

வீடு மற்றும் நிலம் இரண்டில் எதில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஆனால் எது சிறந்தது என்பது நம் முதலீட்டு இலக்குகள், நிதி நிலைமை மற்றும் ஆபத்தை எதிர்கொள்ளும் திறனைப் பொறுத்தது. வீட்டில் முதலீடு செய்வது என்பது வாடகை வருமானம் மற்றும் நீண்ட கால சொத்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நிலத்தில் முதலீடு செய்வது என்பது எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் பொதுவாக வாடகை வருமானம் ஈட்டுவது கடினம். நம் இலக்குகள், நிதி நிலைமை மற்றும் சந்தை நிலமைகளைப் பொறுத்து நம் முதலீடு சிறந்ததாக இருக்கும்.
வீட்டில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலம் நிலையான வருமானத்தை ஈட்டலாம். காலப்போக்கில் வீட்டின் மதிப்பு உயரக்கூடும். இது ஒரு நல்ல முதலீட்டு வளர்ச்சி மற்றும் வரிச்சலுகைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். முதலீட்டாளர்கள் வாடகை வருமானம் ஈட்டலாம். வீட்டுக் கடன் வட்டி மீதான விலக்கு மற்றும் வாடகை வருமானத்திற்கான வரிச் சலுகைகள் போன்ற பல வரிச் சலுகைகள் மூலம் வரிச் சுமையை குறைக்கலாம். ஆனால் குறைபாடுகள் என்று பார்த்தால் வீட்டிற்கு பராமரிப்பு செலவுகள், பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படும். வீட்டை விற்பது நிலத்தை விற்பதை விட கடினமாக இருக்கலாம். சொத்து மதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
வீட்டில் முதலீடு செய்வதன் தீமைகள்:
வீடு வாங்குவதற்கு பெரிய தொகை தேவைப்படும். மேலும் பதிவு செலவுகள், வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவுகளும் உண்டு. வழக்கமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு பணம் செலவழிக்க வேண்டும். அசையா சொத்து என்பதால் உடனடியாக பணமாக்குவதில் சிரமம் ஏற்படும். மோசமான சந்தை நிலவரங்களால் ஏற்படும் இடர்பாடுகள், வாடகைக்கு ஆள் கிடைக்காத பட்சத்தில் வருமானம் இல்லாதது போன்றவை இதில் அடங்கும்.
நிலத்தில் முதலீடு செய்தல்:
நம்முடைய முதலீடு நீண்ட காலத்துக்கானதாக இருக்கும்போது சற்று ரிஸ்க் எடுத்து முதலீடு செய்வது கூடுதல் பலனைத் தரும். அத்துடன் நம்முடைய நிதி இலக்குகளை அடையவும் முடியும். மனை அல்லது பண்ணை நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது நீண்ட காலத்திற்கு லாபம் தரும் ஒரு வழியாகும். நிலத்தில் முதலீடு செய்தால் எதிர்கால வளர்ச்சியின் அடிப்படையில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயரக்கூடும். மதிப்புள்ள உறுதியான சொத்தாக இருப்பதால் விற்று லாபம் சம்பாதிக்கலாம், குத்தகைக்கு விடலாம்.
அதாவது விவசாயம், வணிக வாடகை, மரம், கனிம உரிமைகளுக்கான குத்தகை போன்று பொருளாதார வருவாயை உருவாக்க பயன்படுத்தலாம். நிலத்திற்கு பராமரிப்பு செலவுகள் குறைவாக இருக்கும். ஆனால் இதில் குறைபாடுகள் என்று பார்க்கும் பொழுது நிலத்தை வாடகைக்கு விடுவது கடினம். எனவே வாடகை வருமானம் ஈட்ட முடியாது. அத்துடன் முதலீடு செய்யப்பட்ட பணம் நீண்ட காலத்திற்கு முடங்கும், மேலும் அதனை உடனடியாக பணமாக மாற்றுவது கடினமாக இருக்கலாம். ஆனால் சொத்து மதிப்பு குறைய வாய்ப்பில்லை.
நில முதலீட்டின் தீமைகள்:
நிலத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நிலத்தின் பற்றாக்குறை ஏற்படுவது, நாடு முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தை அபகரித்ததாக பல வழக்குகள் பதிவாகின்றன. மனைகள் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாவதால் இதில் அதிக ஆபத்து உள்ளது என்பதை உணர வேண்டும். ஒரு நிலத்தை மறுவிற்பனை செய்வது சிக்கலானதாக இருக்கலாம். நிலத்தின் மதிப்பு வேகமாக உயர்வதால், அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கும் நபரை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கலாம்.
நீண்டகால முதலீட்டை நாடினால் நிலத்தில் முதலீடு செய்வது சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் நிலையான மற்றும் தொடர்ச்சியான வருமானம் தேவைப்படுபவர்கள் வீட்டில் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும். எனவே நம் தேவைகளுக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிக்க இந்த இரண்டு விருப்பங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். தேவைப்பட்டால் ஒரு சிறந்த நிதி ஆலோசகரை அணுகி, நம் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ற சிறந்த முதலீட்டு திட்டத்தை கண்டறியலாம்.