
எந்த ஒரு முதலீட்டையும் நாம் சரியாக புரிந்து கொண்டு அதில் இறங்க வேண்டும். தவறாக புரிந்து கொண்டு அவசரப்பட்டு அதில் ஈடுபட்டால் நாம் கஷ்டத்திற்கு ஆளாக நேரலாம். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என ஒரு பிரபலமான பழமொழி தமிழில் உண்டு. எனவே முதலீட்டின் வெளித்தோற்றத்தைக் கொண்டு மட்டும் அதனை முடிவு செய்யாமல், அதனைப் பற்றி நன்கு புரிந்து கொண்ட பின்னரே, அதில் ஈடுபட வேண்டும்.
இதனைக் குறித்த ஓர் ஈசாப் கதையைப் பார்ப்போம்!
ஒரு நாய் முட்டைகள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது. அது ஒரு கடற்சிப்பியைப் பார்த்தது. அதனை முட்டை என்று எண்ணி தனது வாயை அகலமாக திறந்து அதனை விழுங்கியது. உடனே, அதன் வயிற்றில் கடுமையான வலி உண்டானது.
'வட்டமாக உள்ள எல்லாமும் முட்டையாகத் தான் இருக்கும் என கருதிய தன் முட்டாள் தனத்தினால் இந்தத் தொந்தரவை நான் அனுபவிக்க நேர்ந்தது' என்றது நாய்.
இங்கு முட்டை என்பது முதலீட்டைப் போன்றது. நாய்க்கு பசி என்ற தேவையை முட்டையால் தீர்க்க முடியும். முட்டையை நாயினால் செரித்து சத்தினைப் பெற முடியும். முட்டை போன்ற முதலீட்டினை பணமாக மாற்றுவது எளிது. கடற்சிப்பியை நாயினால் செரிக்க முடியாது. கடற்சிப்பியினால் நாய் தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியாது. கடற்சிப்பி முட்டையைப் போன்றே தோற்றமளித்தாலும், அதிலிருந்து சத்தினைப் பெறுவது கடினம். கடற்சிப்பி போன்ற முதலீடுகள், முதலீடுகள் போன்றே தோற்றமளித்தாலும் அவற்றை பணமாக மாற்றுவது கடினம். மேலும், வயிற்றில் சென்ற கடற்சிப்பி வயிற்றுக்கு வலியைக் கொடுக்கும். அதனை குடல் வழியாக வெளியே தள்ளும் வரை வயிற்று வலி தொந்தரவு இருக்கலாம். அதேபோல் தவறான முதலீடுகளில் நாம் இறங்கினால், அந்த முதலீடுகள் நமக்குத் தொந்தரவு தரலாம். குடல் கடினப்பட்டு கடற்சிப்பியை வெளியேற்றியதைப் போல், நாம் கடினப்பட்டு முதலீட்டிலிருந்து வெளியேறும் நிலை உருவாகலாம்.
முட்டையைப் போல் வட்டமாகத் தோற்றமளித்த கடற் சிப்பியை போன்ற முதலீடுகளிலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். பங்குகள் என்று எடுத்துக் கொண்டால், முட்டையைப் போல் எளிதாக பணமாக மாற்றக் கூடிய பெரிய நிறுவன பங்குகள் இருக்கும். கடற்சிப்பியைப் போல் எளிதாக பணமாக மாற்ற இயலாத சிறிய நிறுவன பங்குகளும் இருக்கும். கடற்சிப்பியைப் போன்ற பங்குகளில் நாம் முதலீடு செய்தால் நம்மால் எளிதாக பணமாக மாற்ற இயலாது. அடிப்படை அலசுதல் (Fundamental Analysis) மூலம் நிறுவனத்தினைப் புரிந்து கொண்ட பின்னரே அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும்.
கடன் பத்திரங்களை எடுத்துக் கொண்டால், கடன் பத்திரங்களின் மதிப்பீடுகளை அறிந்து கொள்ள வேண்டும். AAA, AA, A, BBB, BB, B, C, D என பல்வேறு மதிப்பீடுகள் உள்ளன. AAA என்பது அதிக பாதுகாப்பான கடன் பத்திரம். D என்பது மிகவும் அதிக பணத்தை இழக்கும் அபாயமுள்ள கடன் பத்திரம். கடன்பத்திரங்களின் மதிப்பீடுகள் கண்டு, அதற்கேற்றவாறு முதலீடு செய்யவேண்டும்.
வைப்பு நிதிகளிலும், எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தவறான வைப்பு நிதிகளில் நாம் பணத்தை முதலீடு செய்தால் நமக்கு வட்டி கிடைக்காது. முதலுக்கே மோசமாகவும் நேரலாம். நம்பகமான நிதி நிறுவனங்களில், வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். பிப்ரவரி 2025 இல், மும்பையைச் சேர்ந்த நியூ இந்தியா கோஆபரேட்டிவ் வங்கியின் முதலீட்டாளர்களின் பணமானது பாரத ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது. வங்கியினை கலைத்தபிறகு முதலீட்டாளர்களின் பணம் பற்றித் தெரியவரும். வரலாற்றைப் பார்த்தோம் என்றால் பல்வேறு நிதி மோசடிகள் நடந்துள்ளன. நெதர்லாந்து நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் டியூலிப் பூக்கள் சார்ந்த முதலீடுகளில் மக்கள் ஈடுபட்டு, டியூலிப் பூக்களின் முதலீடு வீழ்ச்சி அடைந்தபோது, நஷ்டத்தைச் சந்தித்தனர். டியூலிப் பூக்கள் என்பவை கடற்சிப்பிகளைப் போன்றவை. அவை முட்டைகளாக மக்களால் கருதப்பட்டு, முதலீடு செய்யப்பட்டு, பணமாக மாற்ற முடியாத காரணத்தினால், மக்கள் நஷ்டத்தை சந்தித்தனர்.
எனவே, நாம் முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அவற்றைப் புரிந்து கொண்டு, மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல.