
நல்ல வெயில் காலம். பஸ்களும், லாரிகளும், டூவீலர்களும் செல்லும் தார் சாலையில், வயதான மனிதர் ஒருவர் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். தாகம் வாட்டியதால் நா வறண்டு, தண்ணீர் எங்காவது கிடைக்குமா என தேடிப் பார்த்தார்.
சற்று தூரத்தில் ஒரு பழக்கடை கண்ணில் பட, அங்கு சென்றவர், "கொஞ்சம் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?" எனக் கேட்டார். "தண்ணீர் இல்லை, காசு இருந்தால் ஜூஸ் தருகிறேன்" என கடைக்காரர் சொன்னார். ஆனால், அந்த முதியவர், "ஐயா, என்னிடம் ஜூஸ் வாங்கும் அளவுக்குப் பணம் இல்லை. கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும், நான் போய்விடுகிறேன்" என்றார்.
அன்று கடைக்காரருக்கு வியாபாரம் சரியாக ஆகவில்லை. அந்தக் கோபத்தில் இருந்திருப்பார் போல.. "அதெல்லாம் கிடையாது! தண்ணீர் கிடையாது, போங்கள்!" என மீண்டும் விரட்டிவிட்டார்.
கிழிந்த ஆடையுடன் இருந்த ஒரு சிறுவன் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். "ஐயா, என் வீட்டிற்கு வாருங்கள்! தண்ணீர் தருகிறேன்" என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றான். அவன் வீடு சாலையோரத்தில் இருந்தது. ஒரு பந்தல் போட்டிருந்த இடத்தில், கீழே தரையில் படுத்திருந்த பெண்ணிடம், "அம்மா, இவருக்கு ரொம்ப தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்" என்றான்.
அந்தப் பெண், "நாம் பிச்சை எடுப்பவர்கள். நம்மிடம் தண்ணீர் வாங்கி குடிப்பாரா?" என்று கேட்டாள். "ஐயா, நாங்கள் இந்த ரோட்டோரம் தங்கி பிச்சை எடுத்து வருகிறோம். எனக்கு உடல்நிலை சரியில்லை. வறுமையின் காரணமாகப் பிச்சை எடுக்கிறோம். எங்களிடம் ஒரு உடைந்த அலுமினியம் குவளை மட்டுமே இருக்கிறது. அது போக ஒரு பிளாஸ்டிக் குடம் இருக்கிறது, அதற்குள் தான் தண்ணீர் இருக்கிறது. அந்தக் குவளையில் கொடுத்தால் குடிப்பீர்களா?" எனக் கேட்டாள்.
பெரியவரும், "தாராளமாய்க் குடிக்கிறேன்" என்று சொன்னவுடன், குவளையில் தண்ணீரைப் பிடித்துக் குடித்தார். "அம்மா, மிக்க நன்றி!" என்று சொல்லி, தன் சட்டைப் பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொடுத்து, "இக்காசு மூலம் உன் வாழ்க்கையே மாறி விட வாய்ப்பு உண்டு" எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.
உடனே சிறுவனும் அம்மாவும் யோசித்து, "இவர் மட்டும் காசு கொடுத்து உன் வாழ்க்கையை மாற்றிவிடும் என்று சொல்லிச் செல்கிறாரே!" என்று அன்று நாள் முழுவதும் அதையே நினைத்திருந்தனர்.
மறுநாள், அந்தப் பையன் ஒரு பழக்கடைக்குச் சென்று ஒரு ரூபாய்க்கு எலுமிச்சம்பழம் வாங்கினான். அதனை வீட்டில் வைத்திருந்த குடத்தை எடுத்துத் தண்ணீர் பிடித்து, அதில் உப்பு, எலுமிச்சம்பழம் பிழிந்து கலந்து, அதை வெளியில் கொண்டு வந்து வைத்தான். ஒரு தாளில், "தாகம் எடுப்பவர்கள் குடிக்கலாம்" என எழுதி, அக்குடத்தில் ஒட்டி வைத்தான். ஒரு அட்டையை மூடி வைத்து, அதன் மேல் ஒரு குவளையும் வைத்தான்.
அப்பகுதியில் கூலி வேலை செய்பவர்கள் நிறைய இருந்தனர். அவர்களுக்கு அந்தக் ஜூஸ் கடையில் நிறைய காசு கொடுத்துக் குடிக்க முடியாததால், சிறுவனின் வீட்டில் உள்ள குடத்தில் சில்லறை காசுகளை வெளியே வைத்துவிட்டுக் குடித்துவிட்டுச் சென்றனர்.
மதியத்திற்கு மேல் வந்து குடத்தைப் பார்த்த சிறுவன், அதன் பக்கத்தில் சில்லறைக் காசுகள் இருந்ததைக் கண்டான். அதனை எடுத்து அவன் எண்ணிப் பார்க்க, 10 ரூபாய் இருந்தது. மீண்டும் பழக்கடைக்கு வந்து எலுமிச்சம்பழம் வாங்கிப் பிழிந்து, குடத்தில் தண்ணீர் பிடித்து உப்பு போட்டு கலக்கி வைத்தான். சில்லறைக் காசுகள் நிறைய சேர்ந்தன. தினமும் இவன் செய்வதைப் பார்த்த பழக்கடைக்காரர், "நான் உன்னிடம் ஒரு சின்ன வியாபாரம் பண்ணலாமா? நான் சில பொருட்கள் வாடகைக்குத் தருகிறேன். நீ அந்தப் பொருட்களுக்கான வாடகையைத் தந்தால் போதும்!" என இரண்டு புதுக்குடங்கள், டம்ளர்கள், எலுமிச்சம்பழம், ஒரு பெஞ்ச் என கொடுத்தார். "நீ இதற்கான வாடகை தந்தால் போதும்" என்றார்.
உடனே சிறுவனும் யோசித்து, "சரி" என்றான். இப்போது பெஞ்சில் இரண்டு குடங்களில், ஒன்றில் உப்பு கலந்தும், இன்னொன்றில் சர்க்கரை கலந்தும் வைத்தான். தினமும் ஏழை மக்கள் குடித்துச் சில்லறை நிறைய சேர ஆரம்பித்தது. அவன் வாடகை கொடுத்து வர, நாளடைவில் நல்ல வளர்ச்சி அடைந்தான்.
இப்போது சிறுவன் அனைத்துப் பொருட்களையும் சொந்தமாக வாங்கி, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் வியாபாரம் செய்தான். நாட்கள் உருண்டன. இப்போது சிறுவன் பெரியவனாகி, நான்கைந்து பழக்கடைகள் சொந்தமாகவும், ஒரு வீடும் கட்டி வளர்ச்சி அடைந்தான்.
ஆனால், எப்போதும் போல ஏழைகளுக்குத் தாகம் தீர, பழைய இடத்திலும் மறக்காமல் பழ ஜூஸ் வைத்துச் சேவை செய்கிறான்.
குட்டீஸ், நம்மால்முடிந்தவரை 'முடியாது', 'இல்லை' என்ற வார்த்தைகளைச் சொல்லாமல், ஊக்கத்துடன் எந்தச் செயலையும் செய்தால் வளர்ச்சி அடையலாம்.