
செப்டம்பர் 22-ல் வரப்போகும் GST குறைப்பு வாகன விற்பனையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று செய்திகளில் அதிகம் பார்க்கலாம். ஆனால் சாமானியரின் வாழ்வில் இதன் தாக்கம் எந்த அளவில் உள்ளது?
மருந்துகளின் விலை:
சில அரிய நோய்களான புற்றுநோய் (cancer), ஹீமோபிலியா (hemophilia), முதுகெலும்பு தசைச் சிதைவு (spinal muscular atrophy) போன்ற நாள்பட்ட அல்லது அரிதான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், இப்போது 0% ஜிஎஸ்டியை பெறுகின்றன. இவை அனைவருக்கும் அன்றாட கொள்முதலாக இருக்கப்போவதில்லை; ஆனால் தேவைப்படும்போது அவை முக்கியமானவை. இந்த GST வரி விலக்கு காரணமாக இதற்கான சிகிச்சை செலவுகளும் கணிசமாகக் குறைந்து அனைவராலும் உபயோகிக்க முடிவதால், இன்னும் பல உயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியும்.
பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள்:
நீண்ட கால சேமிப்புடன் இருக்ககூடிய அத்தியாவசியப் பொருட்களான UHT பால், பனீர், சாப்பிடத் தயாராக இருக்கும் ரொட்டிகள், காக்ரா (khakhra), ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் போன்றவைகளுக்கு இனிமேல் ஜிஎஸ்டி கிடையாது.
இது கிராமப்புற அல்லது பட்ஜெட் போட்டு வாழும் குறைந்த வருமானம் கொண்ட வீடுகளில் சற்று உதவிகரமாக இருக்கும். இதனால் சிலரின் ஊட்டச்சத்து குறைபாடு தடுக்கப்பட்டு அவர்களின் தினசரி வாழ்வாதாரத்தையும் ஆதரிக்கும்.
மாணவர்களுக்கான அடிப்படை பள்ளி பொருட்கள்:
நோட் புக்ஸ், பென்சில்கள், வரைபடங்கள், சுண்ணாம்பு(chalk) மற்றும் ஜாமெட்ரி பாக்ஸ் பொருட்களுக்கு, இப்போது ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. வரப்போகும் வரி குறைப்பு இதுவரை கல்வி அணுகலை பெறாதவர்களுக்கு குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள்:
அனைத்து தனிப்பட்ட சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களும் இப்போது 0% ஜிஎஸ்டியின் கீழ் வருகின்றன. இதனால் பாதுகாப்பு மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த சேவைகள் பலருக்கு நீண்ட கால நிதி பாதுகாப்பை வழங்குகின்றன; குறிப்பாக அவசர காலங்களில்.
சுகாதாரப் பொருட்கள் & அத்தியாவசியங்கள்:
சானிட்டரி நாப்கின்கள், பருத்தி துணிகள், அடிப்படை சோப்புகள் மற்றும் பல் துலக்கும் பிரஷ் போன்ற பொருட்களுக்கு இப்போது 0–5% வரி விதிக்கப்படுகிறது. இவை தினசரி பயன்பாடுகள் உடைய குறைந்த பராமரிப்பு பொருட்களாகும். இதனால் பொது சுகாதாரம் இன்னும் ஒரு படி முன்னேறலாம்; குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி சாதனங்கள்:
சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள், நடைப்பயிற்சி குச்சிகள் மற்றும் பிரெய்லி(Braille) பொருட்கள் இப்போது ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. இதனால் பலரின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் மென்மேலும் மேம்படுத்தும்.
சிறு விவசாயிகளுக்கான தளர்வுகள்:
விதைகள், உரம், அடிப்படை நீர்ப்பாசன கருவிகள் மற்றும் கரிம உரங்கள் இப்போது ஜிஎஸ்டி இல்லாதவை. இந்த பொருட்கள் குறைந்த பராமரிப்பு உடையது, சிறிய அளவிலான விவசாயத்திற்கும் முக்கியமானவை. இதனால் கிராமப்புற சமூகங்கள் இன்னும் செழிக்க உதவுகின்றன.
கட்டுமான பொருட்கள்:
2025 GST சீர்திருத்தம் சிமெண்ட் வரியை 28% இருந்து 18% ஆகக் குறைத்து; வீடு கட்டுவதைச் சற்று மலிவு ஆக்கியுள்ளது. மணல்-சுண்ணாம்பு செங்கற்கள், பீங்கான் ஓடுகள் மற்றும் கல் பதிக்கப்பட்ட பொருட்கள் இப்போது 5% GST-யின் கீழ் வருகின்றன.
மூங்கில் தரை(bamboo flooring), துகள் பலகைகள்(particle boards) போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கும் 5% வரி விதிக்கப்படுகிறது; இது பட்ஜெட் உட்புற அலங்காரங்களுக்கு ஏற்றது. பளிங்கு, கிரானைட் பொருட்கள் இப்போது 5% GST-யில் கீழ் வருகின்றன. இந்த மாற்றங்கள் நடுத்தர குடும்பங்கள் தரமான பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்; அவர்களின் கட்டுமானச் செலவுகளையும் குறைக்க உதவுகின்றன.