
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ந் தேதி டெல்லியில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுவரை 4 அடுக்குகளாக இருந்த வரி விகிதங்கள் 5 மற்றும் 18 சதவீதம் என்ற இரட்டை அடுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி மாற்றங்கள் வருகிற 22-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடியான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு மாற்றத்தால் மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்துள்ள அதேவேளையில் சில பொருட்களுக்கும், சேவைகளுக்கு வரி அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் சாமானிய மக்களிடையே பிரதிபலிக்கும் என்றே கூறப்படுகிறது.
அதன்படி பல்வேறு தரப்பினரும் விரும்பும் குயில்ட் மெத்தைகள் போன்ற பொருட்களின் விலை ரூ.2,500க்கு மேல் இருந்தால் தற்போது விதிக்கப்படும் வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குளிர்காலங்களில் பயன்படுத்தும் கம்பளிகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த பொருட்களின் விலையும் தற்போதைய விலையில் இருந்து மேலும் அதிகரிக்கும்.
அதே போல வேலைகளை பிறருக்கு அளிக்கும் ஜாப் வொர்க் சேவைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கம் தொடர்பான தொழில்நுட்ப சேவைகள், சுரங்க ஆதரவு சேவைகள், அரசு சார்ந்த பணிகளான கடல்சார் பணிகள், மண் அகழ்வு பணிகள், துணை ஒப்பந்தங்கள் என அனைத்தும் தற்போதுள்ள 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நிலக்கரி, லிக்னைட் ஆகியவை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் மக்களின் பணத்தை சூரையாடும் கேசினோ, சூதாட்டம், ரேஸ் கிளப்புகள், ஆன்லைன் விளையாட்டுகள், ஐ.பி.எல். போட்டிக்கான வரி ஆகியவை தற்போதுள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியில் இருந்து 40 சதவீதமாக இருக்கிறது.
நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் இருந்த விமானப் பயணங்களில் எகானமி அல்லாத முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணங்களுக்கு தற்போது வரை 12 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. இனிமேல் 18 சதவீதமாக வசூலிக்கப்பட உள்ளதால் விமானக் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. இனிமேல் விமான பயணம் சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும்.
அதேபோல், மோட்டார் வாகனப் பயண கட்டணங்கள் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வாடகை கார்கள் மற்றும் தனியார் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் மக்களின் பயணச் செலவு அதிகரிக்கக்கூடும். அதேபோல் சரக்கு போக்குவரத்திலும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது.
ரெயில் கன்டெய்னர் போக்குவரத்து, இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படும் சேவைகள், சரக்கு போக்குவரத்து, வாடகை வாகன சேவைகளில் - மோட்டார் வாகனங்களும், லாரி போன்ற சரக்கு வாகனங்கள் ஆகிய அனைத்தும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்க உள்ளது. இதனால் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.
இந்த ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தின் விளைவாக மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மட்டுமல்லாமல், சந்தையில் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.