
இன்றைய காலகட்டத்தில், சீக்கிரம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசைதான் பலருக்கும் அதிகம் இருக்கிறது. அதற்கு ஒரு சிலர் கையாளும் ஆயுதம் தான் இந்த ஸ்டார்ட்அப் (Startup) என்ற தொழில் முனைவோர் வேடம்.
இதற்கு என்ன தேவை? எவ்வாறு வெற்றிகரமாக தொடரலாம்? ஒரு ஸ்டார்ட்அப்பை பூஜ்யத்திலிருந்து எவ்வாறு தொடங்கலாம்? தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் தங்களுக்குப் பிடித்த தொழிலை விரிவாக்கம் செய்யவும், அதற்கான உதவிகளைப் பெறவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டார்ட்அப் இந்தியா (Startup India initiative) மூலம் இந்திய அரசாங்கம் ஸ்டார்ட் அப்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. இதன் மூலம் நிதி உதவி, வரி விலக்குகள் மற்றும் எளிதான இணக்கத் தேவைகளை (Easier compliance requirements) பெற முடிகிறது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology) , அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science and Technology) போன்ற துறைகளும் மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற ஆதரவை ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.
அரசாங்கத் திட்டங்கள் தாண்டி, ஸ்டார்ட் அப்களுக்கு உதவ ஏஞ்சல் முதலீட்டாளர்கள் (Angel investors), துணிகர முதலீட்டாளர்கள் (Venture capitalists) இருக்கிறார்கள். இவர்கள் மூலம் முதலீடு தேவைக்கான நிதியுதவியைப் பெறலாம்.
இது போக, கிரவுட்ஃபண்டிங் (Crowdfunding) போன்ற சில வாய்ப்புகளும் இருக்கின்றன. இதன் மூலம் தொழில்முனைவோர் அதிக எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து பணத்தை ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் முதலீடாகப் பெற முடியும்.
கூடுதலாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல விதிமுறைகளுடன் கடன்களை வழங்குகின்றன.
அதே சமயம் இன்குபேட்டர்கள் (Incubators) மற்றும் ஆக்ஸ்லெரேடர் (Accelerator) போன்ற நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களின் தொடக்க கால வளர்ச்சிக்கு உதவ வழிகாட்டுதல்கள் (Mentorship) மற்றும் நிதிகள் பெற உதவுகின்றன.
நீங்கள் தொழில் தொடங்க சரியானவரா?
ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு முன் அவரவர்களின் திறனை மதிப்பிடுவது மிகவும் முக்கியம். இது தனிப்பட்ட பலம் மற்றும் பலவீனங்களை முழுமையாக சுய மதிப்பீடு செய்ய வேண்டிய காலம் போன்றது. அதற்கு சந்தை இயக்கவியலை (Market dynamics) புரிந்துகொள்வது மற்றும் தெளிவான வணிகப் பார்வை (Clear business vision) ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
தொழில்முனைவோர் என்றைக்கும் ஒரு வலுவான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். தொழில் மீதுள்ள அர்ப்பணிப்பு, நெகிழ்ச்சி (Resilience), சூழ்நிலைக்கேற்றவாறு நடப்பது (Adaptability) போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.
தொழில்துறையில் (Industry) தொடர்புடைய தனிப்பட்ட அனுபவத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். முந்தைய வேலைகள் மூலமாகவோ அல்லது பிற தொடக்க நிறுவனங்களுடன் (Other startups) பணியாற்றுவதன் மூலமாகவோ அந்த அனுபவத்தை பெறலாம்.
மேலும், வணிக மாதிரி (Business model), உங்களின் இலக்கு (Target market), போட்டி (Competitive analysis) மற்றும் நிதி கணிப்புகள் போன்ற வலுவான வணிகத் திட்டத்தை நீங்கள் உருவாகியிருக்க வேண்டும்.
நீங்கள் தொடங்கும் ஸ்டார்ட்அப்பை வெற்றிகரமாக நடத்த நெட்வொர்க்கிங் (Networking) முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு பிற தொழில்முனைவோருடன் தொடர்புகளை உருவாக்குவது, சில தொழில் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வது (Attending industry events) மற்றும் அனுபவம் வாய்ந்த வணிகத் தலைவர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது போன்றவை உதவும்.
அன்றாடம் முழுமையான சந்தை ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலமே தொழில்துறையில் உங்களது நிலைத்தன்மையை உறுதி செய்ய முடியும்.
ஆக, ஒரு கட்டுமானத்தை எழுப்பி பெயர் பலகை வைத்து, 'நான் ஒரு தொழில்முனைவோர் ஆகிவிட்டேன்' என்று பெருமையோடு நின்றுவிடாமல், உங்களுக்குள் இருக்கும் திறமையை மெருகேற்றி மேலே குறிப்பிட்ட விஷயங்களை பின்பற்றி உங்கள் ஸ்டார்ட்அப் பயணத்தை நீண்டகாலம் கொண்டு செல்லுங்கள்.