
உடல்நலக் காப்பீடு (Health Insurance) என்பது மருத்துவ செலவுகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் பாதுகாக்கும் ஒரு காப்பீட்டு வகையாகும். இதில் ஒரு குறிப்பிட்ட பிரீமியம் தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மருத்துவ அவசர நிலைகள், மருத்துவமனையில் தங்கும் செலவுகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற மருத்துவ செலவுகளை ஈடு செய்ய இந்த காப்பீடு உதவுகிறது.
காப்பீட்டு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட மாதாந்திர, காலாண்டு அல்லது ஆண்டு பிரிமியம் செலுத்த இந்த பிரீமியம் தொகையை செலுத்தும் ஈடாக, மருத்துவ அவசர நிலைகள் ஏற்படும் பொழுது சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். அவசரநிலை சிகிச்சைகள் மட்டுமல்லாமல், திட்டமிடப்பட்ட சிகிச்சைகளின் செலவுகளையும் ஈடு செய்யும்.
பிரீமியம் செலுத்துதல்
பாலிசிதாரர் காப்பீட்டு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ப்ரீமியம் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிரிமியத்திற்கு ஈடாக காப்பீட்டு நிறுவனம் பாலிசிதாரருக்கு நோய்கள் அல்லது காயங்கள் காரணமாக ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு நிதி காப்பீட்டை வழங்கும்.
காப்பீடு செய்யப்பட்ட நபரின் வயது, உடல் நலம் மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் ப்ரீமியம் அமைகிறது.
உடல்நலக் காப்பீட்டின் முக்கிய நன்மைகள்
1. பணமில்லா சிகிச்சை
பல காப்பீட்டு திட்டங்கள், நெட்வொர்க் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையை வழங்குகின்றன. இதன் மூலம் சிகிச்சைக்கான கட்டணங்களை காப்பீட்டு நிறுவனம் நேரடியாக மருத்துவமனைக்கு செலுத்துகிறது. இதனால் நிதிச் சுமை என்பது ஏற்படாமல், சிறந்த மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சையை பெற முடிகிறது.
2. நிதி பாதுகாப்பு
மருத்துவ அவசர நிலைகள் நம் சேமிப்பை பாதிக்காமல் பாதுகாக்கிறது. எதிர்பாராத மருத்துவ செலவுகளின் நிதி சுமையை குறைப்பதன் மூலம் நிதி பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் தனி நபர்கள் பண பற்றாக்குறையினால் சிகிச்சையை தாமதப்படுத்தாமல் சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை பெற முடிகிறது. திட்டத்தின் பிரீமியம் மற்றும் மருத்துவமனையில் ஏற்படும் செலவுகள், மருந்துகள், சோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்ற பல மருத்துவ செலவுகளை காப்பீட்டு நிறுவனம் ஏற்கிறது.
3. ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனைகள்
பெரும்பாலான உடல்நலக் காப்பீட்டு திட்டங்கள் ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனைகளை உள்ளடக்கியுள்ளது. இது நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவுகிறது.
4. சுகாதார பராமரிப்புக்கான அணுகல்
மருத்துவமனையில் தங்குவது, மருந்துகள், மருத்துவர் கட்டணங்கள், அறுவை சிகிச்சை செலவுகள் போன்ற பல மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு நிதி உதவி அளிக்கிறது.
5. அவசர மற்றும் திட்டமிட்ட சிகிச்சைகள்
அவசர சிகிச்சையாக இருந்தாலும் சரி, திட்டமிடப்பட்ட சிகிச்சையாக இருந்தாலும் சரி, காப்பீட்டு திட்டங்கள் நமக்கு தேவையான நிதி ஆதரவை வழங்குகின்றன.
6. வரிச் சலுகைகள்
உடல்நலக் காப்பீட்டிற்கு செலுத்தும் பிரீமியங்களுக்கு, இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D ன் கீழ் வரி விலக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த விலக்குகள், பாலிசிதாரர் அவரது குடும்ப உறுப்பினர்கள் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு பொருந்தும். உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள் நம் வரிக்குரிய வருமானத்தை குறைப்பதால், நாம் செலுத்த வேண்டிய மொத்த வரியின் அளவு குறையும்.
7. மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான பாதுகாப்பு
பல திட்டங்கள் மகப்பேறு மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளை உள்ளடக்கி இளம் தம்பதிகளுக்கு உதவியாக இருக்கின்றன. இது மகப்பேறு முற்பட்ட, பிரசவ மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பை ஈடு செய்யும். மேலும் குழந்தையின் உடனடி மருத்துவ தேவைகளுக்கான கவரேஜையும் உள்ளடக்கும். குடும்ப நலக் காப்பீட்டு திட்டங்கள் பெரும்பாலும் இந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
அனைத்து உடல்நல காப்பீட்டு திட்டங்களும் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு கவரேஜை வழங்காது. எனவே, திட்டத்தை வாங்கும் முன் மகப்பேறு தொடர்பான பாதுகாப்பு உள்ளதா? என்பதை சரி பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.