வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கடனை சரியாக திருப்பித் தராவிட்டால், அடமான சொத்துக்கள் வங்கிகளால் ஏலத்தில் விற்கப்படுகின்றன. அவற்றை எவ்வாறு வாங்குவது எனப் இப்பதிவில் பார்க்கலாம்.
இத்தகைய அடமான சொத்துக்களின் ஏலம் சம்பந்தமான தகவல்கள் பொதுவாக பல்வேறு இடங்களில் இருக்கும். உதாரணமாக, வங்கிகளின் இணையதளங்கள், செய்தித்தாள்கள், மேஜிக் பிரிக்ஸ் (magic bricks) போன்ற இணையதளங்கள். எனவே, இத்தகைய தகவல்களைப் பெறுவதற்கு பல இடங்களில் தேட வேண்டும்.
ஜனவரி 3, 2025 அன்று , அரசு இந்த எல்லா அடமான சொத்துக்களின் ஏலங்களையும் (வீடு, நிலம் போன்றவை) ஒரே இடத்தில் காண்பதற்கான ஏற்பாட்டினைச் செய்துள்ளது. பின்வரும் இணையதளத்தில் நீங்கள் இத்தகைய அடமானம் சார்ந்த சொத்துக்களின் ஏலங்களின் விபரங்களை ஒரே இடத்தில் காணலாம்.
https://baanknet.com/property-listing
ஆனால், இத்தகைய சொத்துக்களை வாங்குவதில் நிறைகுறைகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
நிறைகள்:
சந்தை விலையை விட குறைவு - பொதுவாக சந்தை விலையை விட இந்த சொத்துக்கள் 15% முதல் 20% வரை குறைவாக இருக்கும்.
சட்டரீதியாக பிரச்சனை இல்லை - இது வங்கிகளின் வாயிலாக விற்பனைக்கு வருவதால், சட்ட ரீதியாக சொத்தின் ஆவணங்களை வங்கிகள் சரிபார்த்த பிறகுதான், அவை விற்பனைக்கு வருகின்றன.
நல்ல அமைவிடம் - நல்ல அமைவிடங்களில் உள்ள சொத்துக்கள் விற்பனைக்கு கிடைக்கும் வாய்ப்புண்டு.
உடனே குடியேற வாய்ப்பு - வங்கிகளின் கட்டுப்பாட்டில் சொத்து இருக்கும் பட்சத்தில், சொத்தினை வாங்கியவுடனே, குடியேறுவது எளிது.
குறைகள்:
பாக்கி வரிகளுக்கு புதிய உரிமையாளர் பொறுப்பு - சொத்திற்கு ஏதேனும் வரி பாக்கி இருந்தால் (சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை), புதிய உரிமையாளர் அதனை கட்ட பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டுமாதலால், அதிக பணம் இதற்கு செலுத்த நேரலாம்.
பழைய உரிமையாளர் அல்லது குடியிருப்பவர்கள் தரும் பிரச்சனைகள் ; அடமான வீட்டில் குடியிருக்கும் நபர் வீட்டை காலி செய்ய மறுக்கலாம். வங்கிகளின் கைக்கு முழுமையாக வராத வீட்டில் இத்தகைய பிரச்சனைகள் இருக்கலாம். மேலும், வீட்டுக்கு குடி வந்த பிறகும், பழைய உரிமையாளர் பிரச்சனை தர வாய்ப்புண்டு. எதிர்காலத்தில், பழைய உரிமையாளர், தன் வீடு வங்கியால் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது என வழக்கு தொடரலாம்.
மராமத்து வேலைகள் - வீடு எனில், கட்டடம் நல்ல நிலையிலில்லை எனில், புதிய உரிமையாளர் மராமத்து வேலைகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கலாம்.
சொத்தின் வில்லங்கம் சார்ந்த விஷயங்கள் - வங்கி சொத்தினை விற்று விட்டு, தனது பணத்தைப் பெறப் பார்க்கும். சொத்தில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா என்று ஒரு வழக்கறிஞர் வாயிலாக சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏலத்தில் எடுப்பதற்கான முன்பணம் - சொத்தின் ஏலத்தில் பங்கு பெறுவதற்கு வீட்டின் மதிப்பில், 10% முதல் 15% வரை முன்பணமாக ஏலத்தில் செலுத்த வேண்டும். ஏலத்தில் வெற்றி பெற்றால், அடுத்த குறிப்பிட்ட நாட்களுக்குள் மீதப் பணத்தைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத பட்சத்தில், சொத்து மட்டுமல்ல, ஏலத்தின் முன் பணத்தையும் இழக்க நேரும். எனவே, கையில் போதிய அளவு பணமிருந்தால் மட்டும், இத்தகைய ஏலங்களில் ஈடுபடலாம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது ?
மேலே குறிப்பிட்ட வங்கிகளின் ஏல இணையதளத்தில் (பாங்க்நெட்) உங்களது ஏலத்தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.
ஏல முடிவு தேதியில், நீங்கள் ஏலத்தில் வென்றால், மீத பணத்தை செலுத்தி, சொத்தினை உங்களது பெயருக்கு வங்கியின் துணையுடன் மாற்றிக் கொள்ளலாம்.
கவனமாக இருக்க வேண்டிய அம்சங்கள்:
அந்த சொத்தினைப் பற்றி தீவிரமாக அலசி ஆராய்ந்து கொண்ட பிறகே, ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.
சொத்தினை நேரடியாக பார்க்க வேண்டும். வங்கிகளிடம் இது குறித்து கேட்டு, அதற்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
ஏலத்தில் பங்கேற்பது சம்பந்தமான விஷயங்களைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்ட பிறகே, ஏலத்தில் சொத்து வாங்குவதில் இறங்க வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விடாதே என்ற பழமொழியினை நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த சொத்து வங்கியின் கைக்கு முழுவதுமாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும். வீடு எனில், அது பூட்டப்பட்டு, யாரும் குடியிருக்காமல் இருந்தால், பின்னர் குடியேறுவது எளிதாக இருக்கும்.
சொத்தின் வரி பாக்கிகளைப் பார்க்க வேண்டும்
வீடு எனில் கட்டடத்தின் நிலையைப் பார்க்க வேண்டும்
சொத்தின் பத்திரங்களை வழக்கறிஞர் வாயிலாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும்
சொத்து வாங்குவதற்கு போதிய பணம் இருக்க வேண்டும்.
வங்கிகளில் கடன் எனில், முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
சொத்தினை வாங்கிய பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தினை வாங்கியவர் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இத்தகைய சொத்துக்களை வாங்குவதற்கு அதிக மெனக்கெடல்கள் தேவை. அத்தகைய மெனக்கெடல்கள் உங்களால் செய்ய முடியுமெனில், நீங்கள் வாங்கலாம். வாங்கிய பிறகு, ஏதேனும் பிரச்சனை வந்தாலும், அதனைச் சமாளிக்க தயாராக இருந்தால் மட்டும், வாங்க வேண்டும்.