

தென்கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், இந்தியா உள்பட உலகம் முழுவதும் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில், இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய், தனது வென்யூ பேஸ்லிப்ட் எஸ்.யூ.வி. காரில் புதிய ‘எச்.எக்ஸ் 5 பிளஸ்’ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கிடைக்கிறது.
ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் கார், புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, மேம்பட்ட ஸ்டைல் மற்றும் முதன்மையான அம்சங்களுடன் கடந்தாண்டின்(2025)இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது, இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை விரும்பும் வகையில் அசத்தலான அம்சங்களுன் புதிய எச்.எக்ஸ் 5 பிளஸ் வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
எச்.எக்ஸ் 5 பிளஸ் வேரியண்ட், 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. மேலும் இது 18.5 kmpl சான்றளிக்கப்பட்ட மைலேஜை கொடுக்கிறது.
அதிகபட்சமாக 83 பி.எஸ். பவரையும், 114 என்.எம். டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. புதிய எச்.எக்ஸ் 5 பிளஸ் வேரியண்ட்டில் பயனர்கள் நிம்மதியான மற்றும் வசதியான பயணத்திற்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளும் நவீன முறையில் செய்யப்பட்டுள்ளது.
ரூப் ரெயில்கள், ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், குவாட்-பீம் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், பின்பக்க சன்ஷேட்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (abs), வீல்கள், பவர் ஸ்டீயரிங், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், வாய்ஸ் கமாண்ட், ரோல் ஓவர் சென்சார், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் மற்ற கார் மாடல்களை போல் ஒத்திருந்தாலும் இதில் அதிநவீன வசதிகளை புகுத்தி இருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.
ஸ்டோரேஜ் பகுதி உடன் கூடிய முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், காரை ஓட்டுபவருக்கு வசதியாக டைனமிக் வழிகாட்டுதல்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, பின்புற வைப்பர்-வாஷர், அத்துடன் இடையூறு ஏற்பட்டால் அதனை அறிந்து செயல்படும் ஆன்டி-பிஞ்ச் வசதி உடன் கூடிய ஆட்டோ அப்-டவுன் டிரைவர் பவர் விண்டோவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அம்சங்கள் அனைத்தும்,முன்பு உயர்ரக எச்.எக்ஸ் 6 வேரியண்ட்டில் மட்டுமே கிடைத்த நிலையில்,தற்போது அறிமுகமாகி உள்ள எச்.எக்ஸ் 5 பிளஸ் மூலம், வாடிக்கையாளர்கள் இவற்றை புதிய அதிநவீன வசதிகளுடன் மிகவும் மலிவான விலையில் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.எச்.எக்ஸ் 5 பிளஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சம் முதல் தொடங்குகிறது. மேலும், எச்.எக்ஸ் 4 வேரியண்ட்டில் இப்போது டிரைவர் காரை ஓட்டுவதற்கு வசதியாக சீட் உயரத்தை சரிசெய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.இதனால் வசதியான,சௌகர்யமான பயணத்தை வாடிக்கையாளர் பெறமுடியும்.
எச்.எக்ஸ் 5 பிளஸ் காரில் சிங்கிள்-பேன் பனோரமிக் சன்ரூப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் கொண்ட ஸ்மார்ட் கீ, 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் போன்ற கூடுதல் அம்சங்களும் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக ஆறு ஏர் பேக்குகள், டிரைவர் ஏர்பேக், இ.பி.டி. உடன் ஏ.பி.எஸ்.,வைகல் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட் (VSM), ஐசோபிக்ஸ் குழந்தை இருக்கை ஆங்கர் பாயிண்ட்கள் மற்றும் காரின் வேகத்தை உணர்ந்து செயல்படும் ஆட்டோ டோர் லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பயணத்தை இனிதாக்கும்.
பயணிகள் விரும்பும் வகையில் பல்வேறு அதிநவீன சிறப்பு அம்சங்களுடன்,பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் எச்.எக்ஸ் 5 பிளஸ் கார் அனைவரும் விரும்பும் மாடலாக இருக்கும் என்பதை ஐயமில்லை.