Credit History - கிமு 3000 ஆண்டுகளிலேயே சுமேரிய நாகரிகத்தில், தெற்கு மெசபடோமியாவில் விவசாய சமுதாயத்தில் கடன்கள் தொடங்கிவிட்டன. அந்தக் கடன்கள் களிமண் பலகைகளில் குறிக்கப்பட்டன. அவை கோயில்கள் மற்றும் அரண்மனைகள் வாயிலாக நிகழ்ந்தன. விதைகள் மற்றும் கால்நடைகள் போன்றவை கடனாக பெறப்பட்டு, வட்டியுடன் அவை திரும்ப செலுத்தப்பட்டன. எவ்வளவு வட்டி, வானம் பொய்த்தால் என்ன செய்ய வேண்டும், திவால் சந்தர்ப்பங்களைக் கையாள்வது எப்படி என்பது போன்ற விவரங்கள் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டன.
மேலும், அதிக கடன் சுமை ஏற்படும் பட்சத்தில், சமூக சீர்க்கேட்டைத் தடுக்க, அரசர்கள் தலையிட்டு கடன்களைத் தள்ளுபடி செய்தனர். உலகத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஆரம்ப கால ஆவணங்களில் ஒன்றான ஹமுராபியின் விதிகளில் கடன் சம்பந்தமான தகவல்கள் உள்ளன. கடன் வாங்கி ஒருவன் கடனைத் திரும்பி செலுத்தாவிட்டால் அவனது குடும்பம் சில காலம் கடன் கொடுத்தவருக்கு வேலை செய்ய வேண்டிய விதிகள் இருந்தன.
அரசர் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமான விதிகள் இருந்தன. எனவே, பண்டமாற்று காலத்திலேயே கடன்கள் தொடங்கி விட்டன.
பணம் என்ற ஒன்று கிமு 800 வாக்கில் தான் பயன்பாட்டுக்கு வந்தது. முக்கியமாக, போர்வீரர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. பணம் வந்தபிறகு, வரிகளும் பணமாக செலுத்தும் முறை வந்தது.
மதங்கள் உருவான போது, அதிக வட்டி வாங்குவதென்பது (usury) தவறான விஷயமாக போதிக்கப்பட்டது. ரிக் வேதத்தில் கடன் சம்பந்தமான தகவல்கள் உள்ளன. மௌரிய மற்றும் குப்த சாம்ராஜ்யங்களின் போது, நிதி நிறுவனங்கள் வந்தன. பணப்பரிமாற்றப் பத்திரங்கள்(bill of exchange) பயன்பாட்டுக்கு வந்தன. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் கடன் வாங்குவது சம்பந்தமான தகவல்கள் உள்ளன. பொருட்களை அடமானமாக வைத்து, கடன்களைக் கொடுக்கும் முறை (mortgage) பண்டைய கிரேக்கத்தில் தொடங்கியது. கிரேக்கத்தில், கடன்களுக்கு வட்டிகள் சம்பந்தமான கட்டுப்பாடுகள் இருந்தன.
இடைக்காலத்தில், கிருத்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் வட்டி வசூலிப்பது ஏற்றுக்கொள்ளப்படாததால், வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டன. சில நாடுகளில், வங்கிகள் மூடப்பட்டன. மறுமலர்ச்சி காலத்தில் (renaissance), வட்டி வசூலிப்பது ஏற்கப்பட்டது. மறுபடியும் வங்கிகள் வளர்ச்சி அடைந்தன. இத்தாலியில் கடன் வழங்கும் குடும்பங்கள், வங்கிகள் தொடங்கின.
உறுதிமொழிப் பத்திரங்கள்(Promissory notes) போன்றவை, வணிகர்கள் நாணயங்களை சுமந்து செல்வதை தவிர்க்க உதவின. இந்தியாவிலும் 12 ஆம் நூற்றாண்டு முதல் இத்தகைய உறுதிமொழிப் பத்திரங்கள் போன்றவை தொடங்கின. முகலாயர் காலத்தில், கேட்கும் போது திருப்பித் தர வேண்டிய கடன் (தஸ்தாவேஜூ-இ- இந்துல்தலாப்) மற்றும் சில காலம் கழித்து திரும்பத் தர வேண்டிய கடன் (தஸ்தாவேஜூ-இ-மியாதி) போன்ற வணிக கடன்கள் இருந்தன.
இங்கிலாந்தில் கிபி 1694 ஆம் ஆண்டு பாங்க் ஆப் இங்கிலாந்து தொடங்கப்பட்டது. இது பிரான்ஸூடான போருக்கு நிதி திரட்டத் தொடங்கப்பட்டது. இது மத்திய வங்கி முறைக்கு(Central Bank) வித்திட்டது. நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழி நடத்தவும், வட்டிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், தனியார் வங்கிகளை வழிநடத்தவும் உதவியது. இந்தியாவிலும் கிபி 1770 ஆம் ஆண்டு பாங்க் ஆப் இந்துஸ்தான் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. கிபி 1793 இல் ஜமீன்தாரி முறை இந்தியாவில் அறிமுகமானது. ஜமீன்தார்களிடம் கடன் பெற்று, அதற்காக ஜமீன்தாருக்காக உழைக்க வேண்டும். இது கிபி 1951 இல் ஒழிக்கப்பட்டது.
19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் அடமானக் கடன், தனிநபர்க் கடன் போன்றவை வந்தன. இவை கடன்களை நடுத்தர மக்களும் பெற உதவின. இந்தியாவில் பாம்பே, கல்கத்தா, மதராஸ் மாகாணங்கள் உருவானதை ஒட்டி, வங்கிகளும் உருவாகின.
அவை வங்கிகள் சார்ந்த நடைமுறைகளை கொண்டு வந்தன. சுதேசி இயக்கத்தை ஒட்டி, இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல சுதேசி வங்கிகள் வந்தன. மாகாண வங்கிகள் ஒன்று சேர்ந்து கிபி 1921இல் இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா உருவானது.
கிபி 1935இல் பாரத ரிசர்வ் வங்கி முதல் உலகப் போரினால் உருவான பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க உருவானது. கிபி 1913 முதல் சுதந்திரம் வரை கிட்டத்தட்ட 400 வங்கிகள் திவாலாயின. விவசாயிகள் மற்றும் சிறு குறு வணிகர்கள் கடன் வாங்கி பயன்பெற கூட்டுறவு கடன் வழங்கும் நிறுவனங்கள் பல தொடங்கப்பட்டன. இம்பீரியல் வங்கி கிபி 1955இல் பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் போன்றவை அறிமுகமாயின. சுதந்திரத்திற்குப் பிறகு, பாரத ரிசர்வ் வங்கி அரசாங்கத்தின் மத்திய வங்கியானது. கிபி 1950களில் கடனட்டை அறிமுகமானது.
கிபி 1959இல் கடன் வழங்குவதற்கான மதிப்பீடு(FICO score) அறிமுகமானது. கிபி 1969இல் தானியங்கி பணப்பொறி(ATM) அறிமுகமானது. அதன் மூலம் கடன்கள் எளிதில் சாத்தியமாகின. கிபி 1969இல் பல வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. கிபி 1973இல் கடனட்டை கணினிமயமாக்கப்பட்டது. கிபி 1980களில் வங்கிகளின் கணினிமயமாக்கல் (Computerization) தொடங்கியது.
கிபி 1990களில் இணையத்தின் வளர்ச்சி காரணமாக, இணைய வங்கி (online banking) வாயிலாக கடன் பெறுவது எளிதானது. கிபி 1990களில் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைகளினால் (Liberalization) தனியார் வங்கிகள் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் இந்தியாவில் அறிமுகமாயின.
கிபி 2008ஆம் ஆண்டு நடந்த பொருளாதார மந்தம், கடன் வழங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகளின் முக்கியத்துவத்தை அதிகரித்தது. கிபி 2000களின் பிற்பாடுகளில், கைப்பேசியின் வளர்ச்சி காரணமாக, கைப்பேசி வங்கி வாயிலாக(mobile banking) கடன் பெறுவது எளிதானது. கிபி 2010களில் சிறு நிதி வங்கிகள்(Small Finance Bank) மற்றும் பட்டுவாடா வங்கிகள்(Payment Bank) தொடங்கின. கிபி 2016இல் அறிமுகப்படுத்தப்பட்ட யூபிஐ(UPI) பணப் பரிமாற்றத்தை எளிமைப்படுத்தியது. கடன் வழங்குவது எளிதானது. மின்னியல் கடன்களின்(digital loan) எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.