
ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி பலருக்கும் தெளிவான புரிதல்கள் இல்லை. அதை பற்றிய பல கட்டுக்கதைகளும் தவறான கருத்துக்களும் மக்களிடையே நிலவுகின்றன. அவை என்ன? உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. இளைஞர்களுக்கு மருத்துவக் காப்பீடு தேவையில்லை. இளமையாகவும் ஆரோக்கியமான உடல் தகுதியுடனும் உள்ள இளைஞர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டம் தேவையில்லை என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆனால் இது உண்மையல்ல. யாருக்கு எப்போது நோய் அல்லது விபத்து ஏற்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே வயது மற்றும் உடல் நிலையை பொருட்படுத்தாமல் அனைவரும் நல்ல மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெறுவது புத்திசாலித்தனம். மேலும் இளமையாக இருக்கும் போது குறைந்த ப்ரீமியத்தில் காப்பீடு கிடைக்கும்.
2. மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த உடனேயே காப்பீடு கிடைக்கும் என்று நினைப்பது தவறு.
சில நோய்களுக்கு காத்திருப்புக் காலம் முடிந்த பின்னரே காப்பீடு செய்யப்படும். எனவே ஒரு பாலிசியில் சேரும்போதே அது குறித்த விவரங்களை கவனமாக படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
3. மலிவு விலைக் காப்பீடு தான் சிறந்தது என்று நினைக்கிறார்கள்.
ஆனால் இது உண்மையல்ல. ஒரு திட்டத்தில் தொகையை பார்த்து மட்டும் காப்பீடு பெற முடியாது. அதன் அம்சங்கள் என்ன என்பதை கவனிக்க வேண்டும். தங்கள் தேவைகளுக்கு ஏற்ற திட்டம் என்ன என்று தெரிந்து கொண்டு அந்த பாலிசியை எடுக்க வேண்டும்.
4. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு முதலாளிகள் குழு சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறார்கள். இவை நல்லவை தான் என்றாலும் காப்பீடுத் தொகை குறைவாகவே கிடைக்கும் எனவே சொந்தமாக பாலிசி எடுப்பது நல்லது.
5. கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு காப்பீடு கிடைக்காது என்று நினைக்கிறார்கள்.
பெரும்பாலான குடும்ப சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் மகப்பேறும் சேர்க்கப்பட்டுள்ளது. சிறப்பு மகப்பேறு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களை தெரிந்து கொண்டு அந்தப் பாலிசிகளை எடுக்கலாம்.
6. மருத்துவமனையில் அட்மிட் ஆகி வைத்தியம் பார்த்துக் கொண்டால்தான் காப்பீடு கிடைக்கும் என்பது இல்லை.
சுகாதாரத் திட்டத்தில் பகல் நேரப் பராமரிப்பு நடைமுறைகள், ஒபிடி (OPD) செலவுகள், நோயாளிகள் சோதனைகள் போன்றவற்றுக்கும் காப்பீடு பெறலாம்.
7. ஆன்லைன் காப்பீட்டு திட்டங்கள் மோசடியானது என்கிற கருத்து இருக்கிறது.
இது பாதுகாப்பானது தான். சிறந்த சலுகைகளைப் பெற, சிக்கனமான தொகை செலுத்தத் தகுதியான ஆன்லைன் பாலிசிகளை எடுக்கலாம்.
8. புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் உடல் நலக் காப்பீட்டிற்கு தகுதியற்றவர்கள் என்கிற தவறான கருத்து இருக்கிறது.
அவர்களுக்கு உடல் நல அபாயங்கள் இருந்தபோதிலும் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு நல்ல பாலிசிகளை வழங்குகின்றன. ஆனாலும் அதிக ப்ரீமியங்களை செலுத்தும் பாலிசியில் சேராமல் சரியான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
9. முன்பே இருக்கும் நோய்களை மறைத்து காப்பீட்டைப் பெற நினைக்கிறார்கள்.
ஒரு பாலிசி எடுக்கும் போது தங்களுடைய உடல் நிலையைப் பற்றிய உண்மையை தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் காப்பீட்டுத் தொகை மறுக்கப்படலாம்.
10. பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீடு கிடைக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களில் கூட விரிவான நெட்வொர்க்களை வைத்திருக்கின்றன. விசாரித்து அறிந்து கொண்டு சிகிச்சை பெறுவது நலம்.
11. இந்தியாவில் மருத்துவக் காப்பீடு மிகவும் விலை உயர்ந்தது என்று நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் குறைந்த அளவில் பணம் கட்டக்கூடிய திட்டங்களும் இருக்கின்றன. சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் வரி விலக்கு அளிக்கக் கூடியவை என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. இது செலவை மேலும் குறைக்கும்.
12. மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது காப்பீட்டு நிறுவனம் அனைத்து செலவுகளையும் ஏற்கும் என்று நினைக்கிறார்கள்.
பாலிசிகளில் சில விதிவிலக்குகளும் நிபந்தனைகளும் இருக்கும். அதற்கு உட்படாத சிகிச்சைகளுக்கு காப்பீடு கிடைக்காது. மருத்துவமனையில் ஏசி அறையில் தங்கும் போது அந்த செலவை காப்பீட்டு நிறுவனம் ஏற்காது.
13. சரியான நேரத்தில் காப்பீட்டைப் புதுப்பிக்கத் தவறினால் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும் என்பது கட்டுக்கதை.
காப்பீட்டு திட்டம் காலாவதியான பிறகும் பாலிசிதாரர்கள் அபராதம் இல்லாமல் அதை புதுப்பிக்க பதினைந்தில் இருந்து 30 நாட்கள் அவகாசம் உள்ளன. ஆனால் இதற்கிடையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகை பாலிசியின் கீழ் வராது.