எட்டாக்கனியாகும் தங்கம்: விலை குறையும்போது முன்பதிவு செய்வது எப்படி?

சிறு சேமிப்பாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் தங்கம் வாங்க எளிய வழிகள்.
தங்க விலை - Gold booking Tamil
தங்க விலை - Gold booking Tamil
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதாரச் சந்தையில் அன்றாடம் உற்றுநோக்கப்படும் மிக முக்கியமான விஷயம் தங்கத்தின் விலை. பணவீக்கத்தை எதிர்கொள்ளும் பாதுகாப்பான முதலீடாகவும், பங்குச்சந்தை மற்றும் கரன்சி மதிப்புகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுகோலாகவும் இருப்பதால், தங்கத்தின் மதிப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை எனத் தினமும் இருமுறை மாறும் தங்கத்தின் விலை நிலவரம் பொருளாதார உலகிலும், பொது உலகிலும் மக்களால் தொடர்ந்து கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

பொதுவாகத் தங்கம் ஆபரணங்களாகவும், முதலீட்டுக்கான நாணயங்கள் அல்லது கட்டிகளாகவும் வாங்கப்படுகிறது. இதில் முதலீட்டுக்கான நுகர்வு, அன்றாட வாழ்வியல் தேவை மற்றும் அவசரப் பணத்தேவைக்கான மாற்று ஏற்பாட்டுக்கான நுகர்வு ஆகிய இரண்டையும் வெவ்வேறு கண்ணோட்டங்களால் பார்க்கவேண்டியது அவசியம்.

அதோடு, நுகர்வோரின் பொருளாதார நிலையும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். பணக்காரர்களுக்கும், உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் தங்கத்தின் விலை உயர்வு ஒரு பெரிய பொருட்டல்ல; அவர்களால் தேவைப்படும்போது தாராளமாக வாங்க முடியும்.

ஆனால், கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கும் ஏழை மக்களுக்கும் தங்கம் வாங்குவது என்பது நினைத்தவுடன் நிறைவேற்றக்கூடிய சாதாரண விஷயமல்ல. பல மாதங்களாகத் தங்களின் அன்றாடச் செலவுகளைச் சுருக்கி, சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகே அவர்களால் அத்தியாவசியத் தேவைக்கான ஒரு சிறிய நகையைக்கூட வாங்க முடிகிறது.

ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உயரும்போதும், அது அவர்களின் கனவையும் சேமிப்பையும் கீழே தள்ளிவிட்டுத்தான் எட்டாத உயரத்திற்குச் செல்கிறது. சென்ற ஆண்டில் போல பெரும் விலைக்குச் செல்லும்போது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவும் ஆகிறது.

சாதாரணமாக முந்தைய காலங்களிலேயே சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது என்றால் அது திருமணம், காதுகுத்து போன்ற இல்ல வைபவங்களுக்குத்தான். அதுவும் பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கு ஆண்டுக் கணக்காக கால் பவுன், அரை பவுன் எனத் துளித் துளித் தங்கமாகச் சேர்த்துத்தான் மூன்று பவுன் - ஐந்து பவுன் என சேர்க்க முடியும்.

இதையும் படியுங்கள்:
தங்கம் விலை அதிரடி சரிவு: இப்போ வாங்கலாமா? அல்லது இன்னும் குறையுமா?
தங்க விலை - Gold booking Tamil

இருபதாண்டுகளுக்கு முன்புகூட தங்கத்தின் விலையை மக்கள் பவுன் கணக்கில்தான் பேசிக்கொண்டிருந்தனர். எப்போதிலிருந்து கிராம் கணக்கில் அதைப் பேச வேண்டி வந்ததோ, அப்போதிலிருந்தே தங்கம் சாமானிய மக்களின் கையிலிருந்து எட்டாத உயரத்திற்குச் சென்றுவிட்டது.

தங்க விலை
தங்க விலை

சாமானிய மக்களின் தங்கத் தேவையும் சேமிப்புச் சிக்கலும்

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆடம்பர முதலீடு அல்ல; அது அவர்களின் வாழ்வியல் தேவை மற்றும் அவசரகாலப் பாதுகாப்பு.

சுப நிகழ்ச்சிகள்: திருமணம், காதுகுத்து போன்ற குடும்ப விசேஷங்களுக்குக் குறைந்தபட்ச நகைகளாவது வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆபத்பாந்தவன்: மருத்துவச் செலவு அல்லது எதிர்பாராத பண நெருக்கடி ஏற்படும் காலங்களில், அடகு வைத்து உடனடியாகப் பணம் புரட்ட உதவும் 'ஆபத்பாந்தவனாக' தங்க நகைகள் உள்ளன.

ஆனால், அன்றாட வாழ்க்கைப் பாடுகளுக்கே பணம் போதாத சூழலில், கையில் பணத்தைச் சேமித்து வைத்துப் பிறகு நகை வாங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. கையில் பணம் இருந்தால் ஏதாவது ஒரு அவசரச் செலவுக்கு அது கரைந்துவிடும். இதனால்தான் நம்பகமான நகைக்கடைகளில் மாதத் தவணை முறையிலான நகைச்சீட்டு சேருவது சாமானிய மக்களிடையே வெகு பிரபலமாகியுள்ளது.

விலை குறையும்போது முன்பதிவு (Gold Booking) செய்வது சாத்தியமா?

கடந்த ஆண்டில் ஏற்பட்ட அதீத வரலாற்று விலை உயர்வுக்குப் பிறகு, இந்த ஆண்டின் தொடக்கத்திலும் (ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் சுமார் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை என்ற உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம், சமீபத்திய நாட்களில் ரூ.13,000 மற்றும் அதற்குச் சற்றுக் குறைவான விலையில் கிடைப்பது நுகர்வோருக்கு - குறிப்பாக சாமானியர்களுக்கு - பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

இப்படித் தங்கத்தின் விலை கணிசமாகக் குறையும் சந்தர்ப்பங்களில், "இன்றைய குறைந்த விலையில் பணத்தைக் கட்டி முன்பதிவு செய்துவிட்டு, எதிர்காலத்தில் நகை தேவைப்படும்போது அதே விலையில் வாங்கிக்கொள்ளலாமா?" என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.

இதற்கான பதில்: நிச்சயமாக முடியும். முன்னணி மற்றும் நம்பகமான நகைக்கடைகள் இதற்கெனப் பிரத்யேகத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
தங்கச் சீட்டு போட்டு ஏமாந்தவர்கள்... இந்த வழியில் உடனே பணத்தை மீட்கலாம்!
தங்க விலை - Gold booking Tamil

நகைக்கடைகள் கடைபிடிக்கும் நடைமுறைகள் என்ன?

நகை முன்பதிவுத் திட்டங்களை நகைக்கடைகள் இரண்டு முக்கிய வடிவங்களில் வழங்குகின்றன:

மொத்தத் தொகை முன்பதிவு (Advance Gold Booking): உங்களிடம் கணிசமான தொகை இருக்கும்பட்சத்தில், விலை குறைந்த நாளில் அன்றைய விலைக்கு உரிய பணத்தைக் கட்டி குறிப்பிட்ட கிராம் தங்கத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம். உதாரணமாக, ஒரு கிராம் ரூ.13,000 எனும்போது, ரூ.1,04,000 செலுத்தி 8 கிராம் (ஒரு சவரன்) தங்கத்தை உங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். 6 மாதங்கள் அல்லது 11 மாதங்களுக்குப் பிறகு தங்கம் கிராம் ரூ.15,000-க்கு உயர்ந்தாலும், நீங்கள் முன்பதிவு செய்த 8 கிராம் நகையை எந்தக் கூடுதல் விலை வித்தியாசமும் இன்றிப் பெற்றுக்கொள்ளலாம்.

மாதாந்திரத் தவணைத் திட்டம் (Gold Weight Accumulation Scheme): மொத்தமாகப் பணம் இல்லாதவர்கள் மாதாந்திரச் சீட்டு முறையில் சேரலாம். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டும் பணத்திற்கு, அந்தந்த நாளின் தங்க விலைக்கு ஏற்ப உங்கள் கணக்கில் தங்கம் (கிராம்/மில்லிகிராம் கணக்கில்) வரவு வைக்கப்படும்.

விலை குறைந்த நாட்களில் பணம் கட்டும்போது கூடுதல் மில்லிகிராம் தங்கம் கிடைக்கும். திட்ட முடிவில், மொத்தமாகச் சேர்ந்த எடைக்கு நிகரான நகையை வாங்கிக்கொள்ளலாம்.

நுகர்வோருக்கான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும்

தங்க விலைக் குறைவைச் சரியாகப் பயன்படுத்தி முன்பதிவு செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்:

காலக்கெடுவை (Validity Period) உறுதி செய்யுங்கள்: முன்பதிவு செய்த தங்கத்தை எத்தனை நாட்களுக்குள் நகையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள். பொதுவாகக் கடைகள் 3 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரை அவகாசம் தரும். அந்தக் காலக்கெடு தாண்டினால், அன்றைய சந்தை விலைக்கு மாற நேரிடலாம்.

செய்கூலி மற்றும் சேதாரம் (VA & Making Charges): முன்பதிவு செய்யும்போது தங்கத்தின் அடிப்படை விலை (Gold Rate) மட்டுமே நிலைநிறுத்தப்படும் (Lock செய்யப்படும்). நகையாக வாங்கும்போது அன்றைய நடைமுறைப்படி செய்கூலி, சேதாரம் மற்றும் மொத்தத் தொகையின் மீது (தங்கம் + செய்கூலி) 3% ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும். சில கடைகள் முன்பதிவுத் திட்டங்களுக்குச் சேதாரத்தில் தள்ளுபடி வழங்குவதும் உண்டு; அதை முன்கூட்டியே பேசி உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பணமாகத் திரும்பப் பெறும் விதிகள்: பெரும்பாலான முன்பதிவுத் திட்டங்களில் கட்டிய பணத்தைத் திரும்ப ரொக்கமாகப் பெறமுடியாது; தங்க நகையாகவோ அல்லது நாணயமாகவோ மட்டுமே பெற முடியும். இருப்பினும், சில கடைகள் தங்கள் நிபந்தனைகளின்படி திரும்பப் பெறும் வழியை அளிக்கலாம்; எனவே முன்பதிவுக்கு முன்பே அதைத் தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.

நம்பகமான நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள்: அதிகத் தள்ளுபடி அல்லது நம்பமுடியாத சலுகைகளை அறிவிக்கும் சிறிய, அங்கீகாரமற்ற கடைகளைத் தவிர்த்து, அரசு விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் பாரம்பரியமான, நம்பகமான நகைக்கடைகளில் மட்டுமே முன்பதிவு செய்யுங்கள். கட்டிய பணத்திற்கான ரசீது மற்றும் தங்கத்தின் எடை குறிப்பிடப்பட்ட ஆவணத்தை (Passbook/Receipt) பத்திரமாக வைத்திருங்கள்.

தங்கத்தின் விலை இறங்கும் தருணங்கள் சாமானிய மக்களுக்குக் கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம். கைவசம் சிறு தொகை இருந்தாலும், அதை வீணாகச் செலவழிக்காமல் இன்றைய விலையில் தங்கமாக முன்பதிவு செய்து வைப்பது, எதிர்காலத் திருமண மற்றும் அவசரத் தேவைகளுக்குப் பெரிய பொருளாதாரப் பாதுகாப்பாக அமையும்.

இதையும் படியுங்கள்:
மாதந்தோறும் தங்கச் சீட்டு போடுறீங்களா? இந்த மறைமுகக் கட்டுப்பாடுகள் தெரியாம ஏமாறாதீங்க!
தங்க விலை - Gold booking Tamil
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference: