

சமீபத்தில் நிகழ்ந்துவரும் தங்கத்தின் தொடர் பெரும் விலைச்சரிவு, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 29 அன்று 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹16,800 என்ற எவரெஸ்ட் விலையை அடைந்திருந்த நிலையில், நவம்பர் 10 முதல் தொடர் சரிவைச் சந்தித்து, 20-11-26 அன்று ₹11,465 என்ற அளவுக்குத் தாழ்ந்திருந்தது.
சிகர விலையிலிருந்து 31.8 சதவீதம் அளவுக்குப் பெரும் சரிவு இது. இதன் காரணமாக வாழ்வியல் பயன் பாட்டுக்காக ஆபரணமாகவோ, முதலீட்டுக்காகத் தங்கக் கட்டிகள் அல்லது நாணயங்களாகவோ இயற்பியல் தங்கம் (Physical Gold) வாங்க விரும்புபவர்கள் இப்போது அதில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கம் வெள்ளி விலை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டே Gold ETF, Silver ETF விலையும் ஏறி இறங்குகிறது. அதன்படி இப்போது Gold ETF விலையும் இதே போலக் குறைந்திருப்பதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சிலர் இப்போது Gold ETF-ல் லாப நோக்கில் லம்ப்ஸம் முதலீடு செய்கின்றனர்.
இந்த சூழலில் கமாடிட்டி மற்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் ஓரிருவர், இப்போது இயற்பியல் தங்கம் அல்லது கோல்ட் ஈடிஎஃப் வாங்குவதைவிட சில்வர் ஈடிஎஃப் வாங்குவது கூடுதல் லாபம் தர வாய்ப்பளிக்கும் எனக் கூறியுள்ளனர். அது குறித்த தேடல் மற்றும் ஆய்வில் ஈடுபட்டபோது தெரியவந்த சில விஷயங்கள் மிகுந்த ஆச்சரியமளித்தன.
சரியாக ஓராண்டுக்கு முந்தைய அதே விலை
முன்னணியில் உள்ள Nippon India Silver ETF (SILVERBEES) மற்றும் ICICI Prudential Silver ETF (SILVERIETF) ஆகியவற்றின் ஓராண்டு கால கிராப்பை முழுமையாகப் பார்த்தபோது, ஓராண்டுக்கு முன்பு இருந்த விலை அல்லது அதை ஒட்டித்தான் (சுமார் ₹147 மற்றும் ₹153) இப்போதும் அவை கிடைக்கின்றன என்பதை அறிய நேர்ந்தது. கணக்கிட்டுப் பார்த்தபோது இரண்டுமே ஓராண்டுக்கு முந்தைய விலையிலிருந்து உச்சத்தில் சுமார் 140 சதவீதம் உயர்ந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு அருகில் திரும்பியிருப்பதும் தெரிந்தது.
இதைத் தொடர்ந்து தங்க ஈடிஎஃப்-க்காக மாதிரிக்கு கோல்ட் பீஸ் (GOLDBEES) நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அதுவும் ஒரு வருடத்திற்கு முந்தைய விலையான ₹102 என்ற நிலையிலேயே இருந்தது. அது மட்டுமல்ல; அதுவும் சில்வர் ஈடிஎஃப் மாதிரியான சார்ட் அமைப்பையே கொண்டிருப்பது இன்னமும் பேராச்சரியத்தைக் கொடுத்தது.
நிப்பான் இந்தியா சில்வர் ஈடிஎஃப் சார்ட்டையும், ஐசிஐசிஐ புருடென்ஷியல் சில்வர் ஈடிஎஃப் சார்ட்டையும் அருகருகே வைத்துப் பார்த்தால், இரண்டுமே ஒரே மாதிரியான மலைமுகடு போலவும், ஏறத்தாழ ஒத்த சதவீத ஏற்ற இறக்கத்துடனும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம், இவை சாதாரண ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் அல்ல; பாசிவ் கமாடிட்டி ஃபண்டுகள் (Passive Commodity Funds) என்பதுதான்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு ஃபண்ட் மேனேஜரும் வெவ்வேறு நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதால், ஃபண்டுக்கு ஃபண்ட் லாபமும் கிராப் வடிவமும் மாறுபடும்.
ஆனால், சில்வர் ஈடிஎஃப் நடத்தும் அனைத்து நிறுவனங்களுமே முதலீட்டாளர்களின் பணத்தைக் கொண்டு பாதுகாப்புப் பெட்டகங்களில் 99.9 சதவீதம் தூய்மையான அசல் வெள்ளிக் கட்டிகளை மட்டுமே வாங்கி வைக்கின்றன. இதனால், சந்தையில் வெள்ளி விலை பத்து சதவீதம் உயர்ந்தால், இந்தியாவில் உள்ள அனைத்து சில்வர் ஈடிஎஃப்-களும் பத்து சதவீதம் உயரும்; சரிந்தால் அனைத்துமே ஒரே அளவில் சரியும்.
அந்தந்த ஃபண்டுகள் தொடங்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப அவற்றின் ஒரு யூனிட் விலை (NAV) ₹147 ஆகவோ, ₹153 ஆகவோ சற்று மாறுபடலாமே தவிர, அவற்றின் வளர்ச்சி சதவீதமும் கிராப் வரைபடமும் அச்சு அசலாக ஒன்றாகவே இருக்கும்.
அதேபோல, கோல்ட் ஈடிஎஃப்-களும் தூய தங்கத்தின் விலையை மட்டுமே பிரதிபலிப்பதால், அனைத்து நிறுவனங்களின் கோல்ட் ஈடிஎஃப் கிராப்புகளும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன.
2026 ஜனவரியில் உச்சமும், நவம்பரில் வீழ்ச்சியும் ஏன்?
கடந்த 2026 ஜனவரி 29-ஆம் தேதி தங்கம், வெள்ளி ஈடிஎஃப்-கள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டன. உலகளாவிய போர்ப் பதற்றங்கள், பணவீக்க அச்சம் மற்றும் ஊக வணிகம் காரணமாக 2025 இறுதியிலும் 2026 தொடக்கத்திலும் முதலீட்டாளர்கள் தங்கம், வெள்ளியைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினர். இதனால் சில்வர் ஈடிஎஃப் தனது ஓராண்டு கால அடிப்படை விலையிலிருந்து சுமார் 140 சதவீதம் உயர்ந்து அசுர வளர்ச்சி கண்டது; கோல்ட் ஈடிஎஃப்-ம் சுமார் 28 சதவீதம் வரை உயர்ந்தது.
ஆனால், அதன் பிறகு சர்வதேசப் பொருளாதாரச் சூழல் தலைகீழாக மாறியது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பும், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் உயர்ந்த வருவாயும் பெரிய முதலீட்டாளர்களைத் தங்கம், வெள்ளியிலிருந்து வெளியேறச் செய்தது.
வட்டி வருமானம் இல்லாத தங்கம், வெள்ளி முதலீடுகளைவிட, நிலையான வட்டி தரும் பத்திரங்கள் பாதுகாப்பானவை என அவர்கள் கருதினார்கள்.
கூடவே, சர்வதேச அளவில் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பங்குகள் கடுமையாகச் சரிந்தபோது ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும் உடனடிப் பணத் தேவைகளைச் சமாளிக்கவும் சில முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளை விற்றுப் பணமாக்கினர். இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையாமல், இந்த ஆண்டில் நவம்பர் 20 வரை டாலருக்கு எதிராகச் சுமார் 3.3 சதவீதம் குறைந்திருந்தது; இது சர்வதேச விலைச் சரிவின் தாக்கத்தை உள்நாட்டில் ஓரளவு தணித்தது.
தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்த ஆண்டு உச்ச விலையிலிருந்து ஒவ்வொரு பிரிவும் எவ்வளவு குறைந்து கிடைக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட ஒப்பீட்டின் மூலம் புரிந்துகொள்ளலாம். கணக்குகள் துல்லியமானவையல்ல - நுண்ணிய வித்தியாசங்கள் இருக்கலாம்.
முதலீட்டு நோக்கத்தில் அணுகுபவர்களுக்குச் செய்கூலி, சேதாரம் மற்றும் நேரடியாக உலோகத்தைப் பாதுகாக்கும் சிக்கல்கள் இல்லாத Gold ETF மற்றும் Silver ETF ஆகிய இரண்டுமே லாப வாய்ப்புள்ள முதலீட்டுத் தேர்வுகள்தான். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; ஆனால், இவற்றின் விலை நகரும் வேகத்தில் முக்கியமான வேறுபாடு உள்ளது:
Gold ETF - ஒப்பீட்டளவில் மிதமான ஏற்ற இறக்கம்: தங்கத்தின் விலை வெள்ளியைவிடப் பொதுவாகக் குறைந்த ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருக்கும்; எனினும், அதுவும் குறுகிய காலத்தில் கடுமையாகச் சரியக்கூடும். போர்ட்ஃபோலியோவிற்கு நிலைத்தன்மை அளிக்கவும், பங்குச்சந்தை வீழ்ச்சியின்போது பாதுகாப்பாகச் செயல்படவும் உதவக்கூடியது.
Silver ETF - அதிவேக ஏற்ற இறக்கம்: வெள்ளிக்கு ஆபரணத் தேவையைத்தாண்டி சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் (EV) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் பெரும் தொழில்நுட்பத் தேவை உள்ளது. இதனால், வெள்ளியின் விலை உயரும்போது திடீரென்று மிக வேகமாக உச்சத்திற்குச் செல்லும்; வீழ்ச்சி அடையும்போதும் தங்கத்தைவிட மிக அதிகமாகக் கீழே இறங்கும் தன்மை கொண்டது.
தற்போதைய சூழலில் Gold ETF மற்றும் Silver ETF ஆகிய இரண்டுமே ஓராண்டிற்கு முந்தைய விலை அல்லது அதையொட்டியே கிடைப்பதால், முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்திற்கும் ரிஸ்க் தாங்கும் திறனுக்கும் ஏற்ப இரண்டிலுமே முதலீடு செய்யலாம்.
எனினும், நீண்டகாலப் பாதுகாப்பையும் நல்ல லாபத்தையும் சமநிலைப்படுத்த விரும்புபவர்களுக்கு தங்கத்தில் அதிகமாகவும், வெள்ளியில் சற்றுக் குறைவாகவும் முதலீடு செய்வது நல்ல அணுகுமுறையாகும். குறிப்பாக, கமாடிட்டி முதலீட்டிற்காக ஒதுக்கும் தொகையில் தங்கத்தில் இரண்டு பங்கு (Gold ETF) மற்றும் வெள்ளியில் ஒரு பங்கு (Silver ETF) என்ற 2:1 விகிதத்தைப் பரிசீலிக்கலாம். இதன் மூலம் தங்கத்தின் ஒப்பீட்டளவிலான நிலைத்தன்மையையும், வெள்ளியின் அதிவேக வளர்ச்சி வாய்ப்பையும் இணைக்க முயலலாம்.
வரலாறு தந்த இந்த அரிய விலைத் திருத்தத்தைப் பயன்படுத்தி, சிறுகச் சிறுக முதலீடு செய்பவர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளில் சிறப்பான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.