அவசரத்தேவைகளுக்கு கடன் வாங்காமல் சமாளிப்பது எப்படி?

How to cope without borrowing?
How to cope without borrowing?
Published on

வசர காலத் தேவைகளுக்குக் கடன் வாங்காமல் தவிர்ப்பதற்கு அவசர கால நிதி அவசியம்.

ஏன் அவசர கால நிதி அவசியம் ?

எப்போதும் அவசர கால நிதி வைத்திருப்பது முக்கியம். அது இத்தகைய அவசரத் தேவைகளின்போது, பிறரைக் கையேந்தாமல், கடன் வாங்காமல் சமாளிக்க உதவும். குறைந்தபட்சம் 3 மாதம் முதல் 6 மாதம் அல்லது ஒரு வருடத் தேவைகளுக்கான அவசர கால நிதியினை வைத்திருப்பது நலம். அவ்வாறு அவசர கால நிதி இல்லையென்றால், அதற்கு மாதா மாதம் நிதி திட்டமிடலில் அதாவது பட்ஜெட்டில் (Budget) பணம் ஒதுக்கி, போதுமான அளவு தயார் செய்ய வேண்டும்.

நீங்கள் சொல்வது சரி சார். நான் அவசரகால நிதியைத் தயார் செய்கிறேன். ஆனால், அது வரை அவசரகாலத் தேவைகளுக்கு எவ்வாறு கடன் வாங்காமல் சமாளிக்கலாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. ஆனால், போதிய அளவு பணம் இல்லை. அதனைப் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1. அதிகமாக பணத்தைச் சம்பாதிப்பது - இதன் மூலம் அதிகமாக சம்பாதித்த பணம், அவசர காலத் தேவைகளுக்கு உதவும்.

2. இருக்கும் பணத்தைச் சிக்கனமாக வாழ்ந்து மிச்சம் பிடிப்பது - இதன் மூலம் மிச்சமாகும் பணம், அவசர காலத் தேவைகளுக்கு உதவும்.

மேலே குறிப்பிட்ட இரண்டிலும் உங்கள் முன்பு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, கடனிலிருந்து தப்பி, அவசர காலத் தேவைகளைச் சமாளிக்க முடியும். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

அதிகமாக பணத்தைச் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள்;

• வீட்டிலுள்ள அத்தியாவசிய பொருட்களைத் தவிர, மற்ற தேவையற்ற பொருட்களை விற்கப்பாருங்கள். உதாரணமாக, உங்களுடைய வீட்டிலுள்ள அந்தக் காலத்து வெண்கலப் பானை, இரும்புப் பெட்டி போன்றவற்றை விற்று பணமாக்கலாம். திறன் பேசி இருந்தால், அதனை விற்று சாதாரண கைப்பேசிக்கு மாறிக் கொள்ளலாம்.

• அலுவலகத்தில் அடுத்த மாதத்திற்கான சம்பளத்தை இப்போதே பெற முயலுங்கள். பொதுவாக அலுவலகங்களில் முன்கூட்டியே சம்பளம் (Salary advance) திட்டங்கள் இருக்கும். அதன் மூலம் பணம் பெறப் பார்க்கலாம்.

• முதலீடுகளை முன்கூட்டியே பணமாக மாற்றப் பாருங்கள். உதாரணமாக, உங்களது வைப்பு நிதியினை நடுவில் எடுக்கலாம். அதற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம். கொஞ்சம் வட்டி இழக்கலாம். அது பரவாயில்லை. கடன் இல்லாதிருப்பதே முக்கியம். பங்குகள் இருந்தால் விற்கலாம்.

• உங்களின் தொழிலாளர் சேம நல நிதி (Employee Provident Fund), பொது சேம நல நிதி (Public Provident Fund) போன்ற ஓய்வு காலத் திட்டங்களில் பணத்தை முன்கூட்டியே, பகுதி பணத்தைப் (partial withdrawal) பெறப் பாருங்கள். இவை ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்யப்பட்டவை. இவற்றில் கைவைப்பது தவறு. ஆனாலும், கடனின்றி இருப்பதென்பது முக்கியமானதாகையினால், இவற்றில் முன்கூட்டியே பகுதிப் பணம் பெறலாம். இதனை கடைசி வாய்ப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இவற்றில் கை வைப்பது தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமம்.

• வீட்டின் வாகனத்தை விற்று விட்டு, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.

• உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருந்தால், அது சார்ந்த வேலையில் பகுதி நேரத்தில் ஈடுபடுங்கள். அந்த வேலை மூலமாக, அதிக பண வரவு வரும். உதாரணமாக, உங்களுக்கு இசைக் கருவி வாசிக்க தெரிந்து, அது சம்பந்தமான தொடர்புகள் இருந்தால், இசைக் குழுவில் பகுதி நேரமாக வேலை பார்த்து பணம் சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சொந்தமாக தொழில் தொடங்கி ஜெயிக்கனுமா? இந்த வியாபார தந்திரங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
How to cope without borrowing?

• வீட்டில் வாடகை விடுவதற்கு இடமிருப்பின், வாடகைக்கு விட்டு, பணத்தைப் பெறலாம். போக்கியம் அல்லது ஒத்திக்கு விடுவதால், அதிகப் பணத்தினை உடனடியாகப் பெறமுடியும்.

• சிற்றுந்து இருந்தால், அதனை வாடகைக்கு விடலாம். அதன் மூலம், பணம் பெறலாம்.

• திருமணமானவர் என்றால், மனைவியும் வேலைக்குச் செல்ல பார்க்கலாம். அதன் மூலம், அதிக வருமானம் கிடைக்கும்.

• உங்களது தந்தை, சகோதரர், நெருங்கிய நண்பர்கள் போன்றவர்களிடம் பணம் கேட்கலாம். அவர்களிடம் உங்களது நிலைமையை விளக்கி, சீக்கிரமாக திருப்பித் தருவேன் என்ற உறுதி அளிக்கலாம். இதனை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நலம். கடன் அன்பை முறிக்கும்.

• அலுவலகத்தில் பதவி உயர்வு கேட்கலாம். அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு.

• தேவைப்பட்டால் வேலை மாறலாம். அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புண்டு.

பணத்தை சிக்கனமாக வாழ்ந்து மிச்சம் பிடிப்பதற்கான வாய்ப்புகள்;

• வீட்டின் நிதி திட்டமிடலில் உடனடியாக மாற்றம் செய்து, பணத்தை சேமிக்கப் பாருங்கள். உதாரணமாக, உங்களது நிதி திட்டமிடலில், தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்ற பல்வேறு உபரி பயன்பாடுகள் இருக்கும். அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தப் பாருங்கள். அதன் மூலம், அந்த மாதம் செலுத்த வேண்டிய தொகை மிச்சமாகும். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து மட்டுமே அடிப்படைத் தேவைகள்.

• பெரிய வாடகை வீட்டில் குடியிருந்தால், மற்றொரு சிறிய வாடகை வீட்டிற்கு மாறிக்கொள்ளலாம். வாடகைப் பணம் மிச்சமாகும்.

• வாடகை வீடு எனில், வீட்டு உரிமையாளரிடம் வாடகைப் பணத்தில் குறைவாக செலுத்த அனுமதி கேளுங்கள். அதை உங்களது முன்பணத்தில் (advance) கழித்துக்கொள்ள முடியுமா என்று பாருங்கள்.

இதையும் படியுங்கள்:
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY): ₹20 லட்சம் கடனை யார் பெறலாம்? அதன் நிபந்தனைகள் என்னென்ன?
How to cope without borrowing?

• உங்களுக்கு ஏற்கனவே, ஏதாவது கடன் இருப்பின், அந்தக் கடனை கொஞ்சம் தாமதமாக செலுத்தக் கேட்டுப் பாருங்கள் (deferring payment). உதாரணமாக, உங்களுக்கு வீட்டுக் கடன் இருந்தால், வங்கியில் இரண்டு தவணைகள் கட்ட இயலாது. பின் கட்டுவதற்கு அனுமதி வாங்கலாம்

• குழந்தைகளின் பள்ளி தவிர எந்த ஒரு அதிகப்படியான நடனம், இசை போன்ற பயிற்சி வகுப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தலாம். அதன் மூலம் பணம் சேமிக்கலாம்.

• ஏற்கனவே கடன் இருந்தால், அவற்றை ஒன்றுபடுத்தி (debt consolidation), கடன் தவணைத் தொகையினைக் குறைக்கலாம். அதன் மூலம், பணம் மிச்சமாகும்.

• முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். முதலீட்டுத் தொகையினை அவசரத் தேவைக்கு ஒதுக்கலாம்.

• எந்த ஒரு மாதாந்திர சந்தாக்களையும் நிறுத்தலாம். மாதாந்திர சந்தாக்களில் செலவாகும் பணம் மிச்சமாகும்.

• வெளியில் உணவருந்துவதை தவிர்க்கலாம். பணம் மிச்சமாகும்.

• அடிப்படை சேமிப்புக் கணக்கிற்கு மாறலாம். வங்கி இருப்புத் தொகையினைக் குறைத்துவிடலாம். அதில் 0 ரூபாயினை கூட வைத்திருக்க முடியும். கடனின்றி இருப்பதே முக்கியம்.

யோசித்துப் பார்த்தால், இன்னும் பல யோசனைகள் கிடைக்கும். மேலே குறிப்பிட்ட இரண்டின் மூலமாக, கடனினைத் தவிருங்கள். அவசர கால நிதியினை சீக்கிரமாக உருவாக்குங்கள். அதன் மூலம், நீங்கள் கடன் என்ற படுகுழியில் விழுவதைத் தவிர்க்கலாம்.

கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com