவாகவே இருக்கும்.
நகைக் கடைகளில் செய்கூலியை குறைக்க பேரம் பேசலாம். இதில் தவறே இல்லை. செய்கூலி ஒவ்வொரு கடைக்கும் வேறுபடும் என்பதால், எங்கு குறைவாக உள்ளது என்பதை அறிந்து கொண்டால், கணிசமான தொகையை சேமிக்க முடியும்.
3. சேதாரத்தில் கவனம் தேவை:
தங்க நகைகளை செய்யும்போது, அதிலிருந்து உருகி கழிவாக வெறியேறும் தங்கத்தை சேதாரம் என்பார்கள். இந்த சேதாரத்திற்கான பணமும் வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில கடைகளில் நகைகளுக்கு ஏற்ப 8% முதல் 15% வரை வசூலிக்கப்படும். ஒரு சில கடைகளில் 20% வரை கூட வசூலிக்கப்படுகிறது.
செய்கூலியைக் காட்டிலும் சேதாரம் அதிகம் என்பதால், சேதாரம் குறைவாக கணக்கிடும் கடைகளைக் கண்டறிந்து நகை வாங்கலாம். குறிப்பாக நீங்கள் வாங்கும் நகையின் மொத்த எடையில், சேதார சதவீதம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பண்டிகை காலங்களில் செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடி வழங்கப்படும். இந்த நேரத்தில் தங்கம் வாங்கச் சென்றால் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம்.
4. HUID (Hallmark Unique Identification) எண் கட்டாயம்:
சந்தையில் 6 இலக்க HUID கொண்ட 22 காரட் நகைகைளை மட்டுமே விற்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆகையால் நீங்கள் வாங்கும் நகை 22 காரட் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள HUID எண் மற்றும் BIS முத்திரை இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
நகையில் உள்ள ஹால்மார்க் எண்ணை ‘BIS CARE’ என்ற அரசின் மொபைல் செயலியில் பதிவிட்டால் அந்த நகையின் தயாரிப்பிடம், தூய்மை மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
5. நகையின் நிகர எடை மற்றும் கல் எடை:
பொதுவாக கல் வைத்த தங்க நகைகளை வாங்க வேண்டாம் என பெரியவர்கள் சொல்வதுண்டு. ஏனென்றால் அந்த கல்லுக்கும் தங்கத்தின் விலையையே கடைக்காரர்கள் கேட்பார்கள். இதன் காரணமாக நீங்கள் அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆகையால் முடிந்தவரை கல் மற்றும் எனாமல் இல்லாத நகைகளை தேர்ந்தெடுங்கள்.
ஒருவேளை கல் உள்ள நகைகைளை வாங்க நினைத்தால், தங்கத்தின் எடை மற்றும் கற்களின் எடை பில்லில் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். கற்களின் எடைக்கு தங்கத்தின் விலையைக் கொடுக்க வேண்டாம்.
6. விரிவான பில் வாங்குங்கள்:
தங்க நகையை வாங்கிய பிறகு, கண்டிப்பாக விரிவான பில் வாங்க வேண்டியது அவசியம். அந்த பில்லில் பின்வரும் விவரங்கள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபாருங்கள்.
* தங்கத்தின் மொத்த எடை மற்றும் தூய்மை (22K / 18K)
* செய்கூலி
* சேதாரம்
* HUID எண்
* கற்களின் எடை மற்றும் அதன் விலை
* ஜிஎஸ்டி வரி
நீங்கள் சற்று கவனமுடன் இருந்தால், தங்கத்தின் எடைக்கான பணத்தை மட்டும் செலுத்தினாலே போதுமானது. தங்க நகை வாங்கும் முன்பு இந்த 6 விஷயங்களை நீங்கள் சரிபார்த்தாலே போதும். யாரும் உங்களை ஏமாற்ற முடியாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: