

மனித வாழ்க்கை மதிப்பு (Human Life Value) அல்லது மனித உயிர் மதிப்பு என்றால் என்ன? இது ஒரு மனிதனுக்கு அவர் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில் அவருக்கு சமுதாயத்தில் எவ்வளவு மதிப்பிருக்கிறது என்பதைக் குறிக்கிறதா? அல்லது அவர் சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பைக் குறிக்கிறதா? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் மனித வாழ்க்கை மதிப்பு என்பது இவை இரண்டையும் குறிப்பதல்ல. இது ஆயுள் காப்பீட்டுக்கான திட்டமிடலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோல் ஆகும். வாருங்கள் இந்த பதிவில் நாம் அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருப்பவர் என வைத்துக் கொள்ளுவோம். பொருளாதார ரீதியாக அவரைச் சார்ந்து மனைவி, குழந்தைகள், பெற்றோர் என பலர் இருப்பர்.
எதிர்பாராத விதமாக வருமானம் ஈட்டுபவர் இறந்து போனால் அவர் அந்த குடும்பத்திற்கு வழங்கிய நிதித் தேவைகளை அவர் காலமான பின்பும் பூர்த்தி செய்ய எவ்வளவு தொகைக்கு அவர் காப்பீடு (Life Insurance) எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காகப் பயன்படும் ஒரு அளவீடே மனித வாழ்க்கை மதிப்பு எனப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒருவருடைய எதிர்பாராத இழப்பினால் அவருடைய குடும்பம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருப்பதற்காக போதிய காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்ய இது உதவுகிறது.
வருமானம் ஈட்டுபவரின் வயது, அவருடைய மாத வருமானம், உயரும் வருமானம் (Increase in income), மாதச் செலவுகள், கடன் தொகை அதாவது வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன்கள், சேமிப்புகள், சார்ந்திருப்போரின் எண்ணிக்கை (Dependants), மற்றும் எதிர்கால நிதித்தேவைகள் முதலானவற்றை முக்கிய காரணிகளாகக் கொண்டு ஒருவருடைய மனித வாழ்க்கை மதிப்பானது கணக்கிடப்படுகிறது.
எதிர்பாராதவிதமாக ஒரு குடும்பத்தின் வருமானம் ஈட்டுபவர் இறந்துபோக நேரிட்டால் அதன் விளைவாக வரும் காப்பீட்டுத் தொகையானது அவரைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான நிதித் தேவைகளை போதிய அளவில் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்க வேண்டும். மனித வாழ்க்கை மதிப்பானது, இதை சரியாக திட்டமிட இது பயன்படுகிறது.
மனித வாழ்க்கை மதிப்பைக் கணக்கிடுவதற்கான ஒரு எளிய சூத்திரம் “ஓய்வூதிய வயது - தற்போதைய வயது x ஆண்டு வருமானம்” ஆகும்.
உதாரணமாக ஒருவருக்கு 40 வயதாகிறது என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய ஓய்வு பெறும் வயது 60. அவருடைய ஆண்டு வருமானம் 10 லட்சம் என வைத்துக் கொள்ளுவோம். 60 – 40 x 10,00,000 = 20,000,000 இந்த நபர் இரண்டு கோடிக்கான ஆயுள் காப்பீட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ளது ஒரு அடிப்படையான சிறிய கணக்கீடுதான். ஒரு தனி நபரின் வருமானம் மற்றும் செலவீனம் ஆகிய காரணிகள் ஒரே மாதிரியாக இருக்காது. வருடா வருடம் மாறிக்கொண்டே இருக்கும். மேலும் சூத்திரத்தின் அடிப்படையில் வரும் தொகைக்கு எல்லோராலும் ஆயுள்காப்பீட்டைச் செய்ய முடியாது. ஆனால் முடிந்த வரை மனித வாழ்க்கை மதிப்பு கணக்கீட்டின்படி வரும் அதிகபட்ச ஆயுள் காப்பீட்டுத் தொகையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகைக்கு காப்பீட்டைச் செய்து கொள்ளுவது சிறந்தது.
தனக்கு எதுவும் நடக்காது என சிலர் கவனக்குறைவாக ஆயுள்காப்பீடு செய்யாமல் இருந்து விடுவார்கள். எதுவும் நடக்காமல் இருந்தால் நல்லதுதான். மகிழ்ச்சிதான். ஆனால் மனித வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக பல விஷயங்கள் நடக்கலாம். இதை மனதில் வைத்து குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காக திட்டமிடுவது நல்லதுதானே.