

உலக அளவில் அனைத்து நாடுகளிலும், எல்லாக் காலத்திற்கும் உகந்த ஒரு உன்னதமான செல்வமாகவும், பாதுகாப்பான முதலீடாகவும் விளங்குவது தங்கம் மட்டுமே. தங்கம் என்பது வெறும் தனிநபர்களின் சொத்து மட்டுமல்ல, ஒரு நாட்டின் பொருளாதார பலத்தைத் தீர்மானிக்கும் அரசாங்கத்தின் கையிருப்பும்கூட. தனிநபர்களைப் பொறுத்தவரை ஆபரணம், சேமிப்பு, அவசரகால உதவிக்கான தங்கம் முதலீடு எனப் பல பரிமாணங்களில் தங்கம் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது.
பண்பாடும் சமூக அந்தஸ்தும்
இந்தியாவிலும் தமிழகத்திலும் தங்கம் நமது பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் கலந்த உணர்வுப் பூர்வமான (Sentiment) உலோகம். அது நமது சடங்கு, சம்பிரதாயங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமணம், காதுகுத்து, பூப்பு நன்னீராட்டு விழா உள்ளிட்ட எந்தவொரு குடும்ப வைபவமாக இருந்தாலும், அதற்காகத் தங்கம் வாங்குவது தவிர்க்க முடியாத கட்டாய நடைமுறை.
ஒரு குடும்பத்தில் பெண்கள் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பெருமையோடும் கௌரவத்தோடும் மதிப்பிடப்படுகிறது. தமிழகப் பெண்களுக்குத் தங்க நகைகள் மற்றும் பட்டுப் புடவைகள் மீதான ஆசை என்பது தொன்றுதொட்டுத் தொடர்ந்து வரும் 'பாரம்பரிய ஆசை'.
இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் இலக்காகவும், கனவாகவும் இருக்கிறது. உறவினர்கள், அயல்வாசிகள் கூடும் பொதுவெளியில் பெண்களுக்குச் சமூக அந்தஸ்தையும் கௌரவத்தையும் தருவதில் தங்கத்திற்கு முக்கியப் பங்குண்டு. வீட்டில் உள்ள பெண்கள் அதிக அளவில் நகைகள் அணிந்திருப்பது, அதற்குச் சூத்திரதாரியாக விளங்கும் குடும்பத்து ஆண்களுக்கும் சமூகத்தில் மறைமுக மதிப்பைத் தேடித்தருகிறது.
எளியோரின் அவசரகாலத் தோழன்
ஆபரணத் தேவையைத்தாண்டி முதலீடு, அவசரகாலச் சேமிப்பு என்ற நோக்கிலும் தங்கம் முக்கிய நுகர்பொருளாக உள்ளது. வசதி படைத்தவர்கள் எதிர்காலத்தில் விலை கூடும்போது விற்று லாபம் பார்க்கலாம் என்று தங்க நாணயங்களையோ, கட்டிகளையோ வாங்கி வைப்பார்கள். ஆனால், ஏழை எளிய மக்களோ தங்களின் பொருளாதாரப் பற்றாக்குறையைச் சமாளிக்கவே தங்கத்தைச் சேமிக்கிறார்கள்.
திடீரென வரும் மருத்துவச் செலவு, கல்விச் செலவு போன்ற அவசரத் தேவைகளின்போது, வெளியில் கந்துவட்டிக்கோ அல்லது அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதற்கோ சென்றால் அது பெரும் பொருளாதாரச் சுமையையும் வீண் செலவையும் உண்டாக்கும்.
அதற்குப் பதிலாக, தங்க நகைகளைச் சிறுகச் சிறுகச் சேமித்துவைத்தால், அவசர காலத்தில் அவற்றை எளிதாக அடமானம் வைத்தோ அல்லது விற்றோ எந்தவித அலைச்சலும் சிரமமும் இன்றி உடனடிப் பணத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
2025-ன் வரலாற்று சுனாமி மற்றும் தற்போதைய ஈர்ப்பு
தங்கத்தின் விலை குறையும்போது 'இன்னும் குறையுமா?' என்றும், ஏறும்போது 'ஐயோ! இன்னும் ஏறுவதற்குள் வாங்கிவிட வேண்டும்' என்றும் மக்கள் எப்போதும் தங்கச் சந்தையைக் கூர்ந்து கவனிப்பது வழக்கம். ஆனால், கடந்த 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட தங்க விலை உயர்வு என்பது இதுவரை கண்டிராத மாபெரும் வரலாற்றுப் பாய்ச்சல் ஆகும்.
வழக்கமாகத் தங்கம் ஆண்டுக்குச் சராசரியாக 8% முதல் 9% வரை மட்டுமே விலை உயரும். ஆனால், கடந்த 2025-ல் தங்கத்தின் விலை 100%-க்கும் மேல் உயர்ந்து, அப்படியே இரண்டு மடங்கிற்கும் மேலாக மாறியது சந்தையில் ஒரு 'சுனாமித் தாக்குதலைப்' போல அமைந்தது.
இந்த பிரம்மாண்ட விலை ஏற்றத்தின் காரணமாக, தங்கம் இன்று சாதாரண ஏழை எளிய மக்கள் வாங்குவதற்குக் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த அசுர விலையேற்றம் காரணமாகவே அதன் மீதான ஈர்ப்பும், முதலீட்டு மதிப்பும் மக்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.
சொத்து ஒதுக்கீட்டில் தங்கத்தின் சதவீதம்
நிதி மேலாண்மையின் அடிப்படை விதிகளின்படி, ஒருவர் தனது அடிப்படைத் தேவைகள், சேமிப்பு, ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகள், அவசரகால நிதி ஆகியவற்றைச் சரியாகத் திட்டமிட்ட பிறகே முதலீட்டுப் பகுதிக்குள் நுழையவேண்டும்.
நிலம், வைப்பு நிதி (FD), பங்குச்சந்தை போன்ற பல்வேறு முதலீட்டுச் சாதனங்களில் முதலீடு செய்யும்போது, 'சொத்து ஒதுக்கீடு' (Asset Allocation) மிக முக்கியம். அப்போதுதான் ஒரு துறையின் சந்தை வீழ்ச்சியடையும்போது, மற்றொன்று போர்ட்ஃபோலியோவைத் தாங்கிப் பிடிக்கும்.
பொதுவாக, ஏழைகள், நடுத்தர மக்கள் தங்களது மொத்த சொத்து மதிப்பில் (Net Worth) 10% முதல் 15% வரை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்யவேண்டும். காரணம், தங்கம் என்பது ஒரு பாதுகாப்பான முதலீடே தவிர, அது பங்குச்சந்தையைப் போலவோ அல்லது நிலத்தைப் போலவோ குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியைத் தராது.
மேலும், 2025-ல் நிகழ்ந்ததைப் போன்ற அதீத விலை உயர்வு என்பது மீண்டும் நிகழ்வதற்குச் சில பல ஆண்டுகள், அல்லது ஓரிரு பத்தாண்டுகள்கூட ஆகலாம். எனவே, நடுத்தர மக்கள் தங்களின் மொத்தப் பணத்தையும் தங்கத்திலேயே முடக்கி வைத்தால், பணவீக்கத்தைத் தாண்டிய பெரும் லாபத்தை (Inflation-beating returns) அவர்களால் பெறமுடியாமல் போய்விடும். எனவே, 2025 மாதிரியான இரட்டிப்பு விலை கிடைக்கக்கூடும் எனக் கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்வது சரியானதல்ல.
குடும்பத் தேவைகளுக்கான ஆபரணத் தங்கம் தனி; ஆனால் முதலீட்டு நோக்கில் 10-15% என்பதே பாதுகாப்பானது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் தங்க ஈடிஎஃப் (Gold ETF) சதவீதமும்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தங்கத்தை நேரடியாக வாங்கி, செய்கூலி, சேதாரம் மற்றும் திருட்டு பயத்துடன் லாக்கரில் வைப்பதற்குப் பதிலாக, பங்குச்சந்தையின் வழியே 'தங்க ஈடிஎஃப்' (Gold ETF) முதலீடு செய்வது தற்கால நவீன நடைமுறையாக மாறியுள்ளது.
பங்குச்சந்தையில் தீவிரமாக முதலீடு செய்யும் ஒரு முதலீட்டாளர், தனது போர்ட்ஃபோலியோவில் (Portfolio) தங்க ஈடிஎஃப்பிற்கு 5% முதல் 10% வரை ஒதுக்கீடு செய்வது போதுமானது. காரணம், பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் காலங்களில் (Bear Market), தங்கத்தின் விலை பொதுவாக ஏறுமுகத்தில் இருக்கும். சந்தை அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு 'ஹெட்ஜிங்' (Hedging) கருவியாகவே தங்கம் செயல்படுகிறது.
ஒருவரது போர்ட்ஃபோலியோவில் 10%-க்கு மேல் தங்க ஈடிஎஃப் இருந்தால், அது ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவின் கூட்டு வளர்ச்சியை (CAGR) மந்தமாக்கிவிடும்.
நீண்ட கால நோக்கில் நல்ல லாபம் பெற 80-90% நிதியை வளரும் நிறுவனங்களின் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளிலும் (Mutual Funds), எஞ்சிய 5-10% நிதியைத் தங்க ஈடிஎஃப்பிலும் வைப்பதே புத்திசாலித்தனமான நிதி மேலாண்மை ஆகும்.
வளமை மற்றும் கௌரவத்தின் அடையாளமாகத் திகழும் தங்கம், உங்கள் போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு சிறந்த 'பாதுகாப்பு அரண்' மட்டுமே, அதுவே முழுமையான முதலீட்டுத்தளமாக இருக்கக்கூடாது என்பதை உணர்ந்து முதலீடு செய்வதே லாபகரமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: