ஜாமீன் கையெழுத்து போடுகிறீர்களா? இந்த 5 ஆபத்துகளை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

உறவுக்காக கையெழுத்து போட்டு உங்க சொத்தையும் நிம்மதியையும் இழக்காதீங்க!
ஜாமீன் கையெழுத்து - Loan Guarantor
ஜாமீன் கையெழுத்து - Loan GuarantorAI Image
Updated on

ருவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது என்பது அவர்கள் வாங்கும் கடனுக்கு உங்களையும் பொறுப்பாக்குவதாகும். கடன் வாங்குபவர் தவணை செலுத்தத் தவறினால், அந்த முழுக் கடனையும் அடைக்கும் பொறுப்பு ஜாமீன்தாரருக்கு வந்துவிடும். எனவே உறவு மற்றும் நட்பின் காரணமாக ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை சிந்திக்க வேண்டியது அவசியம்.

கடனை வாங்குபவர் அதைத் திருப்பி செலுத்தத் தவறினால் அந்த முழு கடனுக்கும் நம்மை முழு பொறுப்பாக்கும் சட்டபூர்வமான ஒப்பந்தம் ஆகும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் (Repayment Capacity):

கடன் வாங்குபவருக்கு முறையான வருமானம் உள்ளதா, வாங்கிய கடனை சரியான நேரத்தில் அவர்களால் அடைக்க முடியுமா, வேலை அல்லது தொழில் சார்ந்த ஸ்திரத்தன்மை இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்கவேண்டும். அவர்கள் மீது முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஜாமீன் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் கடன் கட்டாத சூழ்நிலையில் உறவு மற்றும் நட்பில் விரிசல் ஏற்படுவதுடன் மன உளைச்சலும், தேவையற்ற சட்டப் போராட்டங்களும் உண்டாகலாம்.

தொடர்ச்சியான உத்திரவாதம் (Continuing Guarantee):

ஜாமின் ஒப்பந்தத்தில் தொடர்ச்சியான உத்தரவாதம் என்ற வாசகம் இருந்தால், எதிர்காலத்தில் அந்த நபர் வாங்கும் மற்ற கடன்களுக்கும் நீங்கள் பொறுப்பாக நேரிடும். எனவே இந்த வாசகம் உள்ளதா என்பதை நன்கு கவனிக்கவும்.

நீங்கள் ஜாமீன் கையெழுத்திடும் பொழுது உங்கள் சொந்த சொத்து ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால், கடன் செலுத்தாத பட்சத்தில் உங்கள் சொத்துக்கள் ஏலத்திற்கு வரலாம்.

ஜாமீன்தாரரின் நிதிப்பொறுப்பு (Financial Liability):

கடன் வாங்குபவர் தவணை செலுத்தத்தவறினால் அல்லது தலைமறைவானால் நம்மீதுதான் வங்கி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும். உங்கள் மீது வங்கியால் ரெக்கவரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் வரை செல்ல நேரிடலாம்.

ஜாமீன் கையெழுத்து - Loan Guarantor
ஜாமீன் கையெழுத்து - Loan GuarantorAI Image

உங்கள் சொத்துக்களை வங்கி ஜப்தி செய்ய நேரிடலாம். உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் வங்கிக்கு உரிமை உண்டு. உங்கள் வருமானம் அல்லது சொத்துக்கள் மூலம் அந்தக் கடனை அடைக்க நீங்கள் கடமைப்பட்டவர் ஆகிறீர்கள்.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிப்பு (Credit Score Impact):

கடன் வாங்குபவர் உரிய நேரத்தில் தவணை கட்டத் தவறினால், அது கடன் வாங்குபவரின் சிபில் (CIBIL) ஸ்கோரை மட்டுமல்லாமல், உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையும் கடுமையாக பாதிக்கும். இதனால் எதிர்காலத்தில் உங்களுக்குத் தேவைப்படும் பொழுது வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்றவை கிடைப்பதில் சிரமம் ஏற்படும். சில சமயம் கிடைக்காமல் போகக்கூட வாய்ப்பு உண்டு.

கடன் தொகையும் காலமும் (Loan Amount and Tenure):

அந்தக் கடனின் மொத்தத்தொகை எவ்வளவு மற்றும் எத்தனை ஆண்டுகள் ஜாமீன் பொறுப்பு நீடிக்கிறது என்பதை ஆராய வேண்டும். நீண்ட காலக் கடன்களுக்கு ஜாமீன் போடுவது அதிக ஆபத்தாக மாறலாம்.

இதையும் படியுங்கள்:
உங்க கிரெடிட் கார்டை நீங்களே கேன்சல் செய்தால் இவ்ளோ பெரிய ஆபத்து வருமா... உஷார் மக்களே!
ஜாமீன் கையெழுத்து - Loan Guarantor

உங்கள் எதிர்காலத் தேவைகள் (Personal Financial Goals):

எதிர்காலத்தில் நீங்கள் சொந்தமாக வீடு, வாகனம் அல்லது தொழில் தொடங்க கடன் வாங்க திட்டமிட்டு இருக்கலாம். நீங்கள் ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்கும் கடன், உங்களின் கடன் தகுதியை (Borrowing Capacity) குறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடும். எனவே கவனம் தேவை.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

கடன் வாங்கியவர் எதற்காகக் கடன் வாங்குகிறார், அதை எப்படித் திருப்பி செலுத்தப்போகிறார் என்ற தெளிவான திட்டம் உள்ளதா என்று விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

கடன் வாங்கியவரின் வேலை, நிதி நிலைத்தன்மை மற்றும் குடும்ப சூழல் ஆகியவற்றையும் கணக்கிட்டு யோசித்து முடிவு எடுக்கவும். குறிப்பாக ஆடம்பரமான செலவுகளுக்கு (சுற்றுலா போவதற்காக அல்லது தேவையற்ற பொருட்களை வாங்குவதற்காக ஆசைப்பட்டு) கடன் வாங்குபவர்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்ப்பது நல்லது.

உங்களால் திருப்பி செலுத்தக்கூடிய அளவிற்கு மட்டுமே ஜாமீன் கையெழுத்திட வேண்டும். உங்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் அவசர தேவைகளுக்கான நிதியை இது பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கடன் காப்பீடு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை: வணிகத்தை நஷ்டத்திலிருந்து காப்பது எப்படி?
ஜாமீன் கையெழுத்து - Loan Guarantor

கடன் வாங்கியவர்களின் அனுமதி இன்றி வட்டி விகிதம் மாற்றப்பட்டால் ஜாமீன்தாரர் பொறுப்பிலிருந்து விலகச் சட்டத்தில் இடம் உண்டு. நீங்கள் ஜாமீன் கேட்டு வரும் நபர் உறவினரா அல்லது நண்பரா என்பதைப் பொறுத்தும், கடனின் அளவு மற்றும் வகையைப் பொறுத்தும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

அந்த நபர் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை முறையாகச் செலுத்தியிருக்கிறாரா? அவரது நன்னடத்தை எப்படி உள்ளது என்பதை கவனிக்கவேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் நம்மை ஆபத்தில் தள்ளிவிடாமல் இருக்கும்.

இந்தத் தகவல்களை அறிவதன் மூலம், தேவையற்ற கடன் சுமைகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் சிபில் ஸ்கோர் வீழ்ச்சி ஆகியவற்றில் இருந்து உங்கள் சொந்தச் சொத்துக்களையும் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com