

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எப்போதும் தங்கத்தின் விலை தான் புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும். ஆனால் தற்போது தங்கத்தையும் மிஞ்சிவிடும் அளவிற்கு வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.307-க்கு விற்பனையாகிறது.
தொழில்துறையில் வெள்ளியின் தேவை அதிகம் என்பதால் மட்டும் வெள்ளியின் விலை உயரவில்லை. உலகளவில் வெள்ளி ஏற்றுமதியில் முன்னணி நாடாக திகழும் சீனாவின் ஒரு சில கட்டுப்பாடுகளும் வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதோடு பெரு முதலீட்டாளர்கள் உட்பட, தற்போது சாமானியர்களும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். எப்படியும் 2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் வெள்ளியின் விலை 1,000 ரூபாயை நெருங்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தங்கத்திற்கு வங்கியில் கடன் கிடைப்பது போலவே, வெள்ளிக்கும் கடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வாய்ப்புள்ளது என தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வெள்ளியின் விலை உயர்வைத் தற்போது தடுப்பது மிகவும் கடினம். எதிர்காலத்தில் இதன் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது. டாலரின் மதிப்பு சரிவது, இஸ்ரேல் - காசா மோதல், ரஷ்யா - உக்ரைன் போர், ஈரான் உள்நாட்டு பிரச்சினை, பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் வெள்ளி ஏற்றுமதியில் சீனாவின் புதிய கொள்கை என வெள்ளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும் வெனிசுலா நாட்டை கைப்பற்றியதோடு, தற்போது கிரீன்லாந்தையும் கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
வெள்ளி மீதான முதலீடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெள்ளி நகைகளுக்கு கடனை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை உயர்வால், சாமானிய மக்கள் தஙக முலாம் பூசிய வெள்ளி நகைகளின் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
மேலும் 9 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 காரட் நகைகளின் வருகைக்குப் பின் வெள்ளி முதலீடு குறைய வாய்ப்புள்ளது” என சலானி தெரிவித்துள்ளார்
2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் வெள்ளியை ஏற்றுமதி செய்ய உரிமம் அவசியம் என சீனா உத்தரவிட்டது. இதனால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உரிமம் பெற்றுள்ள பெரு நிறுவனங்கள் மட்டுமே வெள்ளியை ஏற்றுமதி செய்யும் என்பதால், வெள்ளியில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தற்போதைய சூழலில் வெள்ளிக்கான தேவை அதிகமாக இருப்பதும், சந்தையில் வெள்ளிக்கான தட்டுப்பாடு நிலவுவதுமே தொடர் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம். கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ.82,800 கோடிக்கு வெள்ளியை வாங்கியுள்ளது. உலக அளவில் கடந்த ஆண்டு வெள்ளியை இறக்குமதி செய்த நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது இந்தியா வாங்கியுள்ள வெள்ளியின் மதிப்பு 44% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.