
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் உள்பட பெரும்பாலான பொதுமக்கள் மாதச் சம்பளத்திற்கு பணிபுரிபவர்கள் தான். அவசர காலங்களில் பணியாளர்களின் நிதிப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தின் படி, மாதச் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு, PF கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் சிறப்பம்சமே கூட்டு வட்டி முறையில் வாடிக்கையாளர்களுக்கு பலனிப்பதுதான். அவசரத் தேவைக்கு உதவும் PF பணத்தை வீண் மற்றும் ஆடம்பர செலவுகளுக்காக எடுத்தால், நமக்குத்தான் நஷ்டம் ஏற்படும்.
PF கணக்கில் இருப்பது நம்முடைய பணம் தானே என்று வீண் செலவுகளுக்கு இதனைப் பயன்படுத்தினால், வருங்காலத்தில் பல லட்சங்களை நீங்கள் இழப்பீர்கள். ஏனெனில் இதில் கூட்டு வட்டி முறையில் உங்கள் பணம் பல மடங்காக பெருகும். அப்படி இருக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் எடுக்கும் போது, அந்தத் தொகைக்கான கூட்டு வட்டி நமக்கு கிடைக்காமலேயே போய் விடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிவதே கடினமாக இருந்தது. ஆனால் இன்றோ ஆன்லைன் வசதியின் மூலம் ஒருசில நிமிடங்களில் அறிந்து கொள்ள முடியும். அதோடு PF பணத்தை எடுப்பதும் ஆன்லைனில் மிக எளிதாக மாறி விட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாளுக்கு நாள் PF சேவைகள் மிக எளிமையாக மாறி வருகின்றன. இதனால் PF பணத்தை வீண் செலவுகளுக்காக சிலர் எடுத்து விடுகின்றனர். இது அப்போதைக்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இம்மாதிரியான செயல்களால் நீங்கள் இழக்கப் போவது பல லட்சங்கள் என்பதை இனியாவது உணருங்கள்.
இன்னும் ஒருசில ஆண்டுகளில் PF பணத்தை ஏடிஎம் கார்டில் எடுக்கவும், யுபிஐ பரிவர்த்தனை செய்யவும் புதிய வசதி வரப் போகிறதாம். இந்த வசதி வந்து விட்டால், வாடிக்கையாளர்கள் பலரும் அடிக்கடி பணத்தை எடுத்து விடுவர். இதனால் PF கணக்கில் இருக்கும் பணம் சிறிது நாட்களிலேயே காலியாகி விடும்.
உங்களுடைய 28 வயதில் PF கணக்கில் முதலீடு மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.1 இலட்சம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். வீண் செலவுகளுக்காக இந்தத் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து காலியாக்கினால், மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டிய சூழல் ஏற்படும். குறைந்தது உங்கள் சம்பளத்தில் இருந்து 30 ஆண்டுகள் வரை PF பணம் பிடித்தம் செய்யப்படும் போது, 58 வயதில் ரூ.10 இலட்சத்தை நீங்கள் இழந்திருப்பீர்கள். ஏனெனில் அதுதான் கூட்டு வட்டியின் மகத்துவம்.
மாதந்தோறும் உங்கள் சம்பளத்தில் இருந்து 12% பணத்துடன், நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையை PF கணக்கில் வரவு வைக்கும். மொத்தமாக மாதந்தோறும் ரூ.2,350 உங்கள் கணக்கிற்கு செல்லும் போது, ஏற்கனவே இருந்த ரூ.1 லட்சத்தை எடுக்காமல் இருந்தால் 58வது வயதில் சுமார் ரூ.43.4 லட்சம் சேர்ந்திருக்கும். இதில் நீங்கள் சேமித்தது ரூ.9.46 லட்சம் தான். ஆனால் கூட்டு வட்டியால் உங்களுக்கு கூடுதலாக ரூ.33 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும்.
அந்த 1 லட்ச ரூபாயை எடுத்து விட்டால், உங்களுக்கான கூட்டு வட்டித் தொகையில் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் குறைந்து விடும். அவசரத் தேவைக்கு PF பணத்தை எடுப்பதில் தவறில்லை. ஆனால் வீண் செலவுக்காக எடுத்தால், அது வருங்காலத்தில் உங்களுக்குத் தான் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.